வீணாக வம்பு செய்பவர்களிடமிருந்து நாம் விடுபட எப்படித் தியானிக்க வேண்டும்…?

Argument

வீணாக வம்பு செய்பவர்களிடமிருந்து நாம் விடுபட எப்படித் தியானிக்க வேண்டும்…? 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து விட்டு
1.நாம் இப்படித் தான் நல்லதாக வர வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பாய்ச்சி
2.எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்வதற்குத்தான் கூட்டுத் தியானங்களை அமைத்திருக்கின்றோம் (ஞானகுரு)
3.ஆகவே தியானத்தை கடைப்பிடிப்போர் அனைவருமே வாரத்தில் ஒரு நாளாவது கண்டிப்பாகக் கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.

கூட்டு தியானத்தில் எடுக்கின்ற சக்தியை வைத்துத் தான் அதிகாலை விழித்ததும் வீட்டிலே நீங்கள் தனித்து எடுத்தாலும் துருவ தியானத்தின் மூலமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற ஏதுவாக இருக்கும்.

அதற்கடுத்து உங்கள் குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யத் தியானிக்க வேண்டும்.

இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டு விடக் கூடாது. அனுதினமும் செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் எப்போது குறையைக் காணுகின்றோமோ உடனே அது நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும். “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் பிறருடைய நிலைகளை நாம குறையாக எடுத்துக் கொண்டோம் என்றாலும் கூட மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் துடைத்துக் கொண்டு
1.“நீங்கள் உண்மையை உணர்வீர்கள்…!” என்று மட்டும் சொன்னாலே போதும்.
2.வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம்… அந்தக் குறை நமக்குள் வராது.
3.அவர்கள் மீது அதிகமான வெறுப்பு உணர்வு கொண்டு ஜாஸ்தி பேச வேண்டியதில்லை.
4.சரி… எனக்கு வேண்டாம்… நீங்கள் சொன்னதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
5.நன்றாக இருப்பீர்கள்…! என்ற சொல்லிவிட்டு விலகிக் கொள்ள வேண்டும்.

நல்லதுக்காக நாம் அவர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தால் நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தோற்றுவிக்கும். அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் “என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்…! என்ற சோர்வும் வேதனையும் நிச்சயம் வரும்.

அப்பொழுது அந்த வேதனையை எடுத்தால் சிந்திக்கும் தன்மை குறைகிறது. இத்தகைய உணர்வுகளை எல்லாம் நம் உயிர் உருவாக்கிவிடும். அவர்களை நினைத்து வெறுப்பையும் வேதனையையும் நம்மை அறியாதபடியே நாம் வளர்த்துக் கொள்கிறோம்.

அந்த மாதிரி ஆகாதபடி அவர்கள் அறியாத இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த நினைவை எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்குள் வெறுப்பு வராது.

இது நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும். குருநாதர் காட்டிய வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கின்றோம் என்றால் மற்றவர்கள் மரியாதை கொடுக்கக்கூடிய அளவுக்கு நாம் வளர்ந்து காட்ட வேண்டும்.

“ஒரு தெய்வீகப் பண்புள்ளவர்கள்…!” என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படித் தோற்றுவிக்கும் நிலைகளுக்கு நாம் வளர வேண்டும். சேவை மனப்பான்மை வர வேண்டும்.

பிறருடைய தீமைகளை எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று அருள் உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிட வேண்டும்.
1.நம் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடியதாக வர வேண்டும்.
2.அந்தளவுக்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு மருந்தையோ மற்றதையோ நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தாலும் கூட அவர்களுக்கும் உதவியாக இருக்கும். கூடுமான வரையிலும் அவர்கள் நோய் நீங்கும்.

ஆனால் அதற்காக வேண்டி மருந்து குடிக்காமலே நல்லாக வேண்டும் என்பதில்லை. உடனடி நிவாரணத்திற்கு அந்த மருந்து உதவும்.
1.ஆனால் அந்த மருந்திற்கு வீரியம் ஊட்ட
2.உங்கள் வாக்கு நிச்சயம் பயன்படும்.

ஏனென்றால் ஒரு கடுமையான வேதனைப்படுவோர் உடலில் நல்ல மருந்தினைக் கொடுத்தாலும் அவரின் வேதனை உச்சகட்டம் ஆகி விட்டால் மருந்து கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளாது

அதற்காக வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்து விட்டு அந்த உணர்வுடன் மருந்தை அவரை உட்கொள்ளும்படி செய்தால் உடனடியாக அது நல்லாகும்.

என்ன இருந்தாலும் தூசியைத் துடைக்கின்ற மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து எடுத்து உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் நமது நினைவாற்றல் முழுவதும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே இருக்க வேண்டும். தீமை செய்யும் எண்ணங்களை முறித்திட வேண்டும். நீக்கிட வேண்டும். அந்த உணர்வுகள் நமக்குள் வளரக் கூடாது.

கல்யாணராமா…! அதாவது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பிறருடைய தீமைகளை அகற்றிவிட்டு தம்முடன் இணைந்து வாழும் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்த வேண்டும்.

“ஆயுள் கால மெம்பர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறை இது…”

 

Leave a Reply