இன்றைய அவசர உலகில் பொறுமை வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

sages patience

இன்றைய அவசர உலகில் பொறுமை வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அன்றாட வாழ்க்கையில் நமக்குத் தேவையான ஒரு பொருளை வரிசையில் நின்று தான் வாங்க வேண்டும் என்றால் அவசர உணர்வுகள் தலை தூக்கி நம் சிந்தனைகளைக் குறைத்து விடுகிறது.

வரிசையில் நமக்கு முன்னாடி நிற்பவர்களை முந்திக் கொண்டு பொருளை வாங்க நாம் ஆசைப்படுகின்றோம். அத்தகைய சந்தர்ப்பங்களில் மற்றவர்கள் மீது பொறுமையிழந்து நம்மை அறியாது கோபித்துப் பேசும் நிலையோ வெறுப்பின் நிலையோ அல்லது ஆத்திரப்படும் நிலைகளோ வந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைத் தடைப்படுத்தவில்லை என்றால் நம்முடைய நல்ல குணங்களைச் சீராகச் செயல்படுத்த முடியாதபடி எதிலேயும் இந்த அவசர உணர்வே முன்னாடி வரும்.

ஏனென்றால் இன்று இருக்கக்கூடிய உலக நிலைகளில் நச்சுத் தன்மைகள் அதிகமாகப் படர்ந்திருப்பதால் சிறிதளவு நாம் இடம் கொடுத்தாலே போதும்.
1.சங்கடமோ சலிப்போ வெறுப்போ போன்ற உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
2.அவைகள் எல்லாம் உடனடியாக நமக்குள் புகுந்து
3.நம் நல்ல குணங்கள் அனைத்தையும் அழித்துவிடும்.

அந்த விஷத்தின் தன்மை நமக்குள் பெருகி நல்லதைச் செயல்பட விடாத நிலையில் நோயாக உருவாக்கி இந்த உடலை விஷத் தன்மையாக மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற தீமைகளிலிருந்து மீட்டுவதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

ஆகவே எந்தக் கூட்டமைப்பிலும் நாம் பொருளை வாங்காது வரிசையில் நிற்கும் அந்த நேரத்தில் பொறுத்திருந்து…..
1.நமக்கு முன்னாடி இருப்போருக்குப் பொருள்கள் சீக்கிரம் கிடைக்க வேண்டும்.
2.அவர்கள் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற எண்ணங்களை நாம் எண்ண வேண்டியது அவசியம்.

அத்தகைய பக்குவ நிலைகளைப் பெறுவதற்காகத்தான் அகஸ்திய மாமகரிஷி வெளிப்படுத்திய அருள் உணர்வை குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் வளர்த்துக் கொண்டால் ஒவ்வொருவரிடத்திலும் வரும் வெறுப்பை நாம் நீக்க முடியும். பொது நலத்துடன் கூடிய இத்தகைய உணர்வுகள் நமக்குள் ஓங்கி வளரப்படும் பொழுது
1.வெறுப்பை ஊட்டும் உணர்ச்சிகள் நீங்கி
2.மெய் ஞானியின் அருள் ஒளிகள் ஒவ்வொரு சமயத்திலும் நமக்குள் அது ஓங்கி வளர்கின்றது.
3.ஏனென்றால் இதை அடிக்கடி பதிவு செய்து கொண்டால்தான் அந்த எண்ணங்கள் வரும்.

புதிதாக ஒரு தையல் வேலை செய்யும் பொழுதோ அல்லது புதிதாகக் கோலங்கள் போடும் பொழுதோ முதலிலே போட்டவுடனே எதுவும் சரியாக வருவதில்லை.

கோலம் சரியாக வரவில்லை எனும் பொழுது மீண்டும் மீண்டும் அதைச் சீர்படுத்துவதற்கு இந்த உணர்வைச் செலுத்தும் போது பின்னாடி நேராக வருகின்றது.

ஆகவே அந்தப் பொறுமை நமக்குள் வருவதற்குத்தான் கோலங்களை இடச் செய்தனர். கோலங்களின் கட்டங்களை நாம் சரிவரப் போட்டிருக்கின்றோம் என்று அதைக் கண்டுணர்ந்து நல்ல நிலைகளைப் பெறுவதற்காக அன்றைய மெய் ஞானிகள் கொடுத்தது தான் இவை எல்லாம்.

அதே போல் தையல் மிஷினில் தைத்துப் பழகிய பின் தன்னிச்சையாகவே நேராகத் தைக்கும் நிலை வருவது போல அருள் உணர்வுகளை நமக்குள் செருகேற்றிக் கொண்டால் எந்த ஒரு துன்பமும் நம்மை அணுகாது தடுக்க முடியும்.

1.பேரின்பத்தைப் பெற்ற அந்த மகரிஷிகளின் நினைவுகள் ஒவ்வொரு நிமிடமும் வரும் போது
2.அந்த உணர்வுகள் தன்னிச்சையாக நமக்குள் (நேராக) இயங்கி
3.நம்மைச் சீராக்கும் நிலையை உருபெறச் செய்யும்.

ஆக நாம் சுவாசிக்கும் அந்த உணர்வை நம் உயிர் அதைச் செயல்படுத்தவும் அந்த உணர்வுகள் நம்மை இயக்கச் செய்வதற்கும் இது உதவும்.

பொது வாழ்வில் பொறுமை என்ற உணர்வுகளை எடுத்து வளர்க்க வளர்க்க
1.வரக்கூடிய எதிர்ப்புகளை எல்லாம் மறந்து
2.நமக்குள் மெய் ஒளியைப் பெறும் நிலையும்
3.மற்றவர்களின் எதிர்ப்பான உணர்வும் வெறுப்பான உணர்வுகளும் நமக்குள் புகாதபடி தடுக்க இது உதவும்.

இதை எல்லாம் அனுதினமும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அருள் நெறிகள்…!

Leave a Reply