மெய் ஞானிகள் வளர்த்துக் கொண்ட “வினை நீக்கும் விண்ணின் ஆற்றல்கள்”
மிருகங்களில் யானை மிகவும் பெரியது… அது வலுவானது. அது போல உயிரினங்களிலே மனிதன் எண்ணத்தில் மிக வலிமை பெற்றவன். ஞானத்தின் நிலைகள் வளர்க்கப் பெற்றவன்.
தன் எண்ணத்தின் ஞானத்தின் வலிமை கொண்டு பெரிய மலையையும் பாறைகளையும் அவனுடைய சிந்தனையின் வலிமை கொண்டு ஒரு நொடியில் சுக்கு நூறாகத் தகர்த்து எறிகின்றான்.
விஞ்ஞானி தன்னுடைய சிந்தனையால் கண்டுபிடித்த அணுவின் ஆற்றலைக் கொண்டு தன் எண்ணத்தின் வலுவால் நூறு மைல் சுற்றளவு கொண்டதையும் தகர்த்து எறியும் தன்மை பெறுகின்றான்.
ஆனால் அன்றைய மெய் ஞானிகள்
1.தன் எண்ணத்தின் வலுகொண்டு விண்ணை நோக்கி கண்ணின் நினைவினைச் செலுத்தி
2.பல இலட்சக்கணக்கான மைல் தூரத்தில் எட்டாத தூரத்தில் உள்ள நட்சத்திரத்தையும்
3.தன் எண்ண வலுவால் அதனின் ஆற்றலை நுகர்ந்து தனக்குள் சேர்த்து
4.மனித வாழ்க்கையில் வரும் வேதனை வெறுப்பு போன்ற கடுமையானதையும் அடக்கி
5.விண்வெளியில் ஒளி எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறே அவர்கள் எண்ணங்கள் ஒளி பெற்று
6.பொருளுக்குள் மறைந்த நிலையை ஊடுருவிக் கண்டறிகின்றான் மெய்ஞானி.
விஞ்ஞானி தான் கண்டுபிடித்த “எக்ஸ்ரேயை…” உடலுக்குள் ஊடுருவிப் பாய்ச்சும்போது எலும்புக்குள் உள்ள ஊனையும் காட்டுகின்றது. நரம்புக்குள் உள்ள நிலையையும் காட்டுகின்றது. குடலுக்குள் உள்ள பழுதையும் காட்டுகின்றது. இதயத்தில் உள்ள பிழையையும் காட்டுகின்றது.
கருவியின் துணை கொண்டு செலுத்தப்படும் அந்த ஆற்றல் மிக்க எக்ஸ்ரே ஒன்றைப் பிளந்து நுண்ணிய அலைகள் எது இருக்கின்றதோ அதைக் காட்டுகின்றது. அதைப் படமாக எடுத்து நோயின் தன்மையை அறிகின்றார்கள் விஞ்ஞானிகள்.
அவ்வளவு ஆற்றல் பெற்ற விஞ்ஞானியால் இதைக் கண்டுணர முடிகின்றது. அதைக் கண்டுணர்ந்து
1.உடலுக்குள் உள்ள கட்டிகளையோ மற்றவைகளையோ அப்புறப்படுத்த முடிகின்றது.
2.அதைச் சரி செய்யவும் முடிகின்றது.
3.எண்ண வலுவால் அந்த நோயை நீக்கவும் முடிகின்றது.
ஆனால் இவன் உடலில் விளைவித்த தீமையான உணர்வின் சக்தியை அகற்ற இவனுக்குச் செயலில்லை. அவன் கண்டுணர்ந்த செயலின் ஆற்றலால் அதை நிவர்த்தி செய்யவும் இயலவில்லை.
அன்று மெய்ஞானி விண்ணில் எட்டாத தூரத்தில் இருக்கும் ஆற்றலையும் தான் கவர்ந்து தன் உடலில் அதைப் பாய்ச்சி வளர்த்துக் கொண்டான்.
வளர்த்த ஆற்றலின் துணை கொண்டு தன் உணர்வின் நினைவலைகளை எக்ஸ்ரே போன்று ஒரு மனிதனுக்குள் ஊடுருவிச் செலுத்தி
1.அவனுக்குள் இருக்கும் நோயையும் மற்ற செயல் சக்தியையும் தான் நுகர்ந்தறிந்து
2.அதற்குத் தன் ஒளியாலே விழியாலே தன் எண்ணத்தை வலுக்கூட்டிப் பாய்ச்சி
3.அங்கிருக்கும் நோய்களை நீக்கினான் மெய்ஞானி.
விண்ணின் ஆற்றலை எண்ணிலடங்காத தூரத்திலிருந்து வரும் விஷத் தன்மையை தன் ஒளிக் கதிரின் சுழற்சியால் வீழ்த்தி தன் உணர்வின் சாந்த நிலைகள் கொண்டு ஒளிச் சரீரமாக வளர்த்துக் கொண்டார்கள் மெய் ஞானிகள்.
அவர்கள் விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தின் ஆற்றலைத் தன் அருகிலே வராதபடி அதை வீழ்த்தி அதைத் தனக்குள் சாதகப்படுத்திக் கொண்டு பேரொளியாக மாற்றியவர்கள்.
மனிதனில் தோன்றிய எண்ண அலைகள் பூமிக்குள் சுழன்று கொண்டிருக்கின்றது.
ஆனால் அந்த மெய்ஞானிகள் தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் எண்ண அலைகள் ஆற்றல்மிக்க சக்திகளாக விஷத்தை வீழ்த்தும் தன்மை கொண்ட அணுக்களாக விண்ணிலே மிதந்து கொண்டிருக்கின்றது.
அந்த மெய்ஞானிகள் தனக்குள் வளர்த்த அந்த விண்ணின் ஆற்றலை நாமும் பெறுவோம். அவர்களைப் போன்று நாமும் பேரொளியாக மாறி வேகா நிலையை அடைவோம்…!