“என்றும் பதினாறு…!” – மரணமில்லாப் பெரு வாழ்வு

சப்தரிஷி மண்டலம்

“என்றும் பதினாறு…!” – மரணமில்லாப் பெரு வாழ்வு

 

கணவன் உடலை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில் மனைவி தனியாகவும் அதே போல் மனைவி உடலை விட்டுப் பிரிந்து சென்றால் கணவன் தனியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

உடலை விட்டுப் பிரிந்த நிலையில் தனியாக வாழ்ந்தாலும் கணவனின் உணர்வுகள் மனைவியின் உடல்களில் உண்டு. இதைப் போல மனைவியின் உணர்வுகள் கணவன் உடல்களிலும் உண்டு.

“நம்முடன் அவர்கள் இல்லையே…!” என்று யாரும் தவறாக எண்ண வேண்டாம்.

உடலை விட்டுப் பிரிந்த அத்தகைய ஆன்மாக்கள் வேறு உடலில் சென்று இருக்கலாம். அல்லது பாசத்தால் உங்கள் உடலுக்குள்ளேயே அந்த ஆன்மா (கணவன்/மனைவி) வந்திருக்கலாம்.

எப்படி இருந்தாலும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் வலு சேர்த்துக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்த கணவன்/மனைவி உயிராத்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

அவர் உணர்வு உங்களுக்குள் வலு இருப்பதனால்
1.காலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வை வலுவேற்றிக் கொண்டு
2.கண்ணின் நினைவாற்றல் கொண்டு அந்த ஆன்மா “சப்தரிஷி மண்டலம் அடைய வேண்டும்…!”
3.பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று உந்திச் செலுத்தினால்
3.அந்த உணர்வின் வலிமை கொண்டு இன்னொரு உடலுக்குள் சென்று இருந்தாலும்
4.வெளி வந்தபின் நேரே சப்தரிஷி மண்டல சுழற்சி வட்டத்திற்குள் சென்று
5.உடல் பெறும் உணர்வைக் கருக்கிவிட்டு அழியா ஒளிச் சரீரம் பெறும்.

அதன் தொடர்பு கொண்டு நீங்களும் இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் இரு உயிரும் ஒன்றிய நிலையில் சப்தரிஷி மண்டலத்தில் வாழ முடியும்.

ஆனால் இதைச் செயலாக்கவில்லை என்றால்
1.இன்னொரு உடலுக்குள் சென்று வெளி வந்த கணவன்/மனைவியின் உயிரான்மா
2.அந்த உடலில் சேர்த்த வேதனை உணர்வு கொண்டு
3.விஷத்தன்மை கொண்ட வேறொரு உடலுக்குள் அழைத்து சென்று விடும்
4.விஷமான உடலாக உரு பெற்று விடும்.

அதாவது ஒரு உடலுக்குள் சென்ற பின் ஏற்கனவே வாழ்ந்த சரீரத்தில் அனுபவித்த நோயோ அல்லது வேதனையோ போன்ற உணர்வின் இயக்கமாக இயக்கப்பட்டு
1.அந்த உணர்வின் விஷத் தன்மை புகுந்த உடலுக்குள் வளர்த்து
2.அந்த உடலையும் வீழ்த்திவிடும்.

அவர் வளர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப வெளி வந்தபின் நாயோ தேளோ பாம்பாகவோ உருவாகும். உங்கள் கணவனோ/மனைவியோ இவ்வாறு ஆக விடாமல் தடுத்துக் கொள்ளுங்கள்.

குருநாதர் காட்டிய அருள் வழியைச் சீராகக் கடைபிடிப்பவர்கள் நீங்கள் பார்க்கலாம்.

யாம் சொன்ன முறைப்படி உங்கள் கணவன்/மனைவியின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்தில் நீங்கள் உந்தித் தள்ளும் போது தியானத்தில் உணர்த்திக் காட்டும்.

உடலை விட்டு வெளியில் வந்த பின் சப்தரிஷி மண்டலம் அடைந்த நிலையில்
1.”நான் சப்தரிஷி மண்டலம் சென்று விட்டேன்…!” என்ற
2.உணர்வின் ஒளி அறிவுகள் உங்களுக்குள் வரும்…! அதை நீங்கள் அறியலாம்.
3.அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் உணர்வுகளிலும் சப்தரிஷி மண்டலம் அடைந்த உணர்வுகளை
4.அந்த உணர்வுகள் நினைவுபடுத்தும்…! நீங்கள் அதையும் உணரலாம்.

ஒரு பிரபஞ்சத்தில் சூரியன் கோள்கள் நட்சத்திரங்கள் மற்ற நிலைகள் கொண்டு வளர்ந்தாலும் இந்தச் சூரிய குடும்பத்தில் பூமியில் வளர்ந்த உயிரணுக்கள் தன் வளர்ச்சியின் தன்மையில் மனிதனான பின்
1.என்றும் ஒளியின் சரீரமாக
2.மரணமில்லாப் பெரு வாழ்வு என்றும்
3.பிறவியில்லா நிலை என்றும்
4.என்றும் பதினாறு என்ற நிலை அடையலாம்.

அந்த நிலை பெற்று விட்டால் அகண்ட உலகில் என்றுமே அந்த இளமைப் பருவம் போல அந்த இளமையின் தோற்றமே வரும். ஆகவே அந்த நிலை அனைவரும் அடையலாம். மனிதன் ஆனபின் தான் இதை அடைய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்து அதைப் பின்பற்றி சென்றோர்கள் சப்தரிஷி மண்டலமாக வளர்ந்து கொண்டு இருக்கும் அந்த நிலையில் நாம் அனைவருமே அந்தப் பிறவியில்லா நிலைகள் அடைவோம்.

Leave a Reply