எல்லாவற்றையும் இயக்குபவனை “ஈசன்” என்று ஏன் சொல்கிறோம்…?

Lord eswara gurudeva

எல்லாவற்றையும் இயக்குபவனை “ஈசன்” என்று ஏன் சொல்கிறோம்…?

உதாரணமாக ஒரு மரம் தான் முழுமை அடைந்த பின் தன் இனத்தின் தன்மையை வித்தாக உருவாக்கி தன் இனத்தைப் பெருக்குகின்றது. இதைப் போன்று தான் மனிதனுக்குள் எண்ணங்கள் வளர்ச்சி பெற்ற பின் அவன் கவர்ந்து கொண்ட உணர்வை உயிர் முழுமையாக்கும் திறன் பெற்றது – மனிதனின் உடலுக்குள் நின்றே…!

விவசாயத்தில் பல பல தாவர இனங்களை இணைத்து அதைப் புது விதமான செடிகளாக மாற்றுகின்றோம். அதைப் போன்று விலங்கினங்களில் உள்ள அணு செல்களைப் பிரித்து மற்ற விலங்கினங்களின் செல்களுடன் இணைத்து புதுப் புது விதமாக விலங்கினங்களாகவும் உருமாற்றம் செய்து வருகின்றார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் மெய் ஞானி உணர்ந்த உணர்வின்படி “அவன் எதைக் கண்டான்…?” என்கிறபோது தனது உயிரின் தன்மையை இயக்கத்தை ஈசன் என்று காரணப் பெயரை வைத்து மற்றவர்களுக்கும் இதைப் புரியச் செய்கின்றான்.

விஞ்ஞான அறிவுப்படி ஒரு காந்தப் புலனால் கவரப்பட்டு தான் எடுக்கும் உணர்வின் தன்மையை அதே காந்தப் புலனால் அதைப் பதிவாக்கப்பட்டு மீண்டும் காந்தப் புலனறிவால் வெளிப்படுத்துகின்றான்… விரிவுபடுத்துகின்றான்…! ஒலி/ஒளிப் பேழைகளைத்தான் (CD, HARD DISK, MEMORY DRIVES) அவனால் இயக்க முடியும்.

ஆனால் மெய் ஞான அறிவுப்படி நமது உயிர்
1.காந்தப் புலனை ஈர்க்கக்கூடிய நிலையும்
2.காந்தப் புலனை உருவாக்கும் நிலையும்
3.காந்தப் புலனைத் தனக்குள் பெருக்கும் நிலையும் பெற்றது என்று அறிந்தவர்கள் மெய் ஞானிகள். இவ்வாறு உருவாக்கும் சக்தி பெற்றதை ஈசன் என்று உயிருக்குக் காரணப் பெயர் வைக்கின்றார்கள் மெய் ஞானிகள்.

ஒரு காரிலே ஸ்டேரிங் (STEERING) இருந்தால் தான் திருப்ப முடியும். ஒட்டு மொத்தக் காரையும் இயக்க வேண்டும் என்றால் அதற்குள் இஞ்சின் (ENGINE) வேண்டும்.

அதைப் போல் தான் நமது உயிர் இஞ்சினைப் போல நம் உடலை இயக்கிக் கொண்டு உள்ளது. உயிர் நமக்குள் இயங்கிக் கொண்டே உள்ளது. பரிணாம வளர்ச்சியில் நாம் வளரும் பருவத்தையும் நமக்குள் வளர்க்கும் நிலையையும் அறிந்து கொள்வதற்காகத்தான் ஈசன் என்று பெயரை வைக்கின்றார்கள் ஞானிகள்.

ஒரு இயந்திரம் இயங்கிக் கொண்டு இருந்தால் தான் அதனுடைய உறுப்புகள் அனைத்தும் அதனதன் செயலாக்கங்களாக இயக்கப்பட்டு முழுமையாக விஞ்ஞான அறிவு கொண்டு வேலை செய்யும் நிலைக்கு அது வரும்.

இயற்கையின் தன்மைகள் எது எதனுடன் இணைக்கின்றதோ அந்த உணர்வின் செயலாக எவ்வாறு இயக்குகின்றதென்ற நிலையை மெய் ஞானி அவன் தன்னுள் கண்டுணர்ந்து அதற்குத் தக்கவாறு காரணப் பெயரை வைக்கின்றான்.

உயிரான ஈசனுக்குள் துடிக்கும் நிலை வரப்படும் போது தான் அதிலே வெப்பம் ஏற்படுகின்றது. உதாரணமாக நெருப்பில் பாத்திரத்தை வைத்து அதிலே நீரை ஊற்றி எந்தெந்தப் பொருள்களை அதிலே நாம் போடுகின்றமோ அதை எல்லாம் இரண்டறக் கலக்கச் செய்கின்றது.

ஆனால் வெப்பத்தைக் கொடுக்காதபடி பொருள்களைப் போட்டாலும் இதனுடைய கலக்கும் முறைகள் எதுவாக இருந்தாலும் இதனுடைய இயற்கையின் தன்மையிலேயே தான் அது இருக்கும். இணைந்த நிலைகள் மாற்றம் ஆவதை நம்மால் உணர முடியாது. ஆகவே தான்
1.உயிரின் இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பத்தால்
2.ஈர்க்கும் சக்தி வரும் போது
3.இயற்கையின் தன்மை எவ்வாறு கலக்கிறதென்ற நிலையை மெய் ஞானிகள் தெளிவாகக் கண்டுணர்ந்துள்ளார்கள்.

ஒலி/ஒளிப் பேழையில் (CD, HARD DISK, MEMORY DRIVES) உள்ள காந்தப் புலன் தனக்குள் ஈர்ப்பதைப் பதிவாக்குகின்றதோ இதைப் போன்று தான் நமது காந்தத் தன்மை (MAEGNETIC) கொண்ட எலும்புகளில் உள்ள நிலைகளும் காந்தத் துடிப்பால் இயக்கப்படும் போது காந்தப் புலனை அது இயக்குவதும் அதன் தொடர் வரிசையிலே அது இயக்கவும் செய்கின்றது,

நம் உயிரின் இயக்கத்தால் எதனின் உணர்வின் தன்மையை நாம் பார்க்கின்றோமோ அதைக் கண்ணிற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் கவர்கின்றது. கண்ணிற்குள் இருக்கக்கூடிய கரு விழி அதைப் படம் எடுக்கின்றது.
1.கவர்ந்ததை எலும்பிற்குள் இருக்கும் ஓடுக்குள் இதைப் பதிவு (RECORD) பதிவு செய்து கொள்கின்றது.
2.பதிவு செய்து கொண்டால் தான் எந்த மனிதன் எதைப் பேசுகின்றானோ அந்த உணர்வின் நிலையை ஆன்மாவாக (எப்படி ஒலி/ஒளிப்பேழைகளில் பதிவு செய்து கொள்கின்றமோ) மாற்ற முடியும்.
3.ஆன்மாவாக மாற்றியதைத்தான் நாம் இழுத்துச் சுவாசிக்க முடியும்.
4.உயிரான காந்தப்புலன் சுவாசத்தின் மூலம் அதைக் கவருகின்றது.
5.அது தான் சுவாச நிலை என்பது.
6.சுவாசித்த உணர்வின் அலைகளை உயிர் இயக்கி உடல் முழுவதும் அந்த உணர்வலைகளைப் பரப்புகின்றது.
7.அதிலே உருவாகும் உணர்வின் சத்தை உடலாக்குகின்றது.
8.மற்ற கழிவைக் காற்றாக வெளிப்படுத்துகின்றது.

ஒரு ஃபேன் (FAN) சுழலுமே என்றால் அந்தச் சுழற்சியின் தன்மை வெளியிலிருந்து இழுத்து மறு புறம் அது காற்றாக அனுப்புகின்றது. அதைப் போல நாம் ஆன்மாவிலிருந்து எடுக்கும் இந்த உணர்வின் தன்மையை உயிர் சுழலச் செய்து இந்த உணர்வின் தன்மை வடிகட்டி வெளிப்படுத்தும் நிலைகளை காற்றலைகளை அதைத் தான் மூச்சலைகள் என்பது. இது மெய் ஞானிகள் கண்டுணர்ந்தது.

விஞ்ஞானிகள் உறுப்புகளின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தாலும் மூலத்தை அவர்களால் கண்டுணர முடியவில்லை. ஆனால் “மூலத்தையே…” அறிந்துணர்ந்தவர்கள் மகரிஷிகள்.

எதைக் கண்ணுற்றுப் பார்க்கின்றோமோ அதன் உணர்வைக் கண்கள் படமெடுத்து எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்து அந்த உணர்வின் அலைகளை நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

இதைச் சுவாசிக்கும் போது உயிர் இந்த உணர்வின் சத்தை “ஓ…!” என்று பிரணவமாக்குகின்றது. இவ்வாறு இயக்கமாக இருப்பதற்கு “மூலம்…!” நம் உயிர் தான். அதனால் உயிருக்குக் காரணப் பெயர் ஈசன் என்றும் அதற்குள் ஏற்படும் வெப்பத்திற்குப் பெயர் விஷ்ணு என்றும் அதனுடன் இணைந்த காந்தப் புலனுக்குப் பெயர் லெட்சுமி என்றும் ஞானிகள் வைத்துள்ளார்கள்.

லெட்சுமி நமக்குச் செல்வத்தைக் கொடுப்பாள். செருக்கை கொடுப்பாள் என்று தான் நாம் வணங்குகின்றோம். ஆனால் எந்தச் செல்வம்…?
1.குணச் செல்வம் இருந்தால்தான் பொருள் செல்வத்தைத் தேட முடியும்.
2.குணச் செல்வம் இருந்தால் தான் உடலினுடைய ஆரோக்கிய செல்வத்தை நாம் தேட முடியும் என்ற நிலைகள்
3.ஒவ்வொன்றையும் விரிவாக்கமாக மெய் ஞானிகள் அன்று தெளிவான முறையில் எடுத்துரைத்துள்ளார்கள்.

சந்தர்ப்பவசத்தால் ஒருவன் வேதனைப்படுகின்றான் என்றால் நாம் வைத்துக் கொண்டால் அவனை உற்றுப் பார்ப்போம் என்றால் அவனைக் கண்கள் படமெடுத்து நமக்குள் பதிவாக்குகின்றது.

அவனின்று வெளிப்படும் வேதனையான உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக பரப்பும் போது அதைக் கண்ணிற்குள் இருக்கும் காந்தப்புலன் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து உயிருடன் இயக்கப்படும்போது தான் அவனுடைய வேதனையை நாம் அறிய முடிகின்றது.

இருந்தாலும் அவன் வேதனையால் உடல் எப்படி நலிந்திருந்ததோ அதனில் உருவான உணர்வை நாம் நுகர்ந்து அறியப்படும் போது நமக்குள் அவனின் உடலைப்போல நமக்குள் நலியச் செய்யும் உணர்வின் ஜீவ அணுக்களாக விளைகின்றது. அதன் பின் நம் உடலும் நலியத் தொடங்குகின்றது. எந்த உணர்வின் மணங்களை நாம் சுவாசிக்கின்றோமோ அதுவே நம் உடலாகின்றது.

நல்ல மகிழ்ச்சியான உணர்வாகச் சுவாசித்தால் அதனால் விளையும் அணுக்கள் தன் மலத்தால் உடலை உருவாக்கப்படும் பொழுது ஆரோக்கிய நிலைகளை நமக்குள் உருவாகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே
1.பிறர்படும் துயர உணர்வை நாம் பார்க்கும் பொழுது கண்களில் உள்ள காந்தப்புலன் அதைக் கவர்கின்றது.
2.கவர்ந்த உணர்வை உயிர் இயக்குகின்றது… உணர்கின்றோம்…!
3.இயக்கத்தின் நிலை கொண்டு ஜீவ அணுவாக மாற்றுகின்றது.
4.அந்த உணர்வின் சத்துக்கள் அணுவாக விளைந்து அதனின் மலமாக உடலாக உருவாகின்றது.

அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று நம் உயிரைச் சொல்கிறோம். நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தி ஓ… என்று பிரணவமாக்கி ம்… என்று நம் உடலாகின்றது.

நம்மை இயக்குவதற்கு மூலமாக இருக்கும் உயிரை உள் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் அந்தச் சக்தியை ஈஸ்வரா…! என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள் மகா ஞானிகள்.

Leave a Reply