உடலை விட்டுப் பிரிகின்றோம் என்று சொன்னாலும் எங்கே போகிறோம்…? என்று தெரிகிறதா…!

Full moon meditation

உடலை விட்டுப் பிரிகின்றோம் என்று சொன்னாலும் எங்கே போகிறோம்…? என்று தெரிகிறதா…!

மனிதன் இறந்தபின் இன்னொரு உடலுக்குள் போய்த் தான் மனிதனாகப் பிறக்க வேண்டும்.

மனிதனாக வாழும்போது கோபக்காரனாக இருந்தால் இறந்த பிற்பாடு எங்கே போவோம். அதே போல ஒரு கோபக்காரனுடைய உணர்வுகள் உடலுடன் இருந்தால் அந்த உடலுக்குள் நம் உயிரான்மா சேரும்.

ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பான எண்ணங்களை எண்ணி “எனக்கு இப்படித் துரோகம் செய்தான்… பாவி…!” என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.
1.சாகும் போது அதே எண்ணத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்றால்
2.அடுத்து அதே உணர்வுடன் இருக்கக்கூடிய உடலுக்குள் வந்து விடும்.

எந்த வெறுப்பின் உணர்வு நமக்குள் வளர்ந்ததோ அதே போன்ற இன்னொரு உடலுக்குள் போய் அங்கே வெறுப்பை ஊட்டிப் பல தீய விளைவுகளை உண்டாக்கச் செய்யும்.

கடைசியில் வேதனையான உணர்வைச் சுவாசித்து அந்த உடலுக்குள்ளும் வேதனையை உருவாக்கி மிகவும் நஞ்சு கொண்ட உயிரான்மாவாகத்தான் மீண்டும் வெளியிலே வர நேரும்.

இதைப் போல நாம் பல உடலுக்குள் சென்றாலும் மனிதனால் இயக்கப்படக்கூடிய இந்தச் சக்தி பிறருடைய உடலுக்குள் சென்று தீய விளைவுகளை உருவாக்கி விட்டு சிந்தனையற்ற நிலைகளில் வெளியில் வந்து
1.ஆடாகவோ மாடாகவோ அல்லது மற்ற உயிரினங்களாகவோ பிறந்து
2.மீண்டும் மனிதன் கையில் வளர்க்கப்பட்டு அல்லது மனிதனால் அடித்துக் கொல்லப்படும் போது
3.அந்த உயிராத்மா மனித சுவாசத்திற்குள் ஈர்க்கப்படுகின்றது.
4.மனித உடலுக்குள் வந்து கருவாகி மீண்டும் மனிதனாகப் பிறக்க நேரிடுகின்றது.

இப்படித்தான் மனிதன் மீண்டும் மனிதனாக வர முடியும். ஆனாலு எத்தனை முறை இப்படிச் சுற்றிக் கொண்டு வருகிறோம்…! என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

இதற்குத் தான் பரமபதத்தைக் காட்டினார்கள் ஞானிகள். ஒவ்வொரு நிலைகளிலும் நாம் முன்னேறி வரும் போது முதலில் சிறு பாம்பு கடிக்கின்றது. பின்னாடி மேலே போகப் போக ஒவ்வொரு விஷத்தின் தன்மை வரும்போது
1.நாம் எவ்வளவு உயர்ந்து போனாலும்
2.நாம் உயர்ந்த சக்திகளை எடுத்தாலும் என்ன ஆகின்றது…?

ஒரு டம்ளர் பாலில் ஒரு துளி விஷம் பட்டாலும் அது விஷம் தான், ஒரு குடம் பாலில் அந்த துளி விஷம் பட்டாலும் அது விஷம் தான்.

இதைப் போன்று தான் வேதனை என்ற சத்தை அதிகமாக இந்த மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்டால் மனித சிந்தனையை முழுமையாக அழித்து விடுகின்றது.

அது போன்று சிந்தனையை அழிக்கச் செய்யும் உணர்வின் தன்மைகளை மாற்றுவதற்குத்தான் உங்களுக்கு பௌர்ணமி தியானத்தில் மெய் ஞானிகளின் அருள் சக்தியை அதிக அளவில் பெறக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

வானை நோக்கி உங்கள் நினைவலைகளைச் செலுத்தும் பொழுது உங்கள் எண்ணங்களுக்குள் செருகேற்றி சப்தரிஷி மண்டலத்துடனும் துருவ நட்சத்திரத்துடனும் தொடர்பு (HIGH FREQUENCY LINK) ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்தும் பொழுது அறியாது சேர்ந்த எத்தகைய விஷத்தையும் மாற்ற வல்ல சக்தி கிடைக்கின்றது.

அத்தகைய ஒளியான உணர்வுகள் உங்கள் உடலுக்குள் விளைந்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சுடராக மாறும். உடலை விட்டுப் பிரிந்தால் இந்தப் பூமியில் யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது அந்தச் சப்தரிஷி மண்டல சுழற்சி வட்டத்தில் இணைய முடியும். பிறவா நிலை பெறலாம்.

அதற்காகத்தான் இந்தப் பௌர்ணமி தியானத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

Leave a Reply