கலசம் வைத்து வீட்டில் எப்படிப் பூஜிப்பது…? அதனின் பலன்கள் என்ன…?

Kalasa pooja

கலசம் வைத்து வீட்டில் எப்படிப் பூஜிப்பது…? அதனின் பலன்கள் என்ன…?

கலசம் வைக்கும் முறை:-
ஒரு பித்தளைத் தகட்டில் அந்தத் தட்டிற்குத் தகுந்தாற்போல் பச்சரிசியை நிரப்பி “ஓம்” என்று எழுதவும்.

பிறகு அந்தப் பித்தளைத் தட்டில் வைக்கும்படியாக ஒரு சொம்பை எடுத்துக் கொள்ளவும். அதைத் தட்டின் மீது வைக்கவும். அதிலே பாதி அளவு நீரை நிரப்பவும்.

சொம்பின் மீது ஐந்து மாவிலைகளை நீரிலே படாதவண்ணம் வைக்கவேண்டும். அதன் மீது ஒரு தேங்காயை வைக்க வேண்டும்.

தேங்காயை வைப்பதற்கு முன் அதைச் சுத்தமாகக் கழுவி மஞ்சள் தடவி சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

பிறகு தேங்காயைச் சொம்பின் மீது வைக்கும் பொழுது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணி அந்த நீருக்குள் போட வேண்டும்.

தேங்காயையும் நீரில் படாதவாறு வைக்க வேண்டும். பின் சொம்பின் கழுத்தில் ஒரு மஞ்சள் துண்டை நூலை வைத்துக் கட்டவும். தேங்காயின் மீது மலரைச் சாத்தவும்.

இவ்வாறு கலசம் வைத்த பின் அதற்கு முன் ஒரு சிறிய டம்ளரில் நீரும் ஒரு டம்ளரில் பச்சைப் பாலும் வைக்கவும்.

பிறகு தியானத்திற்கு எல்லோரையும் அழைத்து வந்து கலசத்திற்கு முன் அமரச் செய்து தியானிக்க வேண்டும்.

தியானிக்க வேண்டிய முறை:-
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று எல்லோரும் சேர்ந்து சொல்லித் தியானத்தை ஆரம்பிக்கவும். ஓம் ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரை எண்ணி வணங்க வேண்டும்.

கீழே உள்ளதை ஒருவர் சொல்ல மற்றவர்கள் ஏங்கித் தியானிக்க வேண்டும். ஒரு அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை தியானிக்கலாம்.

1.எங்கள் தாய் தந்தை தெய்வ சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா
2.எங்கள் தாய் தந்தையருக்கு எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா
3.எங்கள் தாய் தந்தையரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4.எங்கள் குருவின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
5.எந்த எண்ணத்தை எண்ணிக் கலசம் வைத்துள்ளோமோ அந்த எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்துடன் கலசத்தை உற்று நோக்கி எண்ணத்தைச் செலுத்தவும்.
6.கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி பூமியின் வடதுருவப் பகுதியில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் ஒன்றி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
7.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொள் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களை மூடி உடலுக்குள் செலுத்திச் சிறிது நேரம் தியானியுங்கள்.
8.பின் கண்களைத் திறந்து கலசத்தைப் பார்த்து மலரின் மணமும் மகரிஷிகளின் அருள் சக்தியும் தெய்வ குணமும் இந்தக் கலசத்திலே படர்ந்து இந்த வீட்டில் உள்ள அனைத்து உயிராத்மாக்களுக்கும் அந்தச் சக்தி கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஐந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

பின் ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லித் தியானத்தை நிறைவு செய்யுங்கள். கற்பூர தீபம் காட்டிவிட்டு கலசத்தின் முன் வைத்திருந்த நீரையும் பாலையும் எல்லோருக்கும் கொடுங்கள்.

வீட்டில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கும் பொழுது அந்தக் குழந்தைகளைத் தாய் தந்தையரைப் பாத நமஸ்காரம் செய்யச் சொல்லி
1.எங்கள் தாய் தந்தையர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.எங்கள் தாய் தந்தையரின் அருளாசி நாங்கள் பெறவேண்டும்
3.கல்வியில் சிறந்த ஞானமும் உலக ஞானமும் நாங்கள் பெறவேண்டும்
4.நாங்கள் உடல் நலம் பெற்று நற்பெயர் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற எண்ணத்தில் தாய் தந்தையரைப் பாத நமஸ்காரம் செய்ய வேண்டும்.

குழந்தைகள் பாத நமஸ்காரம் செய்யும் பொழுது தாய் தந்தையரும்
1.எங்கள் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்றுக் கல்வியில் சிறந்து நற் பெயர் பெறவேண்டும் ஈஸ்வரா
2.எங்கள் குழந்தை உடல் முழுவதும் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து மலரின் மணமும் தெய்வ குணமும் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி உலகம் போற்றும் உத்தமர்களாக வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஆசி கொடுக்க வேண்டும்.

கலசத்தினால் ஏற்படும் பலன்கள்:-
கலசத்தை வைத்து இவ்வாறு தியானிப்பதால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வீட்டில் உள்ள அனைவரும் ஆரோக்கியம் பெறுவார்கள். குடும்பத்தில் மன அமைதி கிடைக்கும்.

வீட்டிற்கு வரும் மற்றவர்களுக்கும் மலரின் நறுமணமும் தெய்வ குணமும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் நல்ல சக்திகளும் மன அமைதியும் கிடைக்கும்.

தினசரி கலசத்திற்கு முன் அமர்ந்து எல்லோரும் தியானிக்க வேண்டும். அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு பத்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்த பின் கலசத்தில் உள்ள நீரை மாற்ற வேண்டும். கலச நீர் நல்ல மணமாக இருந்தால் அதை வீட்டில் உள்ள எல்லோருக்கும் குடிக்கக் கொடுக்கலாம். மீதி நீரை வீட்டைச் சுற்றித் தெளிக்க வேண்டும். தீமையான அலைகள் நம் வீட்டிலே அணுகாது.

கலசத்தில் மீண்டும் நீரை ஊற்றி அதே தேங்காயை வைக்கவும். மாவிலைகளை மாற்றவும். இப்படி ஒவ்வொரு 48 நாள்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

ஒரு ஆறு மண்டலம் வலிமையாகச் செய்தால் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் அபரிதமாகப் பெருகும். அந்த ஒளியான அணுக்கள் உங்கள் உடலிலே பெருகியதைக் கண்ணிலேயும் பார்க்கலாம்.

 

Leave a Reply