நரபலி கொடுக்கும் இடத்தில் யாம் பெற்ற முழுமையான அனுபவம் – மந்திரக்காரர்களின் கையில் யாரும் சிக்காதீர்கள்…!

Kali mantra magic

நரபலி கொடுக்கும் இடத்தில் யாம் பெற்ற முழுமையான அனுபவம் – மந்திரக்காரர்களின் கையில் யாரும் சிக்காதீர்கள்…!

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் வாழ்நாளில் பல சக்திகளைப் பெற்றார். பல அனுபவங்களையும் பெற்றார். அகண்ட அண்டத்தின் நிலை இந்தப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) எவ்வாறு வந்ததென்ற உண்மையை உணர்ந்தார்.

அவ்வாறு அவர் பெற்ற உண்மையை உணர்த்துவதற்காகப் பல மலைப் பகுதிகளுக்கு எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்றார்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்…? அவர்கள் உடல்களிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அந்த மலைப் பகுதியில் எவ்வாறு பதிந்தும் பரவியும் இருக்கிறது என்ற உண்மையை உணரச் செய்வதற்காக அங்கே போகச் சொன்னார்.

ஒரு பக்கம் ஒரு மலைப் பகுதியில் வாழும் மக்கள் இன்னொரு மலைப் பகுதிக்குச் சென்றால் அங்கு வாழும் மக்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

ஏனென்றால் நம் பகுதிக்கு அவர்கள் வந்து விட்டால் தனக்கு உணவு கிடைக்காது என்று அவர்களைத் தாக்கித் துரத்தி விடுவார்கள். இப்போது எப்படி எல்லைப் பகுதியில் நாட்டுக்கு நாடு போர் முறைகள் உள்ளதோ இதே போலத் தான் ஆரம்ப நிலைகளிலும் இருந்தது.

இதே போல மிருக இனங்களிலும் ஒரு பகுதியில் வாழும் மிருகங்கள் இன்னொரு பகுதிக்குச் சென்றால் அந்தப் பகுதியில் வாழும் மிருகங்கள் இதை விடுவதில்லை. அவ்வாறு தான் மனிதனும் வாழ்ந்தான் வளர்ந்தான்.

மிருகங்கள் வலு இழந்ததைத் தாக்கிக் கொல்கிறது. உதாரணமாக ஒரு ஆட்டை ஒரு நரி கொன்றது என்றால் ஆட்டின் உயிரான்மா நரியின் உடலுக்குள் புகுந்து அது நரியாக உருப்பெறுகின்றது.

அதே சமயத்தில் மலைப் பகுதியில் வாழும் இந்த மனிதர்கள் அடுத்த பகுதி மக்கள் தன் பகுதிக்குள் வந்த பின் அவர்களைத் துரத்துகின்றனர். போகவில்லை என்றால் அடித்துக் கொல்கின்றனர்.

கொன்ற பின் கொன்றவன் உடலுக்குள் இறந்தவனின் ஆன்மா புகுந்து அவன் உடல்களிலே பல தீமைகளை உருவாக்கி அவனுக்குள் வெறி கொண்டு தாக்கும் உணர்வுகள் பரவுகின்றது. அந்த உணர்வலைகள் அங்கே அவர்கள் வாழும் இடங்களிலும் படருகின்றது. அப்படி விளைந்த பின்
1,இன்னொரு உடலுக்குள் சென்று இவனை எப்படிப் பழி தீர்த்தானோ
2.இதைப் போல பழி தீர்க்கும் உணர்வுகள் கொண்டு அவனை ஆட்டிப் படைப்பதும்
3.பல உயிரினங்களைப் பலி கொடுப்பதும் பல மனிதர்களைப் பலி கொடுப்பதும் போன்ற நிலைகள் வருகின்றது.

இந்த உண்மையை உணர்த்துவதற்காகத்தான் எம்மை அஸ்ஸாம் பகுதிக்கு அழைத்துச் சென்றார் குருநாதர். அங்கிருக்கும் மலைவாசிகள் கையில் நான் சிக்கிக் கொண்டேன். எனக்கு மரியாதை செலுத்தி அங்கே அழைத்துச் சென்று உணவும் கொடுத்தார்கள்.

முதலில் மரியாதை கொடுத்து அழைத்துச் சென்றவர்கள் பின் என்னை ஒரு மரத்தில் இறுகக் கட்டிவிட்டார்கள். படுக்கவும் முடியாது, உறங்கவும் முடியாது.

உணவைக் கொடுத்து அவர்கள் பாஷையில் என்னென்னமோ சொல்லுகின்றனர்… கத்துகின்றனர்… கூத்தாடுகின்றனர். இன்னும் என்னென்னமோ செய்கின்றனர். “தெய்வத்தை இவன் எப்படி வணங்குகிறான்…? பார்…!” என்று குருநாதர் காட்டுகின்றார்.

தெய்வத்திற்கு நிம்மதி பெறச் செய்ய ஒரு மனிதனைப் பலி கொடுத்து அவன் வாழும் பகுதிகளில் இந்தத் தசைகளைத் தூவிக் கடும் பூதங்களுக்கு இதை உணவாகக் கொடுத்து விட்டால் தீய வினைகள் வராதபடி “நம் ஊரைக் காக்கும்…!” என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்கின்றனர்.

மனிதனாகப் பிறந்த பின் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இன்னொரு மனிதனையே கொன்று அங்கே எவ்வாறு செயல்படுத்துகின்றனர் என்று உணர்த்துகின்றார்.

அப்போது அவர்கள் செய்வதையெல்லாம் உற்று நோக்கி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதனை நான் உணரும் பொழுது அச்சுறுத்தும் நிலையாகி அஞ்சி வாழும் உணர்வுகளே எனக்குள் வளருகிறது.

எம்மைக் கொன்று விடுவார் என்ற உணர்வு ஓங்குகின்றது. ஆனால் அதே சமயம் காட்டுப் பகுதிக்குள் செல்லும் போது தன்னைக் காத்துக் கொள்ளும் சக்தியைக் குருநாதர் கொடுத்திருந்தார். ஆனால் பயத்தின் காரணமாக என்னால் அதைப் பயன்படுத்த முடியவில்லை.

கடும் தொல்லைகளுக்கு எம்மை அவர்கள் ஆளாக்கவில்லை. ஆனால் கட்டி வைத்து உணவு கொடுத்து என்னமோ கூத்தாடுகின்றார்கள். நாளாக நாளாக இவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியது.

ஆனாலும் பயத்தின் காரணமாக அதிலிருந்து மீள்வதற்குண்டான உபாயங்களை என்னால் நுகர முடியாதபடி வாடுகின்றேன்… வேதனைப்படுகிறேன்…!

அப்போது தான் குருநாதர் மீண்டும் காட்சி கொடுத்தார். மனிதனானபின் மனிதனையே எப்படிப் பலியிட்டு அந்த ஊரைக் காக்க முயற்சிக்கிறான் என்பதனை இங்கே பார்த்தாய் அல்லவா…!

விஞ்ஞான அறிவு கொண்ட நகர்ப்புற வாழ்க்கையிலும்…. காளிக்குத் தன் மக்களையே பலியிட்டு அவன் செல்வம் தேடுவதற்கு எவ்வாறு செய்கின்றான் என்பதைப் பார்… என்று அதையும் காட்டுகிறார்.

தெய்வத்தின் மீது கொண்ட பக்தியால் தனக்குச் செல்வமும் செல்வாக்கும் பெற வேண்டும் என்பதற்காகத் தன் குழந்தையையே பலியிடத் துணிகின்றான்.

புதிதாக வீடு கட்டும் பொழுது அங்கே சுகமாகச் செல்வச் செழிப்பாக வாழ வேண்டும்… மகிழ்ச்சியாக இருக்கவேண்டு…ம் என்பதற்காக வேண்டி மந்திரவாதிகள் கூறியபடி ஒன்றுமறியாதை குழந்தைகளைப் பலி கொடுக்கின்றார்கள்.

அதாவது தன் வீட்டிற்கு அறியாத இடத்திலிருந்து குழந்தைகளை அழைத்து வந்து
1.“வீடு கட்ட வானம் (குழி) தோண்டும் போது…
2.அங்கே குழந்தையை எப்படிப் பலியிடுகின்றனர்…! என்பதனை உணர்த்துகின்றார்.

ஏனென்றால் வீடு கட்டுபவரோ மந்திரவாதி சொல்லும் இந்த நிலைகளை நம்புகின்றார். மந்திரவாதி சொன்னதை வைத்து மற்றொரு குழந்தையைப் பலியிட்டு இவர் வீட்டை எழுப்புகிறார்.

ஆனால் மந்திரவாதி குழந்தையை எதற்காகக் குழந்தையைப் பலியிடுகிறான்…? எலிகளுக்கு மையைத் தடவி மந்திர ஒலிகளைக் கூட்டிய பின் அது ஒரு சீட்டை எடுத்துக் கொடுக்கின்றது (ஜோதிடம் சொல்பவர்கள்).

இதை போல தான் கற்றுக் கொண்ட மந்திரத்தின் தன்மை கொண்டு அந்தக் குழந்தையைக் கொல்லப்படும் பொழுது அதன் உடலில் பாய்ச்சி இவன் (மந்திரவாதியின்) நினைவு வரும் போது அதை அடக்கிக் கவர்ந்து கொள்கிறான்.

பல மந்திர வேலைகளைச் செய்வதற்கு இவர்களைக் கருவியாக வைத்து மற்றவர்களையும் கொன்று குவிக்கின்றான்.

வீடு கட்டுபவரோ தன்னுடைய ஆசை கொண்டு மற்ற குழந்தைகளை பலியிட்டுத் தன் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றான். மந்திரவாதி அவன் ஆசைப்படி குழந்தைகளைப் பலி கொடுத்துக் கொல்கிறான். இன்று உலகில் பெரும்பகுதியான இடங்களில் இது தான் நடக்கின்றது.

நம் நாடு மட்டுமல்ல…! நாகரீக வாழ்க்கை வாழ்ந்து விஞ்ஞான அறிவு கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நகரப் புறங்களிலும் இதை விட மோசமாக நடக்கிறது என்பதனை அங்கே காட்டுவாசிகளிடம் சிக்குண்டு இருக்கும் போது உலகில் எந்தெந்தப் பகுதிகளில் எவ்வாறெல்லாம் நடக்கின்றது என்று அதை எல்லாம் நுகரும்படி செய்கின்றார். காட்சியாகவும் கொடுக்கின்றார்.

இன்றும் நீங்கள் பத்திரிகை வாயிலாகவோ டி.வி மூலமாக இதைப் போன்ற நிலைகள் உலகில் நடப்பதைப் பார்த்திருப்பீர்கள் படித்திருப்பீர்கள்…!

எனக்கு வேண்டாதவர்கள் செய்வினை செய்திருக்கிறார்கள்…! எனக்குப் பல தொல்லைகள் கொடுக்கின்றார்கள் என்று மந்திரவாதிகளை அழைத்து வந்து அவர் கூறும் மந்திரத்தை ஜெபித்தால் நமக்குப் பாதுகாப்பு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் மந்திரத்தால் பிணிகளைப் போக்குவோம் என்றும் மந்திரத்தை ஜெபித்தால் உடல் சுகமாகும் நீ வீட்டில் வைத்து இதை ஜெபி உனக்கு நன்மை வரும் என்று சொல்வார்கள்.

அதன் மீது நம்பிக்கை கொண்டு அவன் கூறும் மந்திரத்தைக் கேட்டுணர்ந்து அதை ஜெபிப்பார்கள். அந்த மந்திர ஒலிகள் உடலில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. ஆனால் இந்த உணர்வுகள் இங்கே பதிவானபின் துயரங்கள் அதிகரித்த பின் துரிதமாக மடியத்தான் நேருகிறது.

அவர்கள் மடிந்ததும் எந்த மந்திரத்தை அவர்கள் ஜெபித்தார்களோ அந்த உயிரான்மா வெளி வரும்போது அதைத் தனக்குள் கைவல்யப்படுத்தித் தன் மந்திரத்தை ஊக்குவித்து மற்றவர்களை மதி மயக்கச் செய்து “தான் பெரும் சக்தி வாய்ந்தவன்…!” என்று வெளியிலே காட்டிக் கொண்டு செல்வத்தைப் பெருக்கும் நிலையாகத் தன் உடல் இச்சைக்காக அவனும் இந்தக் காரியத்தைச் செய்கின்றான்.

ஒரு ஆன்மாவை அவன் கைவல்யப்படுத்தினால் அதை வைத்துக் கடும் பூதங்களாகப் பிறரைக் கொல்லும் ஏவல் தன்மைக்கும் இதைப் பயன்படுத்துகிறான்.

1.இதை அறியாமல் இன்று வாழும் மக்கள்
2.தன் உடலைக் காத்துக் கொள்ள வேண்டும் செல்வத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
3.பிறர் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஆசை நிலைகளில் பிறிதொரு மந்திரத்தில் சிக்கி
4.அதனால் அந்தக் குடும்பமே கடும் வேதனைகளைச் சந்திக்கும் நிலை வருகின்றது.

இப்படி வளர்ச்சி பெற்ற நிலையில் இவர்கள் இறந்தாலும் மீண்டும் இதே போல மந்திரங்களை ஜபித்தால் இன்னொருவன் கைக்குத்தான் செல்ல முடிகிறதே தவிர அவர்களால் தன் உடலைக் காக்க முடிவதில்லை சுகத்தையும் காண முடிவதில்லை.

இப்படி மந்திரங்கள் நிலையில் சிக்குண்டு அடுத்த உடலுக்குள் ஏவல் செய்யப்பட்ட பின் இன்னொரு உடலுக்குள் புகுந்து அதையும் படாத பாடு படுத்தி அந்த உடலை வீழ்த்தி விட்டுக் கடும் விஷம் கொண்ட உணர்வுகளாக வெளி வந்து “மனிதல்லாத உருவைத்தான் பெறுகிறது…!” என்று காட்டுகிறார் குருநாதர்.

ஆப்பிரிக்க நாடுகளில் விஞ்ஞான அறிவு கொண்டு இருப்பினும் மற்ற உயிரினங்களின் இரத்தத்தைக் கையிலே தோய்த்து அதற்குண்டான மந்திரத்தைச் சொல்லி விட்டால் “இவர்கள் செய்த பாவமெல்லாம் போய்விடும்…!” என்று இப்படியும் வழிபடுகின்றனர் என்று காட்டுகின்றார்.

காட்டு விலங்குகள் போல மனிதனுக்கு மனிதன் மற்றொரு பகுதிகளில் இருப்போரை விலங்குகளைப் போன்று கொன்று புசிக்கும் நிலைகள் இன்றும் உண்டு.

கொல்லும் போது இன்னொரு உடலுக்குள் அவன் சென்று விடுகின்றான். பின் அவனும் இதே நிலையை அவன் உருவாக்குகிறான் என்பதனை அந்தக் காட்டுவாசிகளுடன் சிக்குண்ட நிலையில் 48 நாட்களில் ஒவ்வொன்றையும் உணர்த்துகின்றார் குருநாதர்.
1.உனக்கு மட்டும் இங்கே நிகழவில்லை.
2.உலகம் முழுவதற்கும் நடந்து கொண்டே உள்ளது.

இன்று எந்த ஆண்டவனை வணங்குகின்றனரோ அவர்கள் இதே போல மந்திரத்தை மனிதன் உடலில் செருகச் செய்து மதி மயங்கச் செய்து அந்த ஆன்மாவைக் கைவல்யப்படுத்துகின்றனர் என்பதனைத் தெளிவாக உணர்த்துகின்றார்.

அதிலிருந்து தப்பிக்கும் உபாயங்களை…
1.எவ்வழியில்… எதைச் செய்து… எப்படி வரலாம்…! என்று குருநாதர் கொடுத்த நிலை
2.அப்போது தான் மீண்டும் என் நினைவுக்கு வருகிறது.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நான் பெற வேண்டும் என்று இந்த உணர்வின் நினைவுகள் வருகின்றது.

அந்த உணர்வின் தன்மை நான் பெற்ற பின் அவர்களின் நஞ்சு கொண்ட உணர்வுகள் எல்லாம் மறைகின்றது. என்னை அவர்களால் பார்க்க முடியவில்லை. என்னைக் கட்டியிருந்து கட்டுகள் அனைத்தும் கழன்று விடுகின்றது.
1.அவர்களுக்கு முன்னாடி நான் நடந்து சென்றாலும்
2.அவர்களால் அதை அறிய முடியவில்லை.

அனுபவபூர்வமாக யாம் கண்டுணர்ந்த உண்மைகள் இது. நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். மந்திரக்காரர்கள் கையில் யாரும் சிக்காதீர்கள்.

Leave a Reply