மனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…!”

Divine Guru

மனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…!”

 

பண்டைய கால மாமகரிஷிகள் தங்களுடைய புலனறிவு கொண்டு விண்ணை நோக்கி ஏகி பல சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் கவர்ந்து தன் உடலிலே விளைய வைத்துக் கொண்டார்கள்.

அப்படி விளைய வைத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு தனக்குகந்த நிலையில் பூமிக்குள் கால சூழ்நிலைகளை மாற்றி மனிதனை இங்கே வாழ வைத்தார்கள். இந்தப் பூமிக்குள் மெய் ஞானத்தையும் பெருக்கினார்கள்.

அன்றைய மகரிஷிகள் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தனக்குகந்ததாக இந்தப் பூமியின் நிலைகளை மாற்றி அமைத்தார்கள்.
1.ஒவ்வொரு கால நிலைகளில் அது மாறினாலும் அதைத் திசை திருப்பி
2.மனிதனுக்குகந்த நிலைகளில் பூமியின் சுழற்சி நிலைகளைச் சீராக்கி அமைத்தார்கள்.

அதாவது சூரியனின் காந்த சக்தி இதைக் கவர்ந்திடாத நிலையில் ஒரு பகுதி அதை மறைக்கப்பட்டு மறு பகுதியில் பூமியைத் திருப்பினான் தனிப்பட்ட மனிதன் – “மகரிஷி…!”

அப்படி அமைக்கப்பட்ட இந்தப் பூமியிலே உருவான மனிதருக்குள் ஞானத்தின் உணர்வுகள் விளைந்தது. அதிலே மெய் ஞானியாக ஆன முதல் மனிதன் தான் அகஸ்தியன். அவன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அவனைப் பின்பற்றிச் சென்ற மகா ஞானிகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் ஒளி சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்.

அத்தகைய மகரிஷிகள் வெளிப்படுத்திய வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த உயர்ந்த சக்திகள் அனைத்தும் நாம் சூரியனால் கவரப்பட்டு அந்த உணர்வலைகள் இன்றும் நமக்கு முன் காற்றிலே இருக்கின்றது.

சாதாரணமாக வாழும் மனிதர்கள் நாம் வெளிப்படுத்தும் விருப்பு வெறுப்பு உணர்வுகள் அதிகமானாலும் அதைக் காட்டிலும் வீரிய நிலைகளில் வந்தால் அது எல்லாம் அழிந்துவிடும்.

ஆனால் அந்த மகரிஷிகள் உடலிலிருந்து பெருக்கிய அந்த உணர்வுகள் அனைத்தும் அழியாத் தன்மைகள் பெற்றது.

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு நாடாக்களில் பதிவு செய்த படங்களை இயந்திரத்தின் மூலமாகவும் செயற்கைக் கோள் மூலமாகவும் ஒலி/ஒளி பரப்பு செய்கின்றார்கள்.

எந்த டி.வி. ஸ்டேஷனிலிருந்து ஒலி/ஒளிபரப்பு செய்யப்படுகின்றதோ அதே ஸ்டேஷனை வீட்டிலுள்ள டி.வி. யில் பட்டனை அழுத்தித் திருப்பி வைக்கப்படும் போது காற்றிலே மறைந்துள்ள அந்த அலைகளைக் கவர்ந்து நாம் அறியும் வண்ணம் செய்கின்றது.

அதே போல பிறவா நிலைகள் பெற்ற அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை நாம் கவர வேண்டும் என்றால்
1.அவர்களை ஒத்த சம நிலைகள் கொண்டு
2.அதாவது அவர்களின் உணர்வின் எண்ணங்கள் கொண்டு எடுத்தால் தான் கவர முடியும்.

அப்படி இல்லையென்றால் நம்முடைய எண்ணம் அதன் அருகிலே செல்லாது. மகரிஷிகளின் ஆக்கமான சக்தி நம் எண்ண அலைகளைத் ஒதுக்கித் தள்ளி அதனுடைய ஆற்றலாகப் பெருக்கும். நம்முடைய நினைவலைகளால் மகரிஷிகளின் உணர்வுகளை ஈர்க்கும் நிலை இல்லாது போய்விடும்.

அந்த மகரிஷிகளின் பேராற்றல்களை ஈர்க்கும் நிலை பெறச் செய்வதற்கே உங்களுக்கு உபதேச வாயிலாக ஞானிகளின் உணர்வுகளைப் பதியச் செய்கின்றோம்.

ஞானிகளைப் பற்றிய பதிவுகள் உங்களுக்குள் அதிகமாக அதிகமாக அவர்களை ஒத்த உணர்வின் எண்ணங்கள் உடலுக்குள் வளர்ச்சியாகி அதை எளிதில் கவர முடியும்.

Leave a Reply