அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து தியானிக்க வேண்டிய முறை…!

chakkar

அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து தியானிக்க வேண்டிய முறை…!

 

1.இந்த உபதேசத்தின் வாயிலாக அகண்ட அண்டத்துடன் உங்களை அழைத்துச் செல்கின்றோம்.
2.இந்தப் பிரபஞ்சத்தோடு மட்டுமல்ல…!
3.இரண்டாயிரம் சூரியக் குடும்பம் எடுக்கும் உணர்வுடனே உங்களை அழைத்துச் செல்கின்றோம்.

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் எனக்கு (ஞானகுரு) எப்படிக் காட்டினாரோ குரு காட்டிய அதே அருள் வழிப்படி உங்கள் உயிருக்குள் சேர்க்கப்பட்டு அந்தச் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்ற உணர்வுடன் தான் உபதேசித்து வருகின்றோம்.

அந்த அருள் உணர்வைப் பெருக்கவே அருள் ஞானச் சக்கரம் கொடுத்துள்ளோம். அந்தச் சக்கரத்தைப் பார்த்து எப்படித் தியானிக்க வேண்டும்…? என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வேறு ஒன்றும் வேண்டியதில்லை. குடும்பத்திலுள்ளோருக்கோ நண்பருக்கோ மற்ற எதுவாக இருந்தாலும் ஏதாவது சொல்ல வேண்டும் என்றால்…
1.”ஓ…ம் ஈஸ்வரா…!” என்று சொல்லி உயிரை எண்ணுங்கள்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணி
2.ஒவ்வொரு நிமிடமும் அவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்று சக்கரத்தின் முன்னாடி சொல்லுங்கள்.

அதிலிருந்து ஒளிகள் வரும். அந்த அருள் உணர்வுகள் வரும். அதை எடுத்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதற்கு அடுத்து அந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்றுபட்டு வர வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள். இந்த உணர்வு வரப்போகும் போது அவர்கள் உணர்வை மாற்றி அருள் உணர்வின் வழிப்படி அவர்களுக்கு நல்லது கிடைக்கும். ஓரளவுக்கு மாற்றமாகி உடலில் அருள் உணர்வையும் பெருக்கச் செய்யும்.

ஆனால் எது எப்படி இருந்தாலும் இந்த உடலை விட்டு எல்லோருமே போகக்கூடியவர்கள் தான்…! ஆனால் அருள் ஒளியின் உணர்வைப் பெருகச் செய்யும் போது இருளை போக்கும் அருள் வலுவை நாம் எல்லோரும் பெறுகிறோம்.

ஒருவருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் உடனே “ஈஸ்வரா…!” என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் மகரிஷிகளின் அருள் சக்தியும் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் உடலில் படர வேண்டும். அவர்கள் இரத்த நாளங்களில் படர வேண்டும். மகரிஷியின் அருள் சக்தியால அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று சொல்லிப் பழக வேண்டும்.

இதைக் கொஞ்ச நேரம் சொல்லி விட்டு கையில் ஏதாவது ஒரு பதார்த்தத்தைக் கொடுத்து “உங்கள் உடல் நன்றாகி விடும்… கவலைப்படாதீர்கள்…!” என்ற நல்ல வாக்கைப் பதிக்க வேண்டும்.

அதே போல் தொழிலுக்கோ குடும்பங்களை ஒன்று சேர்ப்பதற்கோ விவசாயத்திற்கோ மற்ற நல்ல விஷயங்கள் “எது நல்லது நடக்க வேண்டும்…!” என்று எண்ணினாலும் சக்கரத்திற்கு முன்னாடி அமர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று தியானித்தீர்கள் என்றால் அதிலிருந்து ஒளிகள் வரும்.

1.காலை துருவ தியானம் செய்யும் பொழுது சக்கரத்திற்கு முன் உட்கார்ந்து செய்தீர்கள் என்றால் அற்புதமான நிலைகள் கிடைக்கும்.
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஒளிக் கற்றைகள் உங்கள் ஈர்ப்புக்குள் வருவதைப் பார்க்கலாம்.
3.இப்படி நாம் என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் “ஆயுள் மெம்பராக” அந்த ஒளியுடன் ஒன்றிட வேண்டும்.

அதே சமயத்தில் நம்மைப் பார்க்கும் அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று அதனுடன் இணை சேர்த்தது நமக்குள் இருக்கும் பல கோடி உணர்வுகளையும் அருள் ஒளியின் உணர்வுகளாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

நம் குடும்பத்தில் உள்ளோர்… நம்மைச் சார்ந்தோர்.. உலக மக்கள் எல்லோருக்குள்ளும் அந்த அருள் ஒளி பெற வேண்டும்… இருளை அகற்றும் உணர்வுகள் பெற வேண்டும்…! என்று நாம் தியானித்தல் வேண்டும்.

அதே போல் கூட்டு குடும்ப தியானங்களைச் செய்து அந்தந்தக் குடும்பங்களிலும் அருள் ஒளி பெறவேண்டும் என்று செயல்படுத்த வேண்டும்.

ஒருவரால் முடியவில்லை…! என்றால் நாம் அனைவரும் சேர்த்து அந்தக் குடும்பங்களில் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வைப் பெறச் செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.

எங்கே குறைகளைக் கண்டாலும் அல்லது காண நேர்ந்தாலும் அந்தக் குறைகளை எண்ணாது
1.மெய்ப் பொருள் அங்கே படர வேண்டும்.
2.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்.
3.அவர்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழும் தன்மை வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

நம்முடைய வாடிக்கையாளர்கள் நம்மிடம் வாங்கிய பொருளுக்குண்டான பணத்தைச் சந்தர்ப்பத்தால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை என்றால்
1.அவருக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.
2.பொருள் தேடும் நிலைகளுக்குண்டான ஊக்கம் கிடைத்து அவருக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டும்
3.அவர் குடும்பத்தில் உள்ளோர் நலம் பெற்று நம்முடைய பணத்தைத் திரும்பக் கொடுக்கும் அந்த வலிமை பெற வேண்டும் என்று
4.இந்த உணர்வைச் சக்கரத்தின் முன்னாடி எண்ணுங்கள்.

நம்முடைய உணர்வுகள் அங்கே இயக்கும். பணமும் வரும். பகைமையாக மாற்றாது. நமக்குள் நல்ல பண்புகள் வளரும். அருள் உணர்வு நமக்குள் பெருகும். இருள் புகாத நிலையாகத் தீமைகளைத் தடுக்கும் ஆற்றல் கிடைக்கும். அந்த “அங்குசம்…!” நமக்குள் நிச்சயம் கிடைக்கும்.

அதே போல கூட்டுத் தியானங்கள் எடுத்து ஊர் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் அந்த்ச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

வெளியே சொல்லக் கூச்சம் இருக்கும். ஆனால் சக்கரத்தின் முன்னாடி நீங்கள் தாரளமாகச் சொல்லலாம். எங்கள் ஊர் நன்றாக இருக்க வேண்டும். ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்று நீங்கள் ஒவ்வொருவரும் சக்கரத்தின் முன்பு சொல்ல வேண்டும்.

அந்த உணர்வின் அலைகள் எல்லாப் பக்கமும் பரவும். நம் உடலுக்குள்ளும் இந்த உணர்வுகள் படர்ந்து இருளை மாய்க்கும். பேரொளியாக மாற்றும். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவீர்கள். அதற்குத் தான் உங்களுக்கு இந்தச் சக்கரத்தை கொடுத்தது.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக ஒளியானான்.

அந்த உணர்வை எவர் பெற்றாலும் இருளை அகற்றி ஒளித் தன்மை பெறுகிறது. தென்னாட்டிலே தோன்றிய நாம் அவர் வழியினைப் பின்பற்றி நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் தன்மையில் அறிவென்ற நிலையைக் காக்கும் உணர்வுடன் செய்வோம்.

நமக்குள் உலக உணர்வுகள் அனைத்தும் உண்டு. இந்த உயிருடன் ஒன்றி உடலை நீக்கி என்றும் ஒளி என்ற உணர்வாகி எல்லாவற்றையும் காக்கும் உணர்வாக நாம் முழு முதற் கடவுளாக ஆவோம் என்று நாம் எல்லோரும் ஒன்றாகிடல் வேண்டும்.

பல உணர்வின் மலம் தான் நம் உடலாகின்றது. பல உடலின் அந்த உணர்வின் அருள் ஒளி என்ற உணர்வின் அணுக்களானால் உணர்வின் தன்மை உயிரான இந்த நிலையாகிறது. ஒளி என்ற உணர்வின் சரீரம் பெறுகின்றது… முழுமை அடைகிறது…!

அந்த அருள் ஒளி என்ற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் வளரும் பொழுது பேரொளியாக மாறுகிறது. அந்தப் பேராற்றலை வைத்து நாம் உலகை காக்கும் நிலையும் விஞ்ஞான அறிவால் வரும் இந்த சூறாவளியோ மற்ற விஷக் கிருமிகளாக் வரும் கொடுமையான நோய்களையோ நாம் வாழும் பக்கம் வராதபடி தடுக்கலாம்.

அந்த அருள் வழிப்படி நாம் செயல்படுவோம் என்று பிரார்த்தித்து வேண்டிக் கொள்கிறேன் (ஞானகுரு).

Leave a Reply