ஞானிகளிடமோ மகரிஷிகளிடமோ மந்திரம் இல்லை – மந்திர ஒலிகளை உருவாக்கியவர்களே அன்றைய அரசர்கள்தான்…! – அந்த மந்திர ஒலிகளைத்தான் தெய்வம் என்று இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்

Mantra

ஞானிகளிடமோ மகரிஷிகளிடமோ மந்திரம் இல்லை – மந்திர ஒலிகளை உருவாக்கியவர்களே அன்றைய அரசர்கள்தான்…! – அந்த மந்திர ஒலிகளைத்தான் தெய்வம் என்று இன்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்

 

அணுவின் இயக்கத்தையும் அண்டத்தின் இயக்கத்தையும் அறிந்த மெய் ஞானிகள் ஒன்றுடன் ஒன்று மோதி… மோதி… மோதி… இயற்கை எவ்வாறு இயங்குகிறது… இயக்குகிறது…? என்பதை அறிந்து ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக ஆனார்கள்.

தனக்குப் பின் வரும் மனிதர்களும் அத்தகைய நிலைகள் பெறவேண்டும் என்ற நிலைகளில் காவியங்களாகத் தெளிவாகக் காட்டியிருந்தாலும் அதை எல்லாம் அன்றாண்ட அரசர்கள் மறைத்து விட்டு
1.”நீ இறைவனை வணங்கினால் அவனைப் போய் அடையலாம்…”
2.உன் தொழிலில் எதுவோ அதை நீ செய்…!
3.தீபஆராதனைகளும் அபிஷேகங்களும் செய்து தெய்வத்திற்கு வேண்டிய பலகாரம் பட்சணங்களை எல்லாம் செய்து படைத்தாய் என்றால்
4.அந்தத் தெய்வம் உன்னை நல்ல இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்று
5.நம் அனைவரையும் திசை மாற்றி விட்டார்கள்…!

இன்றும் நாம் அரசர்கள் மாற்றிய வழிகளில் தான் ஆலயங்களுக்குச் சென்று அர்ச்சனை செய்து கொண்டிருக்கின்றோம். அதிகமான கஷ்டங்கள் ஏற்பட்டால் யாக வேள்விகளை நடத்தி அந்தக் கஷ்டங்களை போக்கும் நிலையாகச் செயல்படுத்துகின்றோம்.

அதே சமயத்தில் அவரவர்கள் நட்சத்திரத்தின் பேரைச் சொல்லி ஆலயத்தில் அர்ச்சனைகள் செய்து அதற்குண்டான மந்திர ஒலிகளை ஜெபித்தால் கஷ்டத்தில் இருந்து விடுபடுவோம் என்று செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் அந்த மந்திர ஒலிகளை உருவாக்கியதே அந்த அரசர்கள் தான்…! அந்த மந்திர ஒலிகள் கொண்டு மாற்று அரசர்களை அடக்கிடவும் அவர்கள் ஆண்ட நாடுகள் எல்லாம் எனக்குக் கீழ் வந்து விட்டால்
1.எதிரியே இல்லாத நிலைகளில் நான் “சக்கரவரத்தியாக…” வாழ்வேன்
2.குடிமக்களை அனைவரையும் “நான் வளரச் செய்வேன்…!” என்ற இந்த இறுமாப்பு பூண்டு
3.பேராசை கொண்டு மகரிஷிகள் உணர்த்திய மெய் உணர்வுகளை நாம் அறியாதபடி தடைபடுத்தி விட்டார்கள்.
4.தன்னையே (அரசனையே) கடவுளாக்கி அவனைப் போற்றித் துதிக்கும் நிலைக்கு
5.மதம் என்ற பெயரில் மக்களை எல்லாம் அடிமைப் படுத்திவிட்டார்கள்.

இவ்வாறு செயல்பட்டுத் தான் வகுத்து கொண்ட சட்டத்தை முன் வைத்து “தெய்வம் இதைத்தான் தான் சொல்கிறது…! என்றும் நம் கடவுளுக்கு இது உகந்தது… இது ஆகாதது… அதனால் ஆண்டவன் தண்டிப்பான்…!” என்று மக்களை எல்லாம் இப்படி முடுக்கி விட்டு அரசர்கள் சொல்லும் மந்திரமே அந்த ஆண்டவனின் சக்தி என்று உருமாற்றி வைத்துவிட்டார்கள்.

இப்படி உருமாற்றிய இந்த மந்திரங்களைப் பதிவாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டு கடைசியில் நாம் இறந்தபின் அதே மந்திர ஒலிகளை எழுப்பி நம் உடலில் விளைந்த உணர்வுகளைக் கவர்ந்து சென்று அதைச் சக்தி வாய்ந்ததாக மாற்றி அறிதல் அழித்தல் காத்தல் என்ற நிலைகளுக்கு அன்று அரசன் பயன்படுத்திக் கொண்டான்.

அதாவது காத்திடும் உணர்வு கொண்ட நிலைக்காக ஒரு மந்திரத்தைச் சொல்லி அவனைக் காத்திடும் உணர்வாக அவன் சேர்ப்பித்து “தன்னைப் பாதுகாக்கும் நிலையாக எடுத்துக் கொள்கிறான்…!”

அதே சமயம் ஒரு மனிதனைக் குரோதம் கொண்டு அழிக்கும் நிலைகளாக பில்லி சூனியம் என்று அதற்கென்று மந்திர ஒலிகளை எழுப்பி “அவனை முடக்கச் செய்துவிடுகின்றார்கள்…!”

மற்றவருடைய நிலைகளை அறிதல் என்ற நிலையில் எவனாவது வருகிறானா (எதிரிகளை) என்று அதற்கொரு மந்திரத்தைச் சொலி “அறிந்து கொண்டார்கள்…!”

அதாவது தனக்குக் கீழே வாழும் குடிமக்களின் இறந்த ஆன்மாக்களை மந்திர ஒலியால் கவர்ந்து கொண்டு தன்னைக் காத்துச் சுகபோகமாக வாழும் நிலைக்காக அன்று அரசர்கள் செய்தார்கள்.

இன்று எந்த மதமாக இருந்தாலும் சரி. வேதங்கள் என்று சொன்னாலும் சரி. மந்திரம் இல்லாத மதமே இல்லை…! என்று வைத்துக் கொள்ளலாம்.

1.ஆனால் ஞானிகளிடமோ மகரிஷிகளிடமோ மந்திரம் இல்லை.
2.நினைவின் ஆற்றலைத் தனக்குள் உயர்த்தி
3.உணர்வின் ஆற்றலை நேரடியாக அறிந்து உணர்ந்தவர் அகஸ்திய மாமகரிஷி.

அரசர்கள் போர் முறைகளில் எதிரிகளை வீழ்த்திட வேண்டும் என்ற உணர்வை மனிதனுக்குள் விளைய வைத்து தன் மதத்தைக் காக்கப் போகின்றேன்… தன் தெய்வத்தைக் காக்கப் போகின்றேன்…! என்று சொல்லிக் கொண்டு பச்சிளம் குழந்தைகளாக இருந்தாலும் ஈவு இரக்கமற்ற நிலைகள் கொண்டு கொன்று குவித்தார்கள்.

இப்படி வெறித்தன்மையாகச் செயல்படுத்திய நிலைகள் அந்தந்த உடல்களிலே வெளிப்பட்ட உணர்வுகள் அனைத்தும் சிறுகச் சிறுகச் சேர்ந்து காற்று மண்டலத்தில் அதிகமாகப் பரவியது.

ஞானிகளாலும் மகரிஷிகளாலும் அவர் உடலிலே விளைவித்த தீமைகளை அழித்திடும் உணர்வுகள் இங்கே இருப்பினும் அதை நுகரவிடாது மனிதனுக்குள் விளைந்த தீமையின் உணர்வுகளும் மனிதனுக்கு மனிதன் அழித்திடும் (பழிதீர்க்கும்) உணர்வுகளும் அதிக அளவில் படர்ந்து விட்டது.

இன்று நாம் சுவாசிக்கும் இந்தக் காற்று மண்டலமே நஞ்சு கொண்டதாக ஆகி வளர்ச்சியின் பாதையில் வந்த நம் பூமியின் நிலைகளே மாறி மனிதனுக்கு மனிதன் இரக்கமற்றுக் கொன்று அதை ரசித்திடும் நிலைகளுக்கு வந்துவிட்டது.

மிருகங்களும் மற்ற உயிரினங்களும் தான் உணவுக்காக மற்ற உடலைக் கொன்று அதை ரசித்து உணவாகப் புசித்து வாழும்.

அதைப் போன்று தான் அரசர்கள் அன்று வித்திட்ட நிலைகள் தன் இச்சைக்காகப் பச்சிளம் குழந்தை என்றாலும் தீயிட்டுக் கொளுத்துவதும் மாற்று மதத்தான் என்று தெரிந்தால் அந்தச் சிசுக்களையும் அழித்திடும் நிலை இன்று உருவாகிவிட்டது.

இந்த உணர்வுகள் அபரிதமாக வெளிப்பட வெளிப்பட சூரியனின் காந்தப் புலனறிவுகள் அதைக் கவர்ந்து பூமியிலே அலைகளாகப் படரச் செய்து இன்று உலகம் முழுவதும் இந்த நிலை ஆகிவிட்டது.

ஆகவே இப்போது வலு கொண்ட மனிதன் சாதாரண மனிதன் சம்பாதித்து வைத்து இருந்தால் அவனைக் கொன்று அவன் பொருள்களை அபகரித்துச் சென்று மகிழும் நிலையும் இரக்கமும் ஈகையுமற்ற செயல்கள் இன்று நடைபெறுகின்றது.

உலகெங்கிலும் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி – இரக்கமற்ற செயல்களைச் செய்து அதைக் கண்டு ரசிக்கும் நிலை வந்துவிட்டது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து தப்ப வேண்டும் என்றால் மகரிஷிகளின் உணர்வை எடுத்து நம் உடலுக்குள் விளைய வைத்தே ஆக வேண்டும்.
1.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் காக்க வேண்டும்
2.தீமைகள் நமக்குள் புகாமல் தடுக்க வேண்டும் என்றால்
3.மகரிஷிகள் உணர்வை ஒரு பாதுகாப்பு வளையமாக நாம் உருவாக்கியே ஆக வேண்டும்.

Leave a Reply