குடும்பத்திற்குள் பாசத்தினாலும் பந்தத்தினாலும் அறியாது இயக்கக்கூடிய தீமைகளிலிருந்து விடுபடப் பழகிக் கொள்ளுங்கள்

Spiritual Family

குடும்பத்திற்குள் பாசத்தினாலும் பந்தத்தினாலும் அறியாது இயக்கக்கூடிய தீமைகளிலிருந்து விடுபடப் பழகிக் கொள்ளுங்கள்

 

ஒருவன் நம்மைத் திட்டுகிறான்…! அதைக் காதில் கேட்டவுடனே என்னைத் திட்டினான்… திட்டினான்… திட்டினான்… என்று சொல்லி ஆத்திரத்தில் நாமும் பேசிவிட்டோம் என்றால் அடுத்தாற்போல நம் உடலுக்குள் என்ன நடக்கின்றது…?

ஒரு நாளைக்குத் திட்டிவிட்டு அவன் போய்விடுகிறான். ஆனால் நமக்கு கை கால் குடைச்சல் வருகிறது. ஏன் வந்தது…? எதற்கு வந்தது…? என்று தெரியாது.

பெரும் பகுதி பெண்களுக்குப் பாருங்கள். தன்னைப் பற்றி மற்றவர்கள் குறையாக அப்படிப் பேசினார்கள்… இப்படிப் பேசினார்கள்…! என்று தெரிந்து விட்டது என்றாலே போதும். அவர்களுக்கு கை கால் குடைச்சல் வந்து கொண்டே இருக்கும்.

அதே சமயத்தில் தன் பிள்ளையைக் கல்யாணம் கட்டிக் கொடுத்து இருப்பார்கள். அவர்கள் வீட்டில் மாமியார் வீட்டில் ஏதாவது செய்து விட்டால் போதும்.

“இப்படிச் செய்கிறார்களே பாவிகள்…! இப்படி எல்லாம் செய்கிறார்களே…! என் பிள்ளை இப்படிக் கஷ்டப்படுகின்றதே…! என்று மிகவும் வேதனைப்படுவார்கள்.

நாத்தனாரோ மற்ற யாராவது தன் பிள்ளையை ஏதாவது ஒன்றைச் சொல்லி விட்டார்கள் என்றால் அதையே திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குக் கை கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்.

அடுத்து இவர்கள் யாரிடம் பேசுவதற்குப் பார்த்தாலும் இதே நிலை வந்து கொண்டே இருக்கும். ஏனென்றால்
1.சுவாசித்த அந்த வேதனை உணர்வுகள் அனைத்தும் வீட்டுக்குள்ளேயே அலைகளாகப் படர்ந்து விடுகின்றது.
2.வேதனை என்றாலே கடும் விஷம்.
3.வீட்டில் படர்ந்த அந்த அலைகளைச் சுவாசிக்கச் சுவாசிக்க எங்கிருந்தும் தப்ப முடிவது இல்லை.

வீட்டிற்குள் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் வெறுப்பானலும் இதே நிலைகள் தான். அந்த அலைகள் வீட்டுக்குள் சுழலும் பொழுது நம்மை அறியாமேலே அது உணர்ச்சியைத் தூண்டி இயக்கிக் கொண்டே தான் இருக்கும்.

அதே சமயத்தில் வீட்டுக்குள் ரொம்பப் பாசமாக இருக்கும் போது திடீரென்று பகைமையாகி வெறுப்பாகிவிடும். பாவி…! கடைசியில் இப்படிச் செய்து விட்டானே…! என்று அதையே எண்ணிக் கொண்டு செத்தால் போதும்.

யார் மீது வெறுப்பானதோ செத்த பிற்பாடு அவர் உடலில் வந்து பாய்ந்து கொள்கிறது. அந்தப் பழி தீர்க்கும் உணர்வுடன் வந்து இன்னும் கொஞ்சம் இம்சை செய்யத் தொடங்கும். (ஆனால் இதனால் தான் இப்படி நடக்கிறது என்று தெரியாது).

வெறுக்கும் உணர்ச்சிகள் உந்தி உந்தி இந்த உடலையும் நஞ்சாக்கி உடலை விட்டுப் பிரிந்த பின் அந்த இரண்டு ஆன்மாக்களுமே அடுத்து மனித உடல் பெற முடியாதபடிப் போய்விடுகின்றது.

ரொம்பக் குடும்பங்களில் இந்த மாதிரி எத்தனையோ அவஸ்தைகள் பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இதைப் போன்ற நிலைகள எல்லாம் மாற்றுவதற்கு எத்தனையோ வகையில் ஞானிகள் உணர்வை நீங்கள் எடுக்கும் வழியைச் சொல்கின்றோம்.

ஏனென்றால் இந்த உண்மைகளை நான் (ஞானகுரு) உணர்வதற்காக வேண்டி குருநாதர் என் உடலுக்குள் அணு அணுவாக இம்சைகள் கொடுத்தார்.
1.தீமைகள் எப்படி நமக்குள் வருகிறது..?
2.அது எப்படி நம்மை இயக்குகிறது…?
3.வேதனைகள் எப்படி உருவாகிறது..?
4.மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறச் செய்து
5.அந்தத் தீமைகளையும் வேதனைகளையும் எப்படி அகற்றிப் பழக வேண்டும் என்ற முழு அனுபவத்தையும் எமக்குக் கொடுத்தார்.

குருநாதர் காட்டிய அதே அருள் வழியில் இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கக் கூடிய ஆற்றல் எல்லாமே “அந்த மகரிஷிகளின் ஒளியான உணர்வுகளைத்தான்…” இந்த உபதேசத்தின் மூலமாக ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

பதிவு செய்ததை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுதெல்லாம் அதைப் போக்குவதற்கு ஈஸ்வரா… என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும்.
1.மகரிஷிகளின் ஒளியான உணர்வுகள் உங்கள் உடலுக்குள் சேரச் சேர
2.மற்ற தீமையான உணர்வின் இயக்கங்களின் வலிமை குறையும்.

விண்ணிலிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொருவரையும் பெறச் செய்வதற்காகத்தான் எல்லா ஆலயங்களிலும் “தூப ஸ்தூபியை” வைத்துள்ளார்கள் ஞானிகள்.

அதற்கு நேராக நின்று வானை நோக்கிப் பார்த்து அந்த மகரிஷியின் அருளைச் சுவாசிக்கச் செய்து நம்மை அறியாது நம் உடலில் சேர்ந்த நோய்களைப் போக்கும் படி செய்தார்கள் ஞானிகள்.

ஞானிகள் சாஸ்திரங்களாக நமக்குக் காட்டிய வழிகளைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

Leave a Reply