உலகோதய ஆசை என்றால் என்ன…?

Spiritual LIFE

உலகோதய ஆசை என்றால் என்ன…?

மனிதனாகப் பிறந்து நாம் வாழும் நிலையில் அன்றாடத் தேவைகளில் நம் எண்ணத்தைச் செலுத்தி அந்தந்தச் சந்தர்ப்பங்களில் ஏற்படும் நிகழ்ச்சிகளினால் நம்முடைய சிந்தனைகள் எத்தனையோ மாறுகின்றது.

“மகிழ்ச்சியாக வாழ வேண்டும்…!” என்ற ஆசையில் தான் உணவு உட்கொள்வதிலிருந்து தொழிலுக்கோ கல்விக்கோ மற்ற எல்லா வேலைகளையும் செய்கின்றோம்.

நாம் நன்றாக இருந்தாலும் நம் குடும்பத்திலோ உறவுகளிலோ நண்பர்களுக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் அதனால் நாம் வேதனைப்படுகின்றோம். அல்லது அவர்கள் தவறு செய்தால் ஆத்திரப்படுகின்றோம்.

இதனால் நாம் நமக்காகச் செய்யும் கடமைகளிலும் அதனுடைய பாதிப்பாகின்றது. இப்படிப் பிறரிடமிருந்து வரும் உணர்வுகள் நமக்குள் மோதிய பின் அது நாம் போகும் பாதையை (எந்தப் பாதையாக இருந்தாலும்) மாற்றுகின்றது.

கேட்டால் நாம் என்ன சொல்வோம்…?

என் குடும்பத்திற்காக அல்லது என் சொந்தத்திற்காக அல்லது என் தொழிலுக்காக அல்லது என் மன திருப்திக்காக என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அதிலே மீண்டும் மீண்டும் போய்ச் சிக்கிக் கொள்வோம்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.வீட்டிற்குள் எப்படித் தினம் தினம் தூசி வருகிறதோ
2.நம் உடல் தினமும் அழுக்காகின்றதோ
3.உடைகள் அணியும் பொழுது சுத்தமாக இருந்தாலும் அணிந்த சிறிது நேரத்தில் அது எப்படி அழுக்காகின்றதோ
4.அது போல் இந்த மனித வாழ்க்கையிலும் ஒரு சிக்கல் தீர்ந்தாலும்
5.அடுத்து ஒரு சிக்கல்… அதற்கு அடுத்து ஒரு சிக்கல்…! என்று வந்து கொண்டே தான் இருக்கும்.

அவரவர்கள் வாழும் இடங்களுக்கொப்ப… வளர்த்த நிலைக்கொப்ப… சந்திக்கும் நிலைக்கொப்ப… ஏதாவது குறைகள் வந்து கொண்டே தான் இருக்கும். குறை இல்லாத மனிதர்களே கிடையாது…!

வீட்டிற்குள் வரும் தூசியைத் தூய்மைப்படுத்தத்தான் முயற்சிக்க முடியுமே தவிர தூசியே வராது தடுக்க முடியாது. உடலைத் தினம் தினம் குளித்துத் தூய்மையாக்க வேண்டுமே தவிர உடலில் அழுக்கே ஒட்டாமல் தடுக்க முடியாது,

அது போல் இந்த உலக வாழ்க்கையில் அம்மா அப்பா என்றோ… கணவன் மனைவி என்றோ… குழந்தைகள் என்றோ… நண்பர்கள் என்றோ உறவுகள் என்றோ… தொழில் என்றோ அல்லது நம் உடல் நம் மனது என்றோ…! எத்தனையோ வகைகளில் பல விதமான உணர்வுகள் எதிர்மறையாக மோதத்தான் செய்யும்.

மேலே சொன்ன எல்லோருடைய உடலும் மனதும் ஆரோக்கியமாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம். அதிலே ஏதாவது ஒன்று சரியில்லை என்றாலும் நம் அமைதி பறிபோய்விடுகிறது.

அமைதியை இழந்த பின் அந்த ஒன்றை மட்டும் தான் எண்ணிக் கொண்டிருப்போமே தவிர இதற்கு முன்னாடி நன்றாகத் தான் இருந்தோம் அதே போல்
1.அந்த நன்றாக இருந்த நல்ல சக்தியை எடுத்து
2.மீண்டும் நாம் நன்றாகவே இருப்போம்…! என்ற எண்ணம் வருவதில்லை.

ஆக நாம் போகும் நல்ல பாதையைத் தடைப்படுத்தும் நிலை வரும் பொழுதெல்லாம் நல்ல பாதையில் தொடர்ந்து போவதைக் கேள்விக் குறியாகத்தான் ஆக்குகின்றோமே தவிர
1.மீண்டும் மீண்டும் எது வந்தாலும்
2.நாம் போகும் அருள் வழியை மாற்றக் கூடாது…! என்ற தெளிவும் வைராக்கியமும் வருவதில்லை.

ஆக மொத்தம் பேருக்கும் புகழுக்கும் மற்றவர்கள் நம்மைப் பற்றி எண்ணும் எண்ணத்திற்கும் அடிமையாகி அந்த நிலையில் தான் நாம் வாழ விரும்புகின்றோம்.

தனக்காக வாழ்வதாகச் சொன்னாலும் பிறரை எண்ணித்தான் நம்முடைய வாழ்க்கையை நடத்துகின்றோம். ஆக தனக்காக நாம் வாழ்வதே இல்லை.

உயிர் நம்மை மனிதனாக உருவாக்கிய நிலையில் நாம் அடைய வேண்டிய எல்லை எது…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று என்றுமே அழியாது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் மெய் ஞானிகள்.
1.அவர்கள் தான் அருள் வாழ்க்கை என்றும்
2.உலகோதய வாழ்க்கை என்றும் உணர்த்துகின்றார்கள்.

ஏனென்றால் நாம் இந்த உலகுக்காக வாழவில்லை. உலகத்தில் தான் வாழ்கின்றோம். உலக சுகத்தை நம்ப வேண்டியதில்லை.

இந்த உலகத்தில் வாழும் பொழுது நம்மை உருவாக்கிய உயிருக்காகவும் நாம் அடுத்து அடைய வேண்டிய ஒளிச் சரீரத்திற்காகவும் வாழ்ந்தால் அது அருள் வாழ்க்கை.

அதை மறந்து வேறு எந்த நிலைக்காக எண்ணத்தைச் செலுத்தினாலும் அதன் படி சென்றாலும்.. வாழ்ந்தாலும்… அது எல்லாமே உலகோதய வாழ்க்கை தான்…!

Leave a Reply