மகரிஷிகளைப் பற்றிய உண்மை நிலைகள்

Inner eye awakening

மகரிஷிகளைப் பற்றிய உண்மை நிலைகள் 

உதாரணமாக ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்தி அது மின் அணுவின் தன்மை கொண்டது. அது மிகவும் நஞ்சு கொண்டது.

நம் பிரபஞ்சம் சுழன்று வரப்படும் போது அந்தச் சுழற்சியின் நிலைகளில் முன்னணியில் இருப்பது இந்த 27 நட்சத்திரங்கள் தான்.

அகண்ட பேரண்டத்தில் பிற மண்டலங்களிலிருந்து வரும் சக்திகளை இந்த நட்சத்திரங்கள் கவர்ந்து தன் கதிரியக்கச் சக்திகளை அதிலே பாய்ச்சி அதை நம் சூரியக் குடும்பத்திற்குப் பாதுகாப்புக் கவசமாக பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.

அதாவது 27 நட்சத்திரங்களும் தனக்குள் எடுத்து கொள்ளும் அந்தப் பேரண்டத்தின் ஆற்றல்களைத் தன் நஞ்சின் தன்மையால் வீழ்த்தி இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்றதாக மாற்றுகின்றது.

மாற்றிய நிலைகள் சிறுகச் சிறுகப் பிரபஞ்சத்தின் ஈர்ப்புக்குள் வரும் போது அது படர்ந்து… தேய்ந்து… தூசுகளாகப் படர்ந்து வருவதை… மற்ற கோள்கள் நுகர்ந்து உணவாக எடுத்துப் பாறைகளாக மாற்றுகின்றது.

அந்தக் கோள்கள் உமிழ்த்தும் சக்திகளைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதிலுள்ள நஞ்சினைப் பிரித்து ஒளியாக மாற்றுகின்றது. (நம் பூமியில் அதை வெயிலாகக் காணுகின்றோம்)

ஆனால் 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் தூசிகள் துகள்கள் வேறு எதிலும் சிக்காது நம் புவியின் ஈர்ப்புக்குள் வந்தால் நம் பூமிக்குள் (மண்ணுக்குள்) பதிந்துவிடுகின்றது,

பின் விண்ணில் இருந்து வரும் எந்த நஞ்சின் தன்மையை எந்த நட்சத்திரத்தின் தன்மையால் அது உருவானதோ அதனின்று வெளிப்படும் உணர்வின் சத்தை இது வலு கொண்டு கவர்ந்து கருக்களாக உருவாகின்றது.

கருவான பின் அதே நட்சத்திரத்தின் ஆற்றலைச் சுவாசித்து வளர்ச்சி அடைந்து அதனுடைய அளவுகோல் (பருவம்) வந்த பின் வெடித்துத் தனித்த வைரமாக விளைகின்றது.

இதைப் போன்று தான் ஒரு நஞ்சு கொண்ட பாம்பினமும் மற்ற உயிரினங்களைத் தாக்கி அதற்குள் நஞ்சைப் பாய்ச்சி அதனின் சத்தை உணவாக எடுத்துக் கொள்கிறது. கவர்ந்த உயிரினத்தின் நஞ்சின் விளைவுகள் பாம்புக்குள் அதிகரிக்கின்றது. இவ்வாறு
1.எத்தனை உயிரினங்களின் மேல் தன் நஞ்சினைப் பாய்ச்சிப் பாய்ச்சி உணவாக எடுத்ததோ
2.அது (உணவு) தன் உடலுக்குள் வந்த பின் திரும்பத் திரும்ப அதை வடிகட்டி
3.ஆகாரத்துடன் கலந்து உடலிலே நஞ்சின் தன்மை அதிகமாக விளைந்து விளைந்து
4.பின் அந்த நஞ்சே உறைந்து “நாகரத்தினமாக…!” உருவாகின்றது.

யானைகளுக்கும் இதைப் போல ஒரு முத்து வளரும். சிறுகச் சிறுகத் தான் சிந்தித்த உணர்வின் தன்மை சுவாசித்த பின் யானையின் சிரசிலே இதைப்போல விளையும். அதை யானை மதக்கல் என்பார்கள்.

200 வருடம் 300 வருடம் ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் அத்தகைய மனிதனுக்குள்ளும் (புருவ மத்தியில்) இதைப்போல விளையும். இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

ஆனால் மகரிஷிகளோ விண்ணின் ஆற்றலைத் தனக்குள் சுவாசித்துத் தன் உணர்வுள் அனைத்தையும் உயிருடன் ஒன்றிய உணர்வின் சத்தாக ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள்.

எந்த நஞ்சின் தன்மையும் தன்னைத் தாக்காது உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டு இருப்பவன் அகஸ்தியன். நம் பூமியிலிருந்து விண் சென்ற முதல் மனிதன் அவன் தான்…!

ஒரு நட்சத்திரத்தின் துகள் மண்ணுக்குள் கருவான பின் மற்ற நிலைகளைப் பிரித்துத் தன் உணர்வின் சத்தைக் கவர்ந்து ஒளியாக எடுத்து ஒளியின் சுடராக… “வைரமாக…!” விளைகின்றது.

அதைப்போல மனிதனாக வாழ்ந்த காலத்தில் வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக விளைந்தவர்கள் மகரிஷிகள்.

அதாவது விண்ணிலிருந்து வரக்கூடிய நிலையை நட்சத்திரங்கள் தன் கதிரியக்கச் சக்தியைப் பாய்ச்சி அதனைச் செயலற்றதாக்கி இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்றதாக அதை உணவாக எப்படி மாற்றுகின்றதோ இதைப்போல
1.மகரிஷிகள் அந்த விண்ணின் ஆற்றல்களைக் கவர்ந்து தனக்குள் தெளிந்த நிலையாகப் பெற்று
2.இதைக் காட்டிலும் நஞ்சான நிலைகள் எதுவும் இல்லை என்ற நிலையில்
3.அந்த நஞ்சின் தன்மையைத் தனக்குள் உணவாக எடுத்து
4.அதனின் உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி
5.என்றும் எதுவும் தன்னை அசைத்திடாத நிலைகள் கொண்டு
6..”என்றும் பதினாறு” என்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.

அந்த எல்லையை அடையும் மார்க்கத்தைத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார். அதைத் தான் உங்களிடமும் சொல்லிக் கொண்டே வருகின்றோம்…!

Leave a Reply