ஒவ்வொருவருக்குள்ளும் மகிழ்ச்சியைப் பெருக்கச் செய்வதே “ஆடிப் பெருக்கு…!”

Aadi Perukku 2018

ஒவ்வொருவருக்குள்ளும் மகிழ்ச்சியைப் பெருக்கச் செய்வதே “ஆடிப் பெருக்கு…!”

 

தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்கள் வேதனைப்படும்படியான செயலைச் செய்யாதீர்கள். மற்றவர்கள் வேதனைப்படும்படியான சொற்களைச் சொல்லாதீர்கள்.

ஏனென்றால் எப்படி ஒரு விதையை மண்ணிலே விதைக்கப்படும் பொழுது அது முளைத்து அதிலிருந்து மீண்டும் பல வித்துக்கள் விளைந்து வருவது போல் ஒருவர் வேதனைப்படும்படியாகச் சொல்லும் போது அந்த உணர்வுகள் அங்கே பாயப்பட்டு
1.அங்கிருந்து பல வேதனைப்படும் சொற்கள் உங்களுக்குள் ஊடுருவிப் பாயும்.
2.உங்கள் சொல்லே உங்களுக்கு எதிரியாகி விடுகின்றது
3.உங்கள் சொல்லே உங்களைக் கடுமையாகி விடுகின்றது.
4.உங்கள் நினைவே உங்களுக்கு எதிரியாகி விடுகின்றது.
5.இதிலிருந்து விடுபட அருள் ஞானத்தை உங்களுக்குள் வளர்த்து அதைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விடுபட அருள் ஞானத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி
1.உலக மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தைப் பெருக்கி
2.அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணத்தைப் பெருக்கி
3.நம்மை அணுகுவோர் நம்மைப் பார்ப்போர் நம் தொழிலுடன் தொடர்பு கொண்டோர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற எண்ணத்தைப் பெருக்கி
4.மகிழ்ச்சி பொங்கும் செயல்கள் நம் குடும்பத்தில் பெருக வேண்டும் என்று
5.இப்படி நல்லதை எண்ணி எண்ணிப் பெருக்குவதே “ஆடிப் பெருக்கு…!”

சூரியன் எட்டுக் கோள்களின் தன்மையை ஒளியாக மாற்றி அது ஒன்பது கோளின் ஒளியாக நின்று மற்ற கோள்களுக்கு ஒளி கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

இதைப் போல நாமும் பிறருடைய தீமையினுடைய நிலைகளைக் கேட்டறிந்தாலும் எட்டுவிதமான உணர்வுகளைப் பேசினாலும் அந்த உணர்வினை நமக்குள் எடுத்து சூரியனைப் போன்று ஒளியின் சுடராக மாற்றிப் பிறருடைய தீமைகளை மாற்ற வேண்டும்.

பேரருள் பேரொளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து அதை நமக்குள் வலிமை பெறச் செய்து கொண்ட பின் அந்த உணர்வின் சக்திகளை மற்றவர்களுக்குப் பாய்ச்சப்படும் போது அவர்களும் இருள் சூழா நிலைகள் பெற்று அருள் ஞானத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றார்கள்.

ஆடிப் பெருக்கு என்ற நிலைகளில் நன்னீர் பெருகித் தாவர இனங்களைப் பெருக்கச் செய்வது போல் நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த குடும்பங்கள் அனைவரும் உயர்ந்த நிலைகள் வேண்டும்.

அவர்கள் உயர்வதற்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி அங்கே பெருக வேண்டும். அவர்கள் மூச்சலைகள் உலகம் நன்மை பெறும் சக்தியாகப் பெருக வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அந்த மகரிஷியின் உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.

“பத்தாவது நிலையான” உயிருடன் ஒன்றி அழியா ஒளியின் சரீரம் பெற
1.பல நிலைகளில் பல முறைகளில் பல திசைகளிலிருந்து (எட்டு) தீமைகள் வந்து நம்மைத் தாக்கினாலும்
2.அதனை உணர்வின் ஒளியாக மாற்றுவோம்… பேரொளியாகப் பெருக்குவோம்…!
3.துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக என்றும் தனக்குள் பேரின்ப பெரு வாழ்வைப் பெருக்கிக் கொண்டு உள்ளது போல
4.நாமும் அந்த அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்.
5.உலக மக்கள் அனைவருக்குள்ளும் அந்த அருள் ஞான சக்தி பெருகிட நாம் தியானிப்போம்… தவமிருப்போம்…!

நமது பார்வையில் அனைவரையும் மகிழ்ச்சி பெறச் செய்து அவர்கள் மகிழ்ச்சி அடைவதைப் பார்த்து நாமும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம் என்று இதை “ஆடிப் பெருக்காகப் பெருக்கிக் கொள்வோம்…!”

Leave a Reply