நன்றாகப் பழகினாலும் நண்பர்களுக்குள் எப்படிக் கடுமையான பகைமை வருகின்றது…?

positive-energy-blog

நன்றாகப் பழகினாலும் நண்பர்களுக்குள் எப்படிக் கடுமையான பகைமை வருகின்றது…?

சகஜ வாழ்க்கையில் நண்பர் என்ற நிலைகள் கொண்டு நாம் ஒருவருடன் நெருங்கிப் பழகிவிட்டால் அவர் சில தவறுகள் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்கின்றோம்.

அந்தத் தவறை எளிய முறையில் ஏம்ப்பா…! இந்த மாதிரி செய்கிறாய்…? என்று லேசாகத்தான் சொல்கின்றோம். இப்படிச் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மற்ற காரியங்களில் “தான் எதிர்பார்த்தது நடக்கவில்லை…!” என்றால் என்ன நடக்கின்றது…?

1.இவ்வளவு காலம் என் நண்பன் அவன் எத்தனையோ தவறுகளைச் செய்தான்.
2.அதையெல்லாம் மறைத்து அவனுக்கு எல்லா உதவிகளையும் நன்மைகளையும் நான் செய்தேன்.
3.ஆனால் இவ்வளவு உதவிகளையும் பெற்ற அந்த நண்பன் இன்று நான் எதிர்பார்த்தபடி வராமல் அவன் பெரிய தவறு செய்கின்றான்.
4.அதை எப்படிக் கேட்காமல் இருப்பது…! என்ற நிலையில் நண்பனிடம் சென்று
5.“இது வேண்டாம்ப்பா… பெரிய தவறு…!” என்று சொல்கிறோம்.

அப்பொழுது அந்த நண்பனுக்குள் என்ன நடக்கின்றது…?

“இவன் என்னமோ பெரிய யோக்கியன்…!” மாதிரிப் பேசுகின்றான். என்னைப் பார்த்து இன்றைக்குத் தவறு என்று சுட்டிக் காட்ட ஆரம்பித்து விட்டான்…! என்ற இந்த உணர்வுகள் மோதலில் முடிந்து பகைமையாகி விடுகின்றது.

அந்தப் பகைமையின் தன்மையை வளர்க்கும் பொழுது பகைமையான அணுக்கள் உடலுக்குள் புகுந்து அதனால் போர் முறையே நமக்குள் வருகின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கும் நண்பனாக வளர்த்துக் கொண்ட குணத்திற்கும் அதே சமயம் சந்தர்ப்பத்தில் உருவான அந்தப் பகைமையான அணுக்களுக்கும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகி மனக் கலக்கமாகி வேதனையே விளைகின்றது.

இப்படிப்பட்ட நிலை வரும் போது தன்னை அறியாமலேயே உடல் சோர்வடையத் தொடங்குகிறது. சோர்வடைந்த பின் நாம் நல்லதைச் சிந்திக்க முடியாத நிலைகள் ஆகி விடுன்றது.

சிந்திக்க முடியவில்லை என்றால் கோப உணர்ச்சிகள் தூண்டப்பட்டு என்ன பொருள் என்ற நிலையைத் தன்னால் (நல்ல தரத்தை) காண முடியாதபடி செய்து விடுகின்றது.

1.காண முடியாதபடி… அதைப் பெறுவதற்குத் தகுதி இல்லை என்று எண்ணினாலும்
2.அதை எப்படியும் தான் பெற வேண்டும் என்ற உணர்வுகளை மீண்டும் மீண்டும் ஊட்டும் பொழுது
3.தீமையின் விளைவுகள் அதிகமாக விளைந்து நம்மை அறியாமலேயே பகைமை உணர்வுகள் வளர்ந்தபின்
4.இந்த மனித உணர்வுகளையே உருக்குலையச் செய்து விடுகின்றது.
5.எந்த மனிதனைக் கண்டாலும் நம்பிக்கை இல்லாத நிலையாக உருவாக்கி விடுகின்றது.
6.அனைவரையும் பகைமையாக்கி “எல்லோரையும் பகைவர்கள்…!” என்று வெறுப்பின் உணர்வுகளை வளர்க்கச் செய்கின்றது.

இந்த வெறுப்பின் உச்சகட்டம் உடலிலே விளையப்படும் போது கடும் நோயாகி இதே மனித உடலில் வெறுக்கும் உணர்வுகளை வளர்த்து மனிதனல்லாத உருவாக அடுத்து உருவாக்கி விடுகின்றது.

நாம் எதை எண்ணுகின்றோமோ…! அதன் அடிப்படையில்
1.நம் உயிரின் இயக்கத் தொடர் நம்மை எப்படி எல்லாம் உருவாக்குகின்றது…?
2.நம் உருவை எப்படி மாற்றுகின்றது…? என்ற நிலையைத்தான்
3.கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

ஆகவே நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் வரும் பகைமைகளை அகற்ற வேண்டும் என்றால் அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அடிக்கடி நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்தியே ஆக வேண்டும்.

Leave a Reply