நான் படித்துப் பேசவில்லை…! அனுபவத்தினால் தான் பேசுகின்றேன்…!

astral-path-and-way

நான் படித்துப் பேசவில்லை…! அனுபவத்தினால் தான் பேசுகின்றேன்…!

 

உதாரணமாக அன்று அருணகிரிநாதரின் சகோதரி தனக்குள் உயர்ந்த ஒளியின் தன்மையை வளர்த்துக் கொண்டது. காரணம் அருணகிரி பல தவறுகள் செய்தாலும் அதிலிருந்து அவர் எப்படியும் விடுபட வேண்டும் விடுபடச் செய்ய வேண்டும் என்ற அந்த உணர்வின் தன்மையையே எண்ணித் தனக்குள் வளர்த்துக் கொண்டது.

பின் எல்லை கடந்த தவறின் விளைவு வரும் பொழுது உடலை விட்டுப் பிரியும் அருணகிரியின் சகோதரி சகோதரன் மேல் உள்ள பாசத்தால் அவர் உடலுக்குள் சென்று தான் வளர்த்துக் கொண்ட மெய் உணர்வை அங்கே இயக்கியது.
1.மெய் ஞானிகளின் உணர்வுகள் அருணகிரிநாதரின் உடலில் உள்ள இரத்தங்களில் சுழன்று வரும்போது
2.தவறின் இயல்புகளிலிருந்து அவரை மீளச் செய்து
3.அவர் உடலில் இருந்து ரோகத்தையும் நீக்கிடும் சக்தியாக இயக்கியது.
4.பின் உயர்ந்த தத்துவங்களையும் பாடல்களாகப் பாடும் படிச் செய்தது

பல தவறுகள் செய்த அருணகிரிக்கு அப்படிப்பட்ட ஞானம் வந்ததற்குக் காரணமே அவருடைய சகோதரி எடுத்துக் கொண்ட அந்த மெய் உணர்வுகள் தான். அந்த உணர்வுகள் தான் அவர் உடலுக்குள் இயக்கப்பட்டது.

அதைப் போன்று தான் நானும் (ஞானகுரு) ஒரு படிக்காத மூடன் தான். மெய் ஞானத்தைப் பற்றிப் பேசுகின்றேன் என்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் உடலுடன் இருக்கப்படும் போது அவருக்குள் கற்றுணர்ந்த உயர்ந்த உணர்வை எனக்குள் பதியச் செய்தார்.

அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து எடுக்கும்படி சொன்னார். அதனின் துணை கொண்டு அதை எடுத்தேன். மெய் உணர்வின் வளர்ச்சியில் அந்த நன்மைகளைப் பெற்றேன்.

எனக்குள் இருக்கும் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு என்று குருநாதர் உணர்த்தினார்.
1.ஒவ்வொரு உணர்வும் உன்னை எவ்வாறு இயக்குகிறது…? என்று நீ அறிந்து பார் என்று
2.தனித்துத் தனித்துத் தனித்துத் தனித்துப் பிரித்துக் காட்டினார்.

நீ சுவாசிக்கும் ஒவ்வொரு உணர்வின் தன்மையும் நுகரும் ஆற்றலாக உனக்குள் எப்படி வருகின்றது…? நுகர்ந்தபின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீ எடுத்துக் கொண்ட அந்தந்த உணர்வின் குணங்கள் உனக்குள் எவ்வாறு ஜீவன் பெறுகின்றது…?

அதனின் உணர்வாக உன்னை எப்படி இயக்குகின்றது..? என்ற இந்தத் தெளிந்த மனதை குருநாதர் “அவர் உணர்வின் வலு கொண்டு…” எனக்குள் அனுபவமாகக் கொடுத்தார்.

இவ்வாறு இயற்கையின் உணர்வின் அளவை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய உணர்வு கொண்டு அதை அறியும் ஆற்றலைப் பெற்றேன்… ஆகவே
1.நான் படித்துப் பேசவில்லை.
2.அனுபவப்பட்டுப் பேசுகின்றேன்…!

இதைப் போன்று நீங்களும் உங்கள் வாழ்க்கையில் இன்னல்கள் வரும் சமயங்களில் எல்லாம் அந்த மெய் ஞானிகளின் உணர்வை எடுத்துப் பழகிக் கொண்டால் உங்களுக்குள் அருள் ஞானம் பெருகும். மெய் ஞானம் வளரும். “தீமையற்ற உலகமாக உங்களுக்குள் சிருஷ்டிக்க முடியும்…!

செய்து பாருங்கள்…! உங்கள் அனுபவம் ஞான சக்தியாக வரும்…!

Leave a Reply