வியாபாரத்தைச் சீராக்கத் தியானிக்க வேண்டிய முறை

flower-meditation

வியாபாரத்தைச் சீராக்கத் தியானிக்க வேண்டிய முறை 

 

மிளகாயைக் குழம்பில் போடுறோம். அதிலே அளவுடன் வைக்கப்படும் போது சாப்பிடக் கூடிய நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அதிகமாகப் போட்டு விட்டால் சுவையைக் கெடுத்து விடுகின்றது. எரிச்சல் வருகின்றது.

இதைப்போல தான் நம் வாழ்க்கையில் நமக்குள் வரும் கார உணர்ச்சியோ வெறுப்பு உணர்ச்சியோ வேதனை உணர்ச்சியோ இவை அனைத்தும் நம் நல்ல குணங்களின் வலுவை இழக்கச் செய்து நல்ல உணர்வுகளை வளர்க்கும் தன்மையைத் தடைப்படுத்தும் சக்தியாக வந்துவிடுகின்றது.

ஆனால் உங்கள் வாழ்க்கையில் சங்கடத்தையோ கஷ்டங்களையோ பார்க்காமல் இருக்க முடியாது. அதைப் பற்றிப் பேசாமலும் இருக்க முடியாது.

எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் காசைக் கொடுத்த பின் நான்கு தரம் உங்களை அலைய வைத்தவுடனே என்ன செய்வீர்கள்…? இப்படிச் செய்கிறானே…! என்ற வேதனை தன்னாலே வரும்.
1.அந்த விஷத்தைச் சுவாசித்துத் தான் ஆக வேண்டும்.
2.விஷம் இல்லாது எதுவுமே இயங்குவது இல்லை.

வேதனை என்ற உணர்வுகள் தூண்டப்படும் போது நாம் நல்ல குணங்களில் விஷம் கலந்து விட்டால் இது சோர்வடையத் தொடங்கி விடுகின்றது.

அப்போது அது சோர்வடையாமல் தடுக்க வேண்டும் என்றால் இந்த விஷத்தை ஒடுக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்க வேண்டும்.

வியாபாரத்தில் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்று சொன்னால் அடுத்த நிமிடமே “ஈஸ்வரா…!” என்று தன் உயிரை நினைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று ஒரு நிமிடம் உடல் முழுவதும் அந்தச் சக்திகளைச் செலுத்திப் பழக வேண்டும்.

ஒரு நிமிடம் இப்படித் தியானித்து விட்டு அவரைப் பார்த்து… “பரவாயில்லை… அடுத்து உங்களுக்கு வருமானம் வரும். நீங்கள் நிச்சயமாகக் கொடுப்பீர்கள். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது என்று இந்த உணர்வைச் சொல்லி விட்டு வந்து விடுங்கள்.

இந்த உணர்வுடன் நாம் சொன்னவுடனே அவருக்கு காசு வரத் தொடங்கும். அடுத்து நம்மைப் பார்த்ததும் வாங்கிய பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற அந்த எண்ணங்கள் வரும்

ஆனால் அப்படிச் செய்யாமல் சொன்னபடி பணத்தைத் திரும்பத் தரமாட்டேன் என்கிறான்…! இவனை என்ன செய்யலாம்…? என்ற நிலையில் வெறுப்புடன் அவரிடம் பேசிவிட்டு வந்தீர்கள் என்றால் அந்த வெறுப்பான அலைகளால் அடுத்து அவர் வியாபாரமும் மந்தமாகும். காசு தரக் கஷ்டமாக இருக்கும்.

நாம் இங்கிருந்து கடைக்கு வசூலுக்குப் போகலாம் என்று நினைத்தோம். யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று நம்முடைய வெறுப்பு அங்கே போய்விடும் முன்னாடியே…!

1.அங்கே ஏற்கனவே கசமுசா ஆகி இருக்கும்.
2.நாளைக்குப் போக வேண்டும் என்று நினைப்பீர்கள்.
3.ஆனால் இன்றிலிருந்தே அங்கே வியாபாரம் மந்தமாக இருக்கும்.
4.இது எல்லாம் இபற்கையினுடைய செயல்.

அப்போது நாம் இங்கே போனவுடனே நம்மைப் பார்த்தாலே அவருடைய எண்ணங்கள் எப்படி வரும்….? கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால்
1.காசு வரவில்லையே… எப்படிக் கொடுக்கிறது…? என்ற திகட்டல் இருக்கும்.
2.அவரும் வேதனைப்படுவார். இந்த வேதனையால் அவர் தொழிலும் கெடும்.
3.நாம் கொடுத்த பணமும் விரையமாகும். பொருளும் வருவது தடையாகின்றது.
4.ஆகவே அவர் நன்றாக இருந்தால் தான் நமக்கு அந்தப் பணம் வரும்.

அப்போது அந்தச் சந்தர்ப்பம் அவரால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. உடனே முதலில் சொன்ன மாதிரி “ஈஸ்வரா…! என்று கொஞ்ச நேரம் நின்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்.

இந்த வாடிக்கையாளரும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று அவர் நலம் பெற வேண்டும். அவர் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும். அவர் தொழில் வளம் பெற வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து தியானியுங்கள்.

தியானித்த பின் அவரிடம் இனி உங்கள் வியாபாரம் நன்றாக இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பாக்கி எல்லாம் சீக்கிரமாக வரும். எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுப்பீர்கள் என்று இந்த வாக்கைச் சொல்லி விட்டு வாருங்கள். நம்மைத் தேடி வந்து பணத்தைக் கொடுப்பார்கள். செய்து பாருங்கள்.

அதே மாதிரி உங்கள் கடையில் வியாபாரம் செய்யும் பொழுது துருவ நட்சத்திரத்தை எண்ணி ஒரு ஐந்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்து விட்டு என்னிடம் சரக்கு வாங்குகிறவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து ஓரளவிற்கு அவர்கள் மனதிற்குத் தெரிகிற மாதிரி ஆசீர்வாதம் செய்து சரக்கைக் கொடுத்துப் பாருங்கள். அவர்களுக்கு ஒரு பெருமிதமாக இருக்கும்.

ஒரு துணி வியாபாரமே நீங்கள் செய்தாலும் இந்த உணர்வைப் பரப்பும் போது அந்தத் துணிகளில் நாம் பாய்ச்சும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் படரும்.

அடுத்தாற்போல் வேறு எத்தனை துணியைப் போட்டாலும் கூட இந்தத் துணியை தான் கேட்பார்கள். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். அப்போது நம்மிடம் தான் சரக்கு வாங்குவார்கள்.

தொழில் செய்கிற இடங்கள் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அங்கே நல்ல மன பலமும் ஒரு தெம்பும் வர வேண்டும். அங்கே உற்பத்தி செய்ய கூடிய பொருள்கள் எல்லாம் தெளிவாக இருக்க வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானித்து விட்டு
1.எல்லாப் பொருள்களின் மீதும் நம் பார்வையைச் செலுத்திப் பழக வேண்டும்.
2.இப்படிச் செய்யச் செய்ய நம் உடலில் ஒவ்வொரு நிமிடமும் அந்த உயர்ந்த சக்தி வளர்ந்து கொண்டே இருக்கும்.

ஆகவே தொழில் செய்கிறோம் என்றால் இது வாழ்க்கையே தியானம் ஆகின்றது. நமக்குள் இப்படிச் சக்திகளைக் கூட்டிப் பழகிக் கொள்ள வேண்டும்.

Leave a Reply