இன்றைய உலகில் எது மெய்…? எது பொய்…? என்று நாம் உணரும் வழி

vedavyasa

இன்றைய உலகில் எது மெய்…? எது பொய்…? என்று நாம் உணரும் வழி 

அத்வைதத்திற்கும் விசிஷ்டாத்வைதத்திற்கும் இரண்டு பேருக்கும் சண்டை. இது தான் உண்மை…! இல்லை… இது தான் உண்மை…! என்று.

அடுத்துப் பார்த்தால் அத்வைதம் தான் உண்மை…! இல்லை… துவைதம் தான் உண்மை….! என்று இதிலேயும் சண்டை.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அந்த மெய்ப் பொருள் காணும் நிலைகளை அன்று ஞானிகள் காட்டி இருந்தாலும்
1.இன்று நான் தெரிந்து கொண்டது தான் பெரிது…
2.இல்லை இல்லை…! நான் தெரிந்து கொண்டது தான் பெரிது…! என்று
3.ஒருவருக்கொருவர் போர் செய்யும் நிலைகளில் தான் ஆன்மீகம் உள்ளது.

இதில் வல்லமை எப்படி வருகிறது…? வாய் வன்மை (சொல் வலிமை) இருந்தது என்றால் அவர் சொல்வது தான் பெரிது.
1.வாய்மையின் தன்மையை வன்மையாக்கி
2.வன்மையின் தன்மையைத் தான் நாம் பெரிதாக்கி விடுகின்றோம்.
3.இன்று உலகில் இருக்கக்கூடிய தன்மைகள் இது தான்.

ஒருவர் தவறு செய்து விட்டார் என்றால் அவர் தவறு செய்தார் என்று கற்பனை பண்ணியே போகும்.
1.தவறு செய்தவர்ககள் இதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்று
2.நாம் அதைத் திருப்பியே சொல்லி விடுவோம்.
3.அவன் தான் பொய் சொன்னான்…!
4.இல்லை இல்லை…! நீ தான் இப்படிச் சொன்னாய் என்று
5.இப்படி இரண்டும் ஒன்றாகிப் போய்விடும்…!
6.குற்றமில்லாதவரைக் குற்றமாக்கி விடுகிறோம்
7.குற்றம் செய்தவரைக் குற்றம் செய்யவில்லை என்கிறோம்.

இன்றைக்கு….. வேறு ஒன்றுமே வேண்டியதில்லை. ஒருவர் மோசமான போக்கிரியாக இருக்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். பல தவறுகளையும் செய்கிறார்.

தவறையெல்லாம் செய்துவிட்டு இங்கே உங்களுக்கு முன்னாடி வந்து
1.என்னைப் பார்…!
2.யாரிடமாவது கேள்…? நான் தவறு செய்தேனா….? என்று மட்டும் சொல்லச் சொல்லு பார்க்கலாம்….! என்று சொன்னால்
3.அவர் தவறு செய்தார்… என்று நீங்கள் சொல்வீர்களா….?
4.இந்த மாதிரி எல்லாம் நீ தவறு செய்திருக்கிறாய்… என்று அவருக்கு முன்னாடி நீங்கள் சொல்ல முடியுமா…?
5.உங்களால் முடியாது (ஏனென்றால் சொன்னால் அடுத்து நமக்குப் பல தொல்லைகள் கொடுப்பான் என்ற பயம் கண்டிப்பாக வரும்)

ஏனென்றால் நம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ அதற்கென்று ஒரு உணர்வுக்கு உணர்வு அஞ்சும் உணர்வுகள் வரும் – “நேரடியாக இருக்கும் போது…!” (ஆள் இல்லாத போது எல்லாம் பேசுவோம்…!)

ஒருவரிடம் நண்பராகப் பழகுகிறீர்கள். அவர் தன் வாழ்க்கையில் வரும் சிக்கல்களால் சங்கடப்படும் பொழுது அதை உங்களிடம் சொல்கிறார். அதைக் கேட்டு நீங்களும் சங்கடப்படுகின்றீர்கள். நண்பராக இருப்பதால் அவரைப் பார்க்கும் போதெல்லாம் அந்தச் சங்கடம் வரும்.

ஆனால் அதே சமயம் இன்னொரு நண்பர் நம்மிடம் வருகிறார். முதலில் சொன்ன நண்பரைப் பற்றிச் சொல்லத் தொடங்குவார். பார்..! அவர் ரொம்ப மோசமான ஆள். உன்னை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்.. என்று சொல்வார்.

இல்லை…! அவர் அப்படிப்பட்டவர் இல்லை நல்லவர் என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால் திருப்பித் திருப்பி அவர் மோசமான ஆள் மோசமான ஆள்…! நீங்கள் நினைப்பது போல் நல்லவரில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

இதை இப்படி இரண்டு தரம் பதிய வைத்துக் கொண்ட பின் அடுத்தாற்போல் ஏதாவது சிறு குறை ஏற்பட்டால் போதும்.

ஆஹா…! அன்றைக்கு இதனால் தான் “மோசமான ஆள்…!” என்று அவர் சொன்னார் போல.. என்று அந்த நண்பர் பதிவாக்கியது நினைவுக்கு வரும்.
1.அப்புறம் இந்த நண்பரைக் குறையான உணர்வுடனே தான் பார்க்கச் சொல்லும்.
2.அதற்குத் தகுந்த மாதிரியான சொல்லும் வரும்.
3.குறையின் உணர்வு அதிகமாகி நம்முடைய பார்வைகள் அவர் குறையாக்கும்.
4.நாமே இதை உற்பத்தி செய்து விடுகின்றோம்.

ஆக நம்மை அறியாதபடியே இந்தக் குறையை உருவாக்கி நமக்குள் குறைகளை வளர்த்து பல நிலைகளைச் செய்து விடுகின்றோம். நல்லதைப் பொல்லாததாக மாற்றி விடுகின்றோம். பொல்லாததை நல்லதாக்கிக் கொள்கின்றோம்…!

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. இதைப்போல நிலைகளில் இருந்து நாம் மீள்வது எப்போது…? எப்படி…? எது மெய் எது பொய் என்று எப்படி அறிவது…?

நம் வாழ்க்கையில் நம்மை அறியாமல் எத்தனையோ உணர்வுகள் நம் நல்ல எண்ணத்தை இருளாக்குகின்றது. அந்த இருளிலிருந்து விடுபடும் சக்திகளை நாம் பெறுவதற்காகத்தான் ஆலயங்களில் விளைக்கை வைத்துக் காட்டுகின்றார்கள்.

தீப ஆராதனை காட்டியதும் அங்கே மறைந்த பொருள்களை நாம் தெளிவாகப் பார்க்க முடிகின்றது.

1.தீபத்தைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது துவைதம்…!
2.தீபத்தின் வெளிச்சத்தால் இருள் மறைந்து அங்கே பொருள் தெரிவது போல எங்கள் வாழ்க்கையிலே பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி “அந்தச் சக்தியை” நமக்குள் சுவாசிக்க வேண்டும். – இது அத்வைதம்…!
3.பொருளறிந்து செயல்படும் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் அந்தப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் இந்த ஆலயம வரும் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று இதை எண்ணி எண்ணி நமக்குள் வளர்த்துக் கொண்டால் அந்தச் சக்திகள் நம் உடலுக்குள் விளைந்து… “உயிருடன் சேரும் பொழுது” விசிஷ்டாத்வைதம்…!

கண்ணுக்குப் புலப்படுவது துவைதம். சூட்சமமாக இருப்பது அத்வைதம். சூட்சமாக இருப்பதைக் கவரும் பொழுது அது உறைந்து உயிருடன் இணைந்து அதன் அறிவாக இயக்கப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம்.
1.அதாவது, அந்தச் சக்தியாக… “அதுவாகவே நாம் ஆகின்றோம்…!
2.ஆலயங்களில் காட்டப்பட்டுள்ள பேருண்மை இது.
3.ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள அந்தத் தெய்வ குணத்தை ஒவ்வொருவரும் வளர்ப்போம்
4.மெய் வழி சென்று மெய் ஞானம் பெற்று அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

 

Leave a Reply