செல்வத்தைத் தேடும் பொழுதும் வேதனைப்படுகின்றோம்…! செல்வத்தை காத்திடவும் வேதனைப்படுகின்றோம்…!

gnana pokkisham

செல்வத்தைத் தேடும் பொழுதும் வேதனைப்படுகின்றோம்…! செல்வத்தை காத்திடவும் வேதனைப்படுகின்றோம்…!

 

நாம் எண்ணும் உணர்வுகள் உயிரிலே படும்போது நம் சிரசின் பாகம் ஈஸ்வரலோகம்.

எதன் உணர்வை நாம் நுகர்கின்றோமோ அந்த உணர்வின் கருவாக உருவாக்கி நம் இரத்த நாளங்களில் அது சேரும் பொழுது இந்திரலோகம்.

அந்த உணர்வின் தன்மை அணுவாக உருவாக்கி விட்டால் அது பிரம்மலோகம்.

அணுவான பின் அது தன் இனத்தை வளர்க்கத் தொடங்கும். எந்த குணத்தின் அணுவாக உருவானதோ அணுவின் மலமே (தசை) உடலாகின்றது. அது சிவலோகம்

நல்ல குணத்தின் தன்மை கொண்ட அணுவின் மலமாக இருந்தால் நமது உடல் சீராக இருக்கின்றது. அழகாக இருக்கின்றது. மகிழ்ச்சியாக இருக்கின்றது.

ஆனால் வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் குரோதம் பயம் போன்ற உணர்வை நாம் நுகர்ந்தால் உயிரான ஈசன் அதைக் கருவாக்கி அதை இந்திரலோகமாக மாற்றி பிரம்மலோகமாக உருபெற்றுச் சிவலோகமாக மாற்றிவிடுகின்றது.

சிவத்துக்குள் (உடலில்) வேதனை என்ற உணர்வை அது அதிகமாக வளர்த்துக் கொண்டால் நரகலோகமாக மாற்றுகின்றது என்று சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

இருந்தாலும் நமது ஆசையின் நிமித்தம் இந்த உடலின் இச்சைக்குத்தான் வாழுகின்றோமே தவிர
1.செல்வம் தேடுகின்றோம்…
2.தேடிய செல்வத்தை வைத்து நிலைத்திக்கினறனரா மனிதர்கள்…!
3.தேடிய செல்வத்தைக் காக்க முடிகின்றதா…?
4.செல்வம் குவித்திருந்தாலும் நிம்மதி வருகின்றதா…?

வேதனை என்ற உணர்வு கொண்டு தான் வாழுகின்றோம்.

செல்வம் தேட ஆசைப்படுகின்றோம். தேடிய செல்வத்தைக் காக்க வேதனையும் படுகின்றோம்.

முதல் செல்வம் இல்லாத பொழுது ரொம்பச் சிரமப்பட்டு இருப்போம். செல்வத்தை தேடி குவிக்கும் பொழுது சிரமத்தில் இருக்கும் பொழுது நண்பனாகப் பழகியவன் “இவ்வளவு பணம் வைத்திருக்கின்றாயே…! நீ எனக்கு 100 ரூபாய் கொடு…” என்று நம்மிடம் கேட்பான்.

அதைக் கொடுக்கவில்லை என்றால் நம்மைக் குற்றவாளியாக ஆக்க வேண்டும் என்ற உணர்வினை மற்றவருக்குப் பறை சாற்றுவான். “பணம் கொடுக்கவில்லை…” என்பதற்காக இப்படி எல்லாம் பேசுகிறான் என்று வேதனையே வந்து விடுகின்றது.

அத்தகைய வேதனை வந்த பின் நாம் நுகர்ந்த உணர்வுகள் வேதனையை உருவாக்கும் அணுவாக ஈஸ்வரலோகமான சிரசுக்குள் அதைக் கருவாக உருவாக்கி விடுகின்றது.

எந்த மனிதன் வேதனைப்படுத்தும் உணர்வை வெளிப்படுத்தினானோ அது ஈஸ்வரலோகத்தில் கருத்தன்மை அடைந்த பின் இந்திரலோகமாக மாறி அந்த அணுவின் தன்மை உருவாகும்போது பிரம்மலோகமாகின்றது.

அணுவாக மாறிவிட்டால்
1.எந்த மனிதன் குறை கூறி அதனால் வேதனைப் பட்டானோ
2.அந்த வேதனையை நுகர்ந்து நுகர்ந்து வேதனைகள் உருவாக்கும் அணுக்கள் பெருகி
3.இந்த உடலையே வேதனைப்படும் உடலாக மாற்றிச்
4.சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்து விடுகின்றது.

செல்வத்தைத் தேடினாலும்… “சந்தர்ப்பத்தால் இப்படி ஒரு நிலை…!”

1.செல்வத்தைக் காக்கும் நிலை இல்லை.
2.செல்வம் தேடினாலும் உடலை காக்கும் நிலை இல்லை…..?

அழியும் செல்வத்தையும் அழியக்கூடிய உடலையும் காப்பாற்றுவதற்காகத்தான் இத்தனை பாடும் படுகின்றோம். இது தான் உண்மை.

மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கையில்
மனமே… இனியாகிலும் மயங்காதே…!
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…!

“நேற்றிருந்தார்…” இன்றிருப்பது நிஜமோ…!
நிலையில்லா இவ்வுலக வாழ்க்கை சதமாமோ…!

பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…?
மின்னலைப் பொல மறைவதைப் பாராய்…!
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

மனமே இனியாகிலும் மயங்காதே…! மயங்காதே…!

Leave a Reply