ஆதி மூலம் – நம் உயிரின் இயக்கத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

ஆதிமூலம் - உயிர்

ஆதி மூலம் – நம் உயிரின் இயக்கத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

 

ஒரு தீபத்தை ஏற்றினால் அது எரியும் போது அது தனக்குள் ஈர்ப்பு சக்தியை எடுத்துத் தான் எரியும். அந்த ஈர்ப்பு சக்தி இல்லை என்றால் தீபம் அணைந்துவிடும்.

இதைப்போன்று தான்
1.ஒரு உயிரணுவிற்குள் துடிப்பு ஏற்படும் போது அதனால் ஏற்படும் வெப்பத்தால்
2.அது மீண்டும் ஜீவன் பெற்று இருக்க வேண்டும் என்பதற்காக
3.அதற்குள் இருக்கக்கூடிய காந்தபுலன் அந்த இயக்கச் சக்திக்கு உறுதுணையாக இருந்து எடுத்து அதை இயக்க வைக்கும்.
4.அதாவது ஒரு எண்ணைய் விளக்கைப் பொருத்தும் போது
5.அந்தத் தீபச் சுடரின் அருகிலே துவாரங்கள் இல்லை என்றால் ஈர்க்கும் சக்தி அடைபட்டு விடுகின்றது
6.நெருப்பு (தீபம்) எரிவதில்லை.

ஆகவே உயிரணுவின் சக்தி துடிக்கும் போது அதனுடன் இணைந்த காந்த சக்தி இது இயக்கப்பட்டு அந்தத் துடிப்புக்குள் ஈர்ப்பாகி
1.தன் அருகிலே இருக்கக்கூடிய பொருளை அது இழுத்து
2.உயிரணுவிற்குள் வளரும் சக்தியாக அது எந்தச் சக்தியை எடுத்ததோ
3.அந்த உணர்வின் மணமாக எண்ணமாகத் தெரிந்து கொள்ளும் நிலையாகின்றது.

இதைத்தான் ஞானிகள் இயக்கத்தை “ஈசன்” என்றும் அந்த இயக்கத்திற்குள் உருவாகும் வெப்பத்தை “விஷ்ணு” என்றும் அதில் இணைந்த காந்தத்தை “லட்சுமி” என்றும் காரணப் பெயரை வைத்துக் காட்டுகின்றார்கள். (நாம் புரிந்து கொள்ள)

அதே சமயத்தில் அந்தக் காந்தம் இழுத்து இந்த உயிருடன் இயக்கப்படும் போது அதை ஜீவன் பெறச் செய்கின்றது.

நாம் ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து அதற்குக் கீழ் நெருப்பின் தன்மை அதிகமாகும் போது பாத்திரத்திலுள்ள நீர் கொதிக்கும் தன்மையாக – இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அதிகமாகக் கொதிக்கும் பொழுது அந்த நீரே ஆவியாகின்றது. நீரைக் கொதிக்கச் செய்து அதன் மூலம் வரும் ஆவியின் தன்மையை வைத்து அன்றைக்கு இரயில் இன்ஜினையே இயக்கினார்கள். அதுமட்டுமல்லாதபடி அதிகமான பாரங்களையும் வைத்து இழுத்துச் செல்லும்படிச் செய்தார்கள்.

அந்த நெருப்பின் தன்மையை இயக்கச் சக்தியாக வைத்து நீரைக் கொதிக்கச் செய்து அந்தக் கொதிப்பிலிருந்து ஆவியாக வரும் நிலையை “நீராவி இயந்திரம்…!” என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இயக்கச் செய்தனர்.

இதைப் போன்றது தான் நமது உயிரின் இயக்கமும்.

உயிர் தனக்குள் உருவாக்கும் துடிப்பால் வெப்பமாகி ஈர்க்கும் காந்தமாகி அந்தக் காந்தத்தால் அது ஈர்த்து எடுத்துக் கொண்ட உணர்வின் சத்தை உணர்வின் சத்தாக தனக்குள் உறையச் செய்கின்றது.

அவ்வாறு உறையச் செய்தாலும் தொடர்ந்து அந்தத் துடிப்பின் இயல்பாக இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
1.நமது உயிர் “ஓ……“ என்று பிரணவமாகி (ஜீவன் பெறச் செய்து)
2.கவர்ந்த சக்திகள் அதனுடன் ஐக்கியமாகும் பொழுது “ம்……” என்று உறைந்து
3.அது உடலாக மாறுகிறது. ஒரு உயிர் உடலை இப்படித்தான் உருவாக்குகின்றது.

நீரை வைத்து அதனுடன் ஒரு பொருளை இணைத்து வேகச் செய்யும் போது அது கொதிகலனாலும் நாம் போட்ட பொருளின் சத்து கரைந்து நீருடன் ஒன்றி இரண்டும் ஒன்றாக இணைந்து விடுகின்றது.

1.நம் உயிர் நெருப்பாக இருந்து துடிப்பின் நிலைகள் கொண்டு வெப்பமானாலும்
2.ஈர்ப்பின் காந்தத் துடிப்பால் தனக்குள் கவரப்பட்டு
3.எந்தக் குணத்தின் சத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்கின்றதோ
4.அந்த இணைப்பின் சக்தியால் அதனுடைய ஆவியாக மாறி
5.அதனுடைய ஈர்ப்பின் துணையில் தனக்குள் உறையும் தன்மையாக மாற்றிக் கொள்கிறது.
6.நீருடன் மற்ற பொருள்களை இணைத்துக் கொதிக்கச் செய்யும் பொழுது அது எப்படி இரணடறக் கலந்து ஒன்றாகின்றதோ
7.அதைப் போல உயிரணு தனக்குள் கவரும் சத்தினை ஒன்றுடன் ஒன்றாக இணைத்து உடலாக உருவாக்கிக் கொண்டேயுள்ளது.

உயிர் என்று சொல்கின்றோம். உடல் என்று சொல்கின்றோம். நான் யார்…? தான் யார்…? இந்தப் பிள்ளை யார்…! என்ற நிலையில் நம்மை நாம் அறிந்து நமக்குள் இயக்கும் சக்தியையும் அறிந்து இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை உணர்த்திக் கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வாழ வேண்டும் என்பதற்கே இதை எல்லாம் உணர்த்துகின்றோம்.

Leave a Reply