தியானம் செய்பவர்கள் கேலி பேசினால்… வெறுப்பை ஊட்டிப் பகைமையாக்கிவிடும்

criticism

தியானம் செய்பவர்கள் கேலி பேசினால்… வெறுப்பை ஊட்டிப் பகைமையாக்கிவிடும்

 

ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வை நுகர்கிறோம். அப்போது அந்த உணர்வு என்ன செய்கிறது…? உதவி செய்யும் உணர்ச்சியை ஊட்டுகிறது. உதவி செய்கிறோம்.

ஒருவரை வெறுப்படையச் செய்ய வேண்டும்… கேலி செய்ய வேண்டும்…! என்ற எண்ணத்தை எடுக்கிறோம். அப்போது அந்த உணர்வை எடுத்துப் பேசும் போது கேலி செய்கிறோமே…! என்று முதலில் தெரியாது.

ஆனால் நேரம் ஆக ஆக இன்னும் கொஞ்சம் கேலி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். கேலி பேசி ரசிக்கச் செய்கிறது. ஆனால்
1.நண்பராக இருந்து அவரும் நல்ல எண்ணத்துடன் இருந்தார் என்றால் ஒன்றும் இல்லை.
2.ஆனால் கொஞ்சம் பகைமையாக இருக்கும் போது நண்பனைக் கேலி செய்தால் போதும்
3.உடனே “சுர்….” என்று கோபம் வரும்.

வீட்டில் பகைமையோ அல்லது இன்னொரு நண்பன் வெறுப்பாக ஊட்டிய அந்த நேரத்தில் நாம் நண்பரிடம் சென்று
1.என்னப்பா… ரொம்பவும் வாடிப் போயிருக்கின்றாய்…?
2.ஏன்…? நீ என்ன செய்தாய்…? ஏதாவது தப்பு செய்தாயாக்கும்…? என்று சொன்னால்
3.உடனே அந்தக் கோபம் வரும்.

அல்லது நண்பர் சோர்வாக இருக்கும் போது சிரித்துக் கொண்டே. நாம் ஏதாவது சொல்வோம். அந்தச் சோர்வுக்குச் சிரிப்பு ஆகாது… அதே சமயத்தில் வெறுப்புடன் இருக்கும் பொழுது இந்தச் சிரிப்பு ஆகாது.

நம்மைப் பற்றித் தெரிந்து கொண்டே இப்படிக் கிண்டல் பண்ணுகிறான் பார் என்று கோபம் வரும். ஆகவே நல்ல நண்பனை எதிரி ஆக்குவது எது…?

தமாஷாகப் பேசினால் நண்பனையே எதிரியாக்கி விடுகிறது. இதில் நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அந்த நண்பர் சோர்வாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அந்தக் குறைகளிலிருந்து அவர் எப்படி மீள வேண்டும்…? என்றும் அதற்குண்டான உபாயங்களைச் சொல்லி இப்படிச் செய்ய வேண்டும்…! என்று சொன்னால் நன்றாக இருக்கும். ஏற்றுக் கொள்ளும் பண்பும் வரும்.

கேலியாகவோ தமாஷாகவோ சொல்வதைக் காட்டிலும் இப்படிச் சொல்லி மகிழ்ச்சி அடையச் செய்யலாம். நாமும் அந்த மகிழ்ச்சியைப் பெறலாம்.

குருநாதர் காட்டிய வழியினைக் கடைப்பிடித்து நமக்குள் அந்தச் சக்தியை வளர்த்து மற்றவர்களுக்கும் அதைச் சொல்லிக் கொடுத்தாலும் கூட பிறருடைய உணர்வுகள் சந்தர்ப்பத்தால் நம்மிடம் மோதும் பொழுது என்ன நடக்கிறது…?

வெறுப்படைந்த ஒரு ஆன்மா ஒரு மனித உடலுக்குள் இருந்தால் அது என்ன செய்யும்…?
1.அது ஏற்கனவே (உடலுடன் இருக்கும் பொழுது) வெறுப்படையச் செய்தது.
2.அந்த வெறுப்பின் உணர்ச்சியையே வளர்க்கும். குடும்பத்திலும் அதையே செய்யும்.
3.எப்பொழுதும் அந்த வெறுப்பாகவே இருப்பார்கள்.

சீராகத் தியானம் செய்பவர்களைப் பார்த்ததும் என்ன சொல்வார்கள்…! எப்போது பார்த்தாலும் இவன் தொல்லை கொடுக்கிறான்… தொல்லை கொடுக்கிறான்… தொல்லை கொடுக்கிறான்…! என்று நம்மைப் பற்றிப் பகைமையாகவே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

எனக்கு இவன் ரொம்பவும் தொல்லை கொடுக்கிறான் என்று சொல்லிக் கொண்டு நம்மைப் பார்த்துப் பயந்து ஓடுவார்கள். அதுவரைக்கும் ஆவி இருப்பது அவர்களுக்குத் தெரியாது.

ஆனால் அந்த ஞானிகளின் உணர்வின் தன்மை பட்டதும் ஏன் இப்படிச் பேசுகிறார்கள்.,.? ஏன் எதிர்த்துப் பேசுகிறார்கள்…? என்று நம்மிடம் சண்டைக்கு வருவார்கள். ஏனென்றால் உடலுக்குள் இருக்கும் அந்த ஆன்மாவின் பதிவு அந்த வேலையைச் செய்யும்.

1.ஒன்றும் சொல்லாமலே இப்படிச் சண்டைக்கு வருகிறார்கள்…
2.நம்மை வெறுத்துப் பேசுகிறார்களே…! என்று தான் நாம் நினைப்போம்.
3.ஆனால் இந்த மாதிரி நேரத்தில் உடனே நாம் சுதாரித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் தவறு செய்யவில்லை.

ஆனால் நம்மைப் பார்த்தாலே அந்த உடலில் உள்ள ஆவி அதனின் உணர்வு கொண்டு நம்மைக் குற்றவாளி என்று சொல்லும். கையைப் பிடித்து இழுத்தான்… என்னைத் தள்ளி விட்டான்…! என்று எல்லாம் சொல்லும்.

இப்படிச் சொன்னால் அப்புறம் நீங்கள் அடுத்தவருக்குப் பதில் சொல்லித் தானே ஆக வேண்டும். அதிலிருந்து தப்புவது எப்படி…?

அதைக் கேட்டவுனே ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று சொல்லி புருவ மத்தியில் எண்ணி விட்டால் அந்த ஆன்மாவின் உணர்வு நமக்குள் உள் புகாது நம்மை இயக்காது…!

ஆனால் அப்படிச் செய்யாமல் விட்டு விட்டால்
1.அந்த ஆன்மாவின் உணர்வு நமக்குள் போய் அவர்கள் வழிக்கே நம்மையும் இழுத்து
2.நம்மையும் அவர்களைப் போன்றே சண்டை செய்யும் உணர்வை எடுத்து வெறுப்பாகப் பேசச் செய்யும்.

மிளகாயை வறுத்தார்கள் என்றால் அந்த மணம் காற்றிலே கலந்து வரும். அதைச் சுவாசித்தால் நாமும் காரம் காரம் என்று தான் சொல்வோம்.

அதைப் போன்று தான் அவர்களின் வெறுப்பின் உணர்வு நமக்குள் வந்த பின் அடுத்து அதையே நாம் பேசும் பொழுது அவர்களைக் கலைந்து போகச் செய்யும்.

இதைப் பார்ப்பவர்கள் ஒன்றுமில்லாமல் இவர்கள் இப்படிக் கலைந்து போவார்களா..? சும்மா அவர்கள் பயந்து ஓடுவார்களா… சொல்வார்களா..? என்று நம்மிடம் கேட்பார்கள்.

ஏனென்றால் ஆவியின் நிலைகள் இருந்தால் அவனுக்கு தெரியாது. சில குடும்பங்களில் இது எல்லாம் உண்டு. குடும்பத்தில் மூதாதையர்கள் வெறுப்பின் நிலைகள் கொண்டு இக்கட்டாகும் பொழுது இந்த மாதிரிச் சாப நிலைகள் விடுவார்கள்.
1.சாப நிலைகள் வரும் பொழுது நல்லதைப் பேசவிடாது தடைப்படுத்தும்.
2.நல்லதைப் பேசவிடாது தடுக்கும் சமயம் அந்த சாப அலைகள் நம்மை குற்றவாளியாகச் சொல்லும் தன்மைதான் வரும்.

நம்மைப் பார்த்ததுமே வெடுக்… என்று சில நேரங்களில் விலகிச் செல்வார்கள். அப்பொழுது யார் இயக்குவது..? நுகர்ந்த உணர்வுகள் தான் இப்படி இயக்குகிறது.

சில குடும்பங்களில் இப்படியெல்லாம் வரும். நல்லதை இயக்கவிடாது. ஆனால் அதற்குத்தக்க உணர்வுகளை மாற்றிக் கொண்டே போகும். இதைப் போன்ற நிலைகளை அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்.

குறைந்தது மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து இந்த மாதிரி உணர்வுகள் எல்லாம் நம்மை எப்படி இயக்குகிறது என்று பிச்சைக்காரன் மாதிரியே ரோட்டில் உட்கார்ந்து அறிந்துணர்ந்த அந்த உண்மைகளைத்தான் உங்களிடம் சொல்கிறேன் (ஞானகுரு).

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இதை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளிலிருந்தும் எத்தனையோ பகைமைகளிலிருந்தும் விடுபட வேண்டும். அதற்கே இதை உணர்த்துகின்றோம்.

Leave a Reply