தியானத்தின் மூலம் கிடைக்கும் “மன பலம்”

Meditationg time

தியானத்தின் மூலம் கிடைக்கும் “மன பலம்” 

 

நாம் பரிவு பண்பு அன்பு கொண்டவர்களாக இருக்கிறோம். ஒருவர் “ஐயா பசிக்கிறதே…! என்று கேட்கிறார். அந்த வேதனையான உணர்வை நாம் நுகர்கிறோம். இரக்க உணர்வு கொண்டு அவருக்கு உதவியும் செய்கிறோம்.

அவர் எந்த வேதனையிலிருந்து அந்த சோகக் குரலில வருகிறாரோ அந்தச் சோக உணர்ச்சியைத் தூண்டும் அணுவாக நமக்குள் விளைந்து விடும். இது சிவமாகின்றது. (சிவம் என்றால் உடல்)

அதே சமயத்தில் இன்னொரு பக்கம் ஒருவர் கோபமாக மற்றொருவரை உதைக்க வேண்டும் என்று கோபமாகப் பேசுகின்றார். கண்ணில் பார்க்கிறோம். அப்பொழுது அந்தக் கோப உணர்ச்சிகள் ஓ…ம் நமச்சிவாய…! என்று இது நம் உடலில் ஆகிறது.

அந்த உணர்வுகள் நமக்குள் வந்த பின் குறை காணக் கூடிய நிலையாகிவிடுகிறது. அதே உணர்வுடன் வந்ததும் வீட்டில் உள்ள நம் குழந்தையை உதைக்க ஆரம்பித்து விடுகின்றோம். இந்த உணர்வுகள் நமக்குள் சிவமாகின்றது. இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் உடலாகிக் கொண்டேயிருக்கிறது.

வேதனைப்படுகிறான்…! என்ற நிலையில் உதவி செய்தாலும் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும…? ஈஸ்வரா… என்று நம் உயிரிடம் வேண்ட வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.அவன் வேதனைப்பட்ட உணர்வை இதனுடன் சேர்த்துத் தணிக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அணுவாக மாற்ற வேண்டும்.
3.அதை நம் உடலாக்க (சிவமாக்க) வேண்டும்.

இப்போது சொல்வது அர்த்தம் ஆகின்றதல்லவா…? அடுத்து நம் நினைவு எங்கே இருக்க வேண்டும்…?

யார் வேதனைப்பட்டார்களோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். துன்பத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று இந்த உணர்வின் ஒளியைப் பரப்பி விட வேண்டும்.

கஷ்டப்படுகிறான் என்ற நிலையில் அவனுக்குச் சாப்பாடோ பணமோ கொடுத்தாலும் அது எவ்வளவு நேரத்திற்கு இருக்கும்….? அன்றைக்குத் தான் சரியாகும். அடுத்தாற்போல நீங்கள் நிவர்த்தி செய்ய முடியுமா…? முடியாது…!

ஆகவே அவனுடைய துன்பத்தின் உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுத்தல் வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீ பெற வேண்டும்.
2.உன்னுடைய எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டும்
3.நீ நன்றாக இருப்பாய்…! என்ற இந்த உணர்வை வித்தாக அவனுக்குள் போட்டு விட்டு விட வேண்டும்.

அதை எண்ணினால் அவனுக்குக் கிடைக்கும். எண்ணவில்லை என்றால் கிடைக்கவில்லை. ஆனால் இந்த வித்தை நீங்கள் அங்கே ஊன்ற வேண்டும்.

இதே மாதிரி நண்பர்கள் நோயாக இருக்கிறார்கள். பார்த்தவுடனே அவர்கள் நோயைப் பற்றி அறிந்து கொள்ள விசாரிக்கின்றீர்கள். அந்த நோயை விசாரிக்க விசாரிக்க உங்கள் உயிரிலே அந்த உணர்ச்சிகள் பட்டவுடனே சோர்வு அடைந்து விடுகின்றீர்கள்.

சோர்வடைந்தவுடனே சோர்வடையச் செய்யும் அந்த அணுவாக உங்களுக்குள் விளைகிறது. அந்த நண்பரின் உடலில் விளைந்த உணர்வுகள் அவன் எத்தனை வேதனைப்பட்டானோ அதே சத்தை எடுத்து மீண்டும் நமக்குள் விளைய தொடங்கி விடும்.

அப்படியானால் நோயைப் பற்றிக் கேள்விப்பட்டவுடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?

“ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும். இரண்டு நிமிடமாவது இப்படிச் செய்ய வேண்டும்.

1.அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நண்பன் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.மகரிஷியின் அருள் சக்தியால் அவன் நலமாக வேண்டும் என்று சொல்லி விட்டு
3.இதை விட்டு விட வேண்டும்.
4.இப்படிச் செய்யப்படும் போது இந்த உணர்வு கலந்து வலிமை பெற்ற உணர்வுகள் உங்களுக்குள் சேரும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் எடுப்பதற்குச் சக்தியைக் கொடுக்கிறேன் (ஞானகுரு) இந்த உபதேசத்தின் மூலமாக…!

திட்டியவர்களைத் திருப்பி எண்ணும் போது பதட்டமும் கோபமும் வருகிறது அல்லவா…! அதே மாதிரித்தான் அந்த அருள் ஞானத்தை நீங்கள் பெறக்கூடிய தகுதியையைத்தான் பதிவாக்குகிறேன்.

மீண்டும் நீங்கள் நினைவாக்கும் பொழுது உங்கள் கண்ணுக்கு வந்து அந்த உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்க முடியும். அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி எடுத்துக் கலந்து பழக வேண்டும். இப்படிக் கலந்து பழகினால் தான் தீமைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் அடக்க முடியும்.

1.ஆனால் நோயாளியைப் பார்த்து எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு
2.அப்புறம் வீட்டிற்கு வந்து எல்லாம் நல்லதாக வேண்டும் என்று நினைத்தால்
3.நோயைப் பற்றிக் கேட்டறிந்தது உடலுக்குள் முதலில் அணுவாகிறது.
4.இரண்டாவது தடவை இதை மாற்றிக் கொண்டு போவதற்கு ரொம்ப சிரமம்.

ஏனென்றால் தன் நண்பன் நோயால் வாடுகிறான் என்று அதைப் பற்றுடன் பற்றும் போது தவறி உள்ளே (உடலுக்குள்) போய்விட்டது.
1.உடலுக்குள் போனதைக் குறைந்த பட்சம் அது அணுவாக உருவாவதற்கு முன்னாடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு நிமிடமாவது எடுத்து உடலுக்குள் பாய்ச்சி விட வேண்டும்.
3.இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வந்து விடுங்கள். தீமைகள் வளராது.

ஏனென்றால் ஒரு செடி வளரும் பருவத்தில் அந்தச் செடியோடு உரத்தை இணைத்து விட்டோம் என்றால் நன்றாக இருக்கும். ஆகவே தீமையின் உணர்வுகள் நமக்குள் வளராது அப்போதைக்கப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.

இது தான் வாழ்க்கையே தியானம் என்பது.

Leave a Reply