மகரிஷிகள் பெற்ற ஆற்றல்களையும் சக்திகளையும் உபதேச வாயிலாகத்தான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்

Trust yourself (3)

மகரிஷிகள் பெற்ற ஆற்றல்களையும் சக்திகளையும் “உபதேச வாயிலாகத்தான் உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்…!” – ஞானகுரு

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் மனிதராக வாழ்ந்த அகஸ்தியன் தன் வாழ்க்கையில் வந்த உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய நிலை கொண்டு இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அவனைப் பின்பற்றி அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட ஒளியான உணர்வுகளைக் கவர்ந்தவர்கள் அனைவருமே முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள்.

ஏனென்றால் இதை ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நிலைகளுக்கும் சொல்லியே ஆக வேண்டி வருகின்றது.

இன்றைக்கு நாம் ஒரு வித்தை விதைத்து விட்டால் அதற்கு அந்தந்தக் காலப் பருவத்தில் உரமிட்டு அந்தந்தக் காலத்திற்குத் தக்க நீரை விடுகின்றோம்.

வித்தைப் போட்டு விட்டால் போதும்…! என்று அதனின் வளர்ச்சிக்குகந்த நிலைகளை அவ்வப்பொழுது நாம் செயல்படுத்தவில்லை என்றால்
1.போட்ட விதைகள் அனைத்தும் வீணாகிப் போகும்.
2.சரியான விளைச்சலையும் காண முடியாது.
3.விதைகள் இல்லை என்றால் மீண்டும் முளைக்க வைக்கவும் முடியாது.
(இது எல்லோருக்கும் தெரிந்தது தான் யாம் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை)

அதைப் போன்று தான் ஞானிகளின் உணர்வின் இயக்கங்களை
1.மீண்டும் மீண்டும் எண்ணங்களாக உங்களுக்குள் தூண்டப்படும் போது நீர் ஊற்றுவது போலவும்
2.ஞானிகளின் இயக்கத்தின் ஆற்றல்களை உபதேச வாயிலாகச் சொல்லும்போது உரமிடுவது போன்றும் ஆகின்றது.

செடிகளுக்கு உரத்தை இணைத்த பின் அது வலுபெற்று தன் இனமான சத்தைக் கவர்ந்து செழித்து வளர்கின்றது. உரத்தின் ஆற்றல் இருக்கும் வரையிலும் செடி தன் சத்தைக் கவர்கின்றது.

உரத்தின் ஆற்றல் தணியப்படும் போது செடி மீண்டும் அது வாடுகின்றது. மறு முறை அதற்கு உரமிட்டவுடன் மீண்டும் தளிர்த்து எழுகின்றது.

விஞ்ஞானத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பேட்டரியில் உள்ள மின் ஆற்றல் அது குறையும் பொழுதெல்லாம் மீண்டும் மீண்டும் அதற்குள் மின்சாரத்தை ஏற்றிக் கொடுக்க வேண்டும்.

இதைப் போன்று தான் உபதேசிப்பதை ஒரு முறை கேட்டுணர்ந்தாலும் பதிந்த நிலைகள் கொண்டு அடிக்கடி இதைப் பற்றிய எண்ணங்கள் வரப்போகும் போது அது நீராக மாறுகின்றது.

அவ்வாறு நீராக அது வந்தாலும் அந்த மகரிஷிகள் பெற்ற அருள் உணர்வின் தன்மைகளை மீண்டும் மீண்டும் உணர்வலைகளாக உங்களுக்குள் படரச் செய்யும் போது அது உங்களுக்குள் உரமாக ஆகின்றது.

அந்த மகரிஷிகள் உடலில் ஒளியின் சரீரமாக ஆகும் உணர்வுகள் எவ்வாறு விளைந்ததோ அதைப் போல நமக்குள்ளும் அது விளையத் தொடங்கும்.

ஆக சாதாரண மக்களாக நாம் இருப்பினும் ஒரு முறை பதிவு செய்ததை மறு முறை இயக்கப்படும் போது
1.அந்த மகரிஷியைப் போன்ற உணர்வின் இயக்கங்களாக நமக்குள் இயங்கி
2.அதைப் பற்று கொண்டு நாம் தியானிக்கும் பொழுது
3.செழித்து ஓங்கும் உணர்வாக நமக்குள் விளைகின்றது.

ஆகவே வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் மனதில் சோர்வும் உடலில் வேதனையும் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் இந்த உபதேசங்களைப் படித்துப் பாருங்கள். “உங்களை உற்சாகப்படுத்தும் சக்தி… அதிலிருந்து தன்னாலே வரும்…!”

அதற்காக வேண்டித்தான் இதைச் சொல்வது.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply