தீமைகளைச் சந்தித்த பின்… “நாம் நல்லதை வளர்க்கும் பாதைக்குப் போகின்றோமா…? அல்லது நல்லதைக் காக்க முடியாத நிலைக்குப் போகின்றோமா…?”

protected-zone

தீமைகளைச் சந்தித்த பின்… “நாம் நல்லதை வளர்க்கும் பாதைக்குப் போகின்றோமா…? அல்லது நல்லதைக் காக்க முடியாத நிலைக்குப் போகின்றோமா…?”

 

தீமை… என்றும் நன்மை… என்றும் மற்ற உயிரினங்கள் கண்டுணர்ந்தாலும்
1.தீமையிலிருந்து விடுபடும் உபாயம் அவைகளுக்குத் தெரியாது.
2.தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று தீமை செய்யும் உடலை உற்று நோக்கி
3.அதனின் உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்டு
4.அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைக்குத் தப்பி ஓடுகின்றது.

உதாரணமாக ஒரு புலியிடம் சிக்கிய மான் அதனிடமிருந்து தப்பிக்க அந்தப் புலியின் உணர்வுகளைப் பயத்தால் அதிகமாக நுகர்ந்து தனக்குள் வலுப்பெற்ற பின் அதனின் உணர்வுகள் மானின் உடலில் விளைகின்றது.

புலியின் உணர்வுகள் மானின் உடலில் விளைந்து இது இறந்த பின் அந்தப் புலியின் உடலுக்குள் சென்று மான் புலியாகப் பரிணாம வளர்ச்சி அடைகின்றது. இது இயற்கையின் பரிணாம வளர்ச்சி.

அன்பும் பண்பும் பரிவும் கொண்டு ஒரு நண்பனுடன் நாம் பழகின்றோம். சந்தர்ப்பத்தால் அவன் நோயோடு வாடுகின்றான் என்றால் நூறு பேர் அதைக் கேட்டறிகின்றார்கள்.

ஆனால் நண்பன் மீது பற்று கொண்ட நிலையில் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து நாம் அதிகமாக அவரை நேசிக்கப்படும் பொழுது அவர் உடலில் பட்ட நோயின் உணர்வுகள் நம்மையும் பலவீனப்படுத்தத் தொடங்கி விடுகின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்குள் அந்த நண்பர் படும் வேதனையான உணர்வுகள் கலந்து விடுகின்றது. நண்பரையே எண்ணி ஏங்கும்படிச் செய்கிறது.

நண்பருக்கு நாம் உதவி செய்தபின் “இவர் எனக்கு எவ்வளவு உதவி செய்தார்…!” என்று அந்த நண்பருக்கும் நம் மீது எண்ணங்கள் அதிகமாக வருகின்றது.

இரு மனமும் ஒன்றென இணையும் போது அவர் நோயால் மடிந்தால் நாம் உதவி செய்த நமது உணர்வின் எண்ணங்கள் வலு பெற்று அந்த உடலை விட்டுப் பிரியும் ஆன்மா நம் உடலுக்குள் வந்து விடுகின்றது. பின் நமக்குள் நம்மை அறியாமலேயே பல பகைமை உணர்வுகளை ஊட்டுகின்றது.

நாம் பண்புடன் இருந்தோம்… அன்புடன் இருந்தோம்… எனக்கு ஏன் இந்தத் தொல்லை…? என்று நாம் வேண்டினால் மீண்டும் வேதனையைத்தான் உணர முடியுமே தவிர வேதனையைத்தான் வளர்க்க முடியுமே தவிர பகைமையிலிருந்து மீள முடியாது.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பகைமை என்று அறிந்த பின் அந்தப் பகைமையிலிருந்து விடுபடுதல் வேண்டும். அதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் தொடுதல் வேண்டும்.

நெருப்பு சுடுகிறது என்று அறிகின்றோம்.
1.ஒரு சூடான பாத்திரத்தை அதற்கென்ற ஒரு இடுக்கியை வைத்துத் தூக்குகின்றோம்.
2.இடுக்கியிலும் சூடு வருகிறதென்றால் அதைத் தணிக்க மற்ற துணிகளை வைத்து
3.அதைப் பிடித்து நாம் சூடான பாத்திரத்தை எடுக்கின்றோம்.

பகைமை உணர்வு நம்மை இயக்குகிறது என்று அறிந்தால் உடனே “ஈஸ்வரா” என்று புருவ மத்தியில் நம் உயிரிடம் நினைவினைச் செலுத்த வேண்டும்.

சர்வ தீமைகளையும் வென்ற அந்த மெய் ஞானியான அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இந்த உணர்வின் வலுவை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை எடுக்கும் பழக்க வழக்கம் வந்து விட்டால் அந்த நோயுடன் வாழும் உணர்வினை நமக்குள் வராது அடக்கிவிடும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு அந்த உணர்வுகளை நோயுற்றோருக்குப் பாய்ச்சினால் அது அவருக்குள் விளைந்து அவர் நோயைப் போக்க இது உதவும்.

இல்லையென்றாலும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை அவருக்குள் விளைந்து அவர் உடலை விட்டுச் சென்றால் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் செல்லும். நமக்குள் வராது. ஆகவே
1.அவரும் பரிணாம வளர்ச்சியான மனிதனுக்கு அடுத்த ஒளி நிலை அடைகின்றார்.
3.அதே சமயத்தில் நமக்குள் வலுவாக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம்மையும் அங்கே அழைத்துச் செல்லும்.

இதையெல்லாம் அறிந்துணர்ந்த அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம் வாழ்க்கையை வழி நடத்துதல் வேண்டும். ஏனென்றால் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

Leave a Reply