உடலைக் காயகல்பம் செய்யாதபடி யாரும் மோட்சம் அடைய முடியாது என்பார்கள் – காயகல்பம் என்றால் என்ன…?

Bhogar Risi

உடலைக் காயகல்பம் செய்யாதபடி யாரும் மோட்சம் அடைய முடியாது என்பார்கள் – “காயகல்பம் என்றால் என்ன…?”

 

துருவ மகரிஷியால் (அகஸ்தியர்) வெளிப்படுத்தப்பட்ட உணர்வின் ஆற்றல் போகரின் ஈர்ப்புக்குள் சிக்கிய பின் அந்த அணுவின் தன்மை அவருக்குள் விளைந்து அதன் வழி கொண்டு விண்ணுலகின் தன்மையை அறிந்துணரும் ஆற்றல் அதிகமாகப் பெற்றார்.

ஒவ்வொரு தாவர இனத்தின் சத்தினுடைய தன்மையைத் தான் நுகர்ந்தெடுத்து அது ஒவ்வொன்றையும் தனக்குள் சேர்த்து உண்மையின் நிலையை அறிந்துணர்ந்து வந்தார்.

மகரிஷிகள் அன்று கொடுத்த சில மெய்யினுடைய நிலைகள் பிற்காலத்தில் அரசர்களிடையே சிக்கப்பட்டு அது மாந்திரீகமாகச் சென்று விட்டது.

அதே போலத்தான் போகர் கொடுத்த ஆற்றலின் தன்மைகளையும் அவர் சொன்ன உண்மைகளையும் வாதங்கள்
1.அதாவது தங்கம் செய்வதற்கும்
2.விஷத்தின் தன்மை கொண்ட போதை மருந்துகளைக் கொடுத்து மயக்க நிலை ஏற்படுத்தினார் என்றும் திரித்து விட்டார்கள்.
3.(போகர் கஞ்சா குடித்தார் என்று சொல்வோரும் உண்டு)

போகர் கொடுத்த தத்துவத்தையே தலை கீழாக மாற்றி அவருடைய உண்மையினுடைய நிலைகளை மக்கள் அறியா வண்ணம் தடுத்து விட்டார்கள்.

போகர் பல ஆற்றல்களைத் தனக்குள் பெற்ற பின்
1.மனித உடல் பெற்ற நிலையில் உடலை விட்டுப் பிரியும் ஒரு உயிராத்மா
2.ஒளிச் சரீரம் பெறுவது எவ்வாறு…? என்று உணர்த்தி இருந்தார்.
3.ஆனாலும் அவர் சொன்னதைத் தன்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காக வேண்டி வைத்திய ரீதியாக எடுத்துக் கொண்டவர்கள்
4.காயகல்ப சித்தி செய்யாதபடி எவரும் மோட்சம் போக முடியாது என்று விவாதிப்பார்கள்.

தான் கண்டு கொண்ட மருத்துவ நிலையை வெளிப்படுத்திய பின் அதில் ஏதாவது கொஞ்சம் வந்துவிட்டது என்று சொன்னால் இந்த மருந்து அதைச் செய்யும்… இதைச் செய்யும்…! என்றெல்லாம் சொல்வார்கள்.

ஏனென்றால் யாரோ அன்று எழுதி வைத்ததைச் சூட்சமமாகச் செய்த அந்த நிலைகளை கற்பனையைக் கூட்டி அதை இன்றும் வைத்து வாதாடிக் கொண்டு வைத்திய ரீதிகளுக்குப் (உடலுக்குத் தான்) பயன்படுத்துகிறார்கள்.

அன்று போகன் ஒவ்வொரு தாவர சத்தின் தன்மையையும் அதற்குள் இருக்கக் கூடிய சக்தியையும் நுகர்ந்து எடுத்தான். அதைத் தனக்குள் போகித்துக் கொண்டான். அதாவது அந்த ஆற்றலைத் தன் உயிராத்மாவில் சேர்த்துக் கொண்டான்.

1.ஒரு சக்தியை எடுத்தான் என்றால்
2.அந்த ஒரு நாள் முழுவதற்குமே அதைத் தனக்குள் கிரகித்து
3.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் முழுமையாக விளையச் செய்து
4.இப்படித்தான் ஒவ்வொன்றையும் போகன் அறிந்துணர்ந்தான்.

அவன் போகம் செய்தான் என்ற நிலையைப் பிற்காலத்தில் வந்தவர்கள் என்ன சொல்லிவிட்டார்கள்…?

ஒவ்வொரு பெண்ணையும் அவன் காதலித்தான். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெண்ணைக் காதலித்தான் என்று எழுதி விட்டார்கள். போகன் அறிந்துணர்ந்ததைப் பின்னாடி வந்தவர்கள் அவரை இழி நிலைப்படுத்தி விட்டார்கள்.

அத்தகைய நிலையிலிருந்து போகரைப் புலிப் பாணியார் காப்பாற்றினார் என்றும் சொல்வார்கள்.

புலிப் பாணியாருக்குப் பின் மடாதிபதிகளாக வந்தவர்கள் அவருடைய தத்துவத்தை எடுத்துக் கொண்டவர்கள் அவர் எழுதியதைத் திருத்தி இவர்களுக்குச் சாதகமாக எழுதிக் கொண்டார்கள்.

இன்றும் அதன் வழி கொண்டு
1.உடலைக் காயகல்பமாக்க வேண்டும்
2.அந்தச் சித்து பெறவேண்டும் இந்தச் சித்து பெறவேண்டும் என்று
3.உடலைக் காப்பது பற்றித்தான் அதிகமாகச் சொல்கிறார்களே தவிர
4.விண்ணின் ஆற்றலை எடுத்துத் தன் உயிராத்மாவை ஒளியாக்க வேண்டும் என்று
5.அந்தப் போகமாமகரிஷி சொன்ன நிலையை விட்டு விட்டார்கள்

யாருமே உடலைக் காக்க முடியாது. ஆனால் இந்த உடலில் வாழும் காலத்தில் உடலை ஒரு கருவியாக வைத்து விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களைச் சேர்த்து உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்று
1.என்றும் ஒளியின் சுடராக அழியாத நிலைகள் கொண்டு வாழ்வதே
2.காயகல்ப சித்தி என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply