விண்ணுலகம் செல்லும் மெய் வழி…!

 

Ursa major - Sabdharishi mandalam

விண்ணுலகம் செல்லும் மெய் வழி…!

சப்தரிஷிகள் அனைத்தும் தான் மனிதனாக இருந்து தன் உயிராத்மாவை “ஒளியாக மாற்றி”
1.விண்ணிலிருந்து வரக்கூடிய அனைத்துச் சக்திகளையும்
2.உணவாக எடுத்துத் தன் உடலாக மாற்றிக் கொண்டு
3.சப்தரிஷி மண்டலங்களக என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வின் அலைகள் அனைத்தும் இன்று விண்ணிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அதைத்தான் ரிஷியின் மகன் நாரதன். நாராயணனின் அபிமான புத்திரன் என்பார்கள்.

விண்ணுலகை அறிந்து ஆற்றல்மிக்க சக்தியாக வளர்ந்த அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய உணர்வான அந்த அணு தான் “நாரதன்…!” என்பது.
1.நாரதனோ கலகப்பிரியன்.
2.கலகமோ நன்மையில் தான் முடியும்.

இந்த மனித வாழ்க்கையில் தொடர்ந்து நாம் எத்தனையோ ஆசைகள் கொண்டு நாம் உழன்று கொண்டிருந்தாலும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய பேராற்றலை நுகர்ந்தால் நம்முடைய ஆசை அலைகளை மாற்றி நம் உணர்வை ஒளியாக மாற்றிவிடும்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது அந்த ஒளியான அணு நமக்குள் சிக்கி விட்டால் இந்த மனித உடலுக்குள் நம்மை அறியாது சேர்த்த கோபமோ வெறுப்போ சஞ்சலமோ சங்கடமோ இதைப் போன்ற நிலைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கும் திறன் அதற்குண்டு.
1.நமக்குள் இருக்கும் மனித உணர்வுகளை மாற்றிவிடுகின்றது.
2.அப்பொழுது தான் கலகப் பிரியனாகின்றது.

சப்தரிஷிகள் மெய் ஒளியை விண்ணிலே எப்படிக் கண்டுணர்ந்தார்களோ அந்த ஞானமாக நமக்குள் தோற்றுவித்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய நிலையில் விண் செல்லும் நிலையைப் பெறச் செய்கின்றது.

என் தாய் தந்தையர் உடலை விட்டுச் சென்ற பின் அவர்கள் உயிராத்மாக்களை குருநாதர் காட்டிய அருள் வழிப்படி சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று நான் (ஞானகுரு) விண் செலுத்தினேன்.

என் தாய் தந்தையரின் உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து சூட்சம சரீரம் பெற்ற பின் சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நான் ஏங்கிச் சுவாசிக்கும் பொழுது எனக்குள் (ஞானகுரு) அந்த மெய் உணர்வும் தென்படுகின்றது.

அந்த விண்ணின் ஆற்றலை நான் சுவாசித்து இப்பொழுது உபதேசிக்கும் பொழுது உங்கள் செவிப்புலன்களிலே நீங்கள் கேட்கும் பொழுது அந்த ஆற்றல் மிக்க உணர்வுகள் உங்களுக்குள்ளும் பதிவாகின்றது.

உதாரணமாக உங்களை ஒருவர் கடுமையான நிலைகளில் ஏசுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். செவிகளில் அதை நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால் என்ன நடக்கின்றது…?

அந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் தூண்டப்பட்டு அதை நினைத்த மாத்திரத்திலே உங்களுக்கு ஆத்திரமும் வெறி கொண்டு தாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டி அதன் வழிகளிலே உங்கள் சரீரத்தை இயக்கச் செய்கின்றது.

இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி
1.அந்த மெய் உணர்வுகள் தூண்டப் பெற்று
2.என் தாய் தந்தையரின் உயிராத்மாக்களை விண் செலுத்தினேன்.
3.அங்கிருந்து பல ஆற்றல்களைப் பெறும் தகுதியும் பெற்றேன்.

அந்தத் தகுதியை நீங்களும் பெறவேண்டும் என்ற இந்த ஆசையில்தான் உங்களிடம் இதைச் சொல்கின்றேன்.

ஒரு வயலைப் பண்படுத்துவது போன்று உங்கள் மனைதைப் பண்படுத்தி ஈர்ப்பின் உணர்வுகள் கொண்டு ஆற்றல்மிக்க இந்த வாக்கினை உங்களுக்குள் நல்ல வித்தாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெருக்கப்படும் பொழுது உங்கள் மூதாதையர்களின் உடல விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண் செலுத்தவும் அதன் மூலம் நீங்கள் விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியும் பெறுகின்றீர்கள்.

ஏனென்றால் உங்களுடன் உறவாடிய இந்த உணர்வின் சக்தி கொண்ட
1.குலங்களின் தெய்வங்களான அந்த உயிராத்மாக்களை விண் செலுத்திவிட்டால்
2.விண்ணின் ஆற்றலை நீங்கள் சுலபமாகப் பெற முடியும்.
3.நாம் உடலை விட்டுச் சென்றாலும் விண் செல்வது மிகவும் சுலபமாகின்றது.

Leave a Reply