ஒருவர் நம்மைக் கேவலமாகப் பேசினால் நம் நல்ல எண்ணங்கள் என்ன ஆகும்…?

star-light-spiral

ஒருவர் நம்மைக் கேவலமாகப் பேசினால் நம் நல்ல எண்ணங்கள் என்ன ஆகும்…?

பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்
1.கெட்டதை நீக்கி நீக்கி
2.நல்லது செய்யும் உணர்வின் ஆற்றலை எடுத்து எடுத்துத்தான் இன்று மனிதனாக வளர்ந்து வந்துள்ளோம்.

மனிதனான பின் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளையும் துன்பங்களையும் எண்ணி வேதனையோ கோபமோ ஆத்திரமோ பட்டால் மீண்டும் கீழான உடல்களுக்குத் தேய்பிறையாகத்தான் செல்ல முடியும்.

உதாரணமாக நான் (ஞானகுரு) இருக்கின்றேன் என்றால் “பெரிய சாமியார் மாதிரி ஊரை ஏமாற்றுகின்றான்… அது அப்படி… இது இப்படி…!” என்று ஒருவர் அவர் உணர்விற்கொப்ப என்னைப் பற்றிச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் உடலிலே விளைய வைத்த அந்த உணர்வை நான் கூர்ந்து கவனிக்கும் போது என்ன நடக்கின்றது…?

“ஆஹா… என்னைப் பற்றி இப்படி ஒரு செய்தி சொல்லி விட்டானா…? என்று அவன் மேல் எனக்கு ஆத்திரமும் வெறுப்பும் வேதனையும் தோன்றி அவனை எப்படியும் உதைக்க வேண்டும்…! என்ற எண்ணம் வந்து விடுகின்றது.

1.அவன் பேசிய அந்த உணர்வின் தன்மையை நான் நுகரும் போது
2.இந்த உணர்வின் சக்தி என் உடலுக்குள் சென்று
3.அது ஒவ்வொரு உணர்வுகளுடனும் மோதும் போது எனக்குள் எதிர் நிலையாகி
4.என் உடலுக்குள்ளே போர் செய்து அந்த உணர்வின் இயக்கமாக என்னை இயக்கி விடுகின்றது.
5.எனக்குள் இருக்கும் சக்தி வாய்ந்த நல்ல எண்ணங்களைச் செயலபடுத்தவிடாது தடைப்படுத்துகின்றது.

“என்னை அவமரியாதையாகப் பேசுகின்றான் என்ற அந்த உணர்வின் சக்தியை…” நான் மீண்டும் மீண்டும் எடுத்துக் கொள்ளும் போது என் உடலுக்குள் சென்று நல்ல குணத்துடன் இரண்டறக் கலக்கச் செய்து விடுகின்றது.

அதே போல் எம்முடைய உபதேசத்தைக் கேட்டு அதைப் படித்துணரும் நீங்கள் மற்றவர்கள் இதைப் படித்து விட்டு “என்னமோ இந்தச் சாமியார் சொல்கிறார்…!” என்று கேலியாகச் சொல்லப்போகும் போது உங்களுக்குச் சங்கடம் வருகின்றது.

அதை எம்மிடம் நீங்கள் சொல்லும் போது நான் கஷ்டப்பட்டுப் உபதேசிக்கின்றேன்… ஆனால் என்னை இப்படியா பேசுகிறார்கள்…? என்ற எண்ணத்தை எடுக்கும் போது அந்தத் துயரமான எண்ணங்களைத்தான் நான் எடுக்க முடியும்.

குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியின் தன்மையை நான் செயலாக்காதபடி
1.சாதாரண மனிதருடைய உணர்வின் எண்ணங்களை எனக்குள் சேர்க்கப்படும் போது
2.நல்ல உணர்வுகளை வளர்க்கும் நிலைகள் செயலிழந்து
3.உடலிலே நோயாகி நல்ல உணர்வையே இயக்க முடியாதபடி ஆகிவிடுகின்றது.

கடைசியில் உடலை விட்டுச் செல்லும் பொழுது என்னை எப்படி எல்லாம் பேசினான்… பேசினான்…! என்று அந்த எண்ணத்திலேயே அதிகமாக இருந்தால் அவனுடைய உடலுக்குள் தான் நான் போக முடியும்.

ஆகையினாலே இதைப் போன்ற தீமையான இயக்கங்களின் விளைவுகளிலிருந்து நாம் மீள வேண்டும் என்றால்… மற்றவர்கள் நம்மைக் குறையாகப் பேசினாலும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் தான் வேண்ட வேண்டும்.

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரிடம் நம் கண்ணின் நினைவைச் செலுத்தி உயிருடன் ஒன்றிய நிலையில் விண்ணை நோக்கி ஏகி குரு காட்டிய வழியில் மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின் அந்த மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற நினைவை
1.புறத்தால் நோக்கி ஏங்கி…
2.ஆனால் அகத்திற்குள் (உடலுக்குள்) அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் செலுத்தி
3.சிறிது நேரம் தியானிப்போம் என்றால்
4.பிறிதொருவர் நம்மை வெறுப்பாகக் கேவலமாகப் பேசிய அந்த உணர்வலைகள்
5.நாம் அறிவதற்கு அது பயன்பட்டாலும் அது நம் உடலுடன் இயங்கா வண்ணம் தடுக்க முடியும்.
6.எங்களைப் பார்க்கும் அனைவரும் எங்களை நினைக்கும் அனைவரும்
7.நாங்கள் பார்க்கும் அனைவரும் நாங்கள் நினைக்கும் அனைவரும்
8.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும் என்று தியானித்தால்
9.வெறுப்பை ஊட்டிய பிறரின் உணர்வலைகள் நமக்குள் வளராது அதைத் தடைபடுத்தி
10.உயர்ந்த நிலைகளாக நமக்குள் ஆக்கிக் கொடுக்கும்.

எண்ணும் எண்ணமே இறைவன்…! இறையின் செயலே தெய்வம்…!

Leave a Reply