“மெய் ஞானத்தைப் பெறவேண்டும்” என்ற எண்ணத்தில் ஏங்கி வருவோருக்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

“மெய் ஞானத்தைப் பெறவேண்டும்” என்ற எண்ணத்தில் ஏங்கி வருவோருக்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

 

தன்னுடைய கௌரவத்தைக் காண்பிப்பதற்காக “ஒரு செயலை நீ செய்… பரவாயில்லை…!” என்று சொல்வோரும் உண்டு. ஏனென்றால் தபோவனத்தை அவர்களுடைய சுயநலன்களுக்குப் பயன்படுத்தும் நிலைகள் வந்து விட்டது.

தபோவனத்திற்கு எதற்காக வந்தோம்…?

1.பிறருடைய நிலைகளைக் கண்டு உணர்ந்து அவர்கள் மகிழச் செய்வதற்காகத்தான் வருகின்றோம்.
2.அதற்காகத்தான் இங்கே நாம் தங்கி இருக்கின்றோம் என்ற எண்ணம் இல்லை.
3.அவரவர்கள் கௌரவத்தை காட்டும் நிலைகள் தான் வருகின்றது.

நான் (ஞானகுரு) எத்தனையோ பாடுபட்டு மகரிஷிகள் கண்டறிந்த உண்மையின் நிலைகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று இதைச் செயல்படுத்தும் நிலையில் அதை அழிக்கக்கூடிய சக்திக்கு வந்துவிட்டார்கள்.

மக்கள் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணிய நிலைகளையெல்லாம் தகர்க்கும் நிலைகளுக்கு வருகின்றது.
1.தவறென்று தெரிகின்றது.
2.தவறைத் திருத்தும் நிலைகள் வரவில்லை.

தபோவனத்திற்குள் இருக்கின்றோம் என்று சொன்னால் வெளியிலிருந்து இங்கே வருகின்றவர்கள் நம்மைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும்.

அதை விடுத்துவிட்டு ஒருவருக்கொருவர் குறை கூறும் நிலைகளில் தான் இருக்கின்றார்கள். தபோவனத்தை வளர்க்க வரவில்லை. தபோவனத்திற்குள்ளேயே இருந்து கொண்டு தபோவனத்தை அப்படியே பாதிக்கக்கூடிய நிலைகளில் சில பேருடைய வேலைகள் நடக்கின்றது.

ஆனால் சாமி (ஞானகுரு) மேல் பற்று உண்டு. சாமிக்காக வேண்டிப் நான் பார்க்கின்றேன்… இல்லையானால் “உன்னை செய்வேன் பார் தெரியுமா…!” என்கின்றனர்.

பகைமை உணர்வைத்தான் வளர்க்க முடிகின்றது. பகைமையை அறவே அறுக்க வேண்டியதற்காக வேண்டிச் செய்கின்ற செயலை யாருமே செய்யவில்லை.

ஏனென்றால் அதற்காக வேண்டி இந்தத் தபோவனத்தை வைக்கவில்லை.
1.அரும்பெரும் சக்தி பெற வேண்டும்
2.மெய் ஞானத்தைப் பெறவேண்டும் ஏங்கி வருவோருக்காகத்தான்
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் அமைக்கப்பட்டுள்ளது.

இவைகளெல்லாம் மாற வேண்டும். ஒருங்கிணைந்த நிலைகள் கொண்டு நமது குரு அருளை எப்படிப் பரப்ப வேண்டும் என்ற நிலைக்கு வர வேண்டும்.

“நான் இல்லை என்றால்…, தபோவனமே இல்லை…!” என்ற நிலைக்கு ஒவ்வொருவரும் தயாராகி விட்டார்கள். அவர்களால் தான் (சுமார் 40 பேர்) தபோவனம் நடக்கின்றது என்ற நிலையும் “குருவினால் அல்ல…!” என்ற நிலைகளில் நடந்து கொண்டு உள்ளார்கள்.

நான் எத்தனை அரும்பாடுபட்டு வந்தேனோ அதை எல்லாம் தடுக்கும் நிலைகளுக்கு விளைகின்றது. ஆனால் அவர்களுடைய குற்றம் அல்ல. புற நிலையிலே உணர்வுகள் இங்கே வளர்க்கப்படும் நிலைகளேதான் வருகின்றது.

இதைப் போன்ற தீமைகளை நிறுத்தியாக வேண்டும். நாம் பிறருக்கு நல்லதை நாம் எடுத்து வளர்த்தே ஆக வேண்டும் என்ற உணர்வினைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தபோவனத்திற்குள் வந்தால் குரு அருளின் தன்மை கொண்டு எல்லோரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணங்கள் வர வேண்டுமே தவிர “தீமையின் நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்…” என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

வெளியிலிருந்து எவ்வளவோ பேர் ஆர்வமாக வந்து ஞானத்தில் வளர்ச்சி அடைகின்றனர். நாம் இங்கே இருக்கின்றோம் என்று சொன்னோம் என்றால் அவர்களுக்கு நாம் எப்படிப்பட்ட சேவை செய்வதாக இருக்க வேண்டும் என்ற நிலை இல்லை.

“நானா… நீயா…!” என்றும் சிலருடைய செயல்களைப் பார்த்தவுடனே “சீ…” என்று காறித் துப்பும் அளவிற்குச் செயல்படுகின்றார்கள்.

அருள் ஞானப் பாதையில் போகும் எவரையும் யாருமே தடைப்படுத்தக்கூடாது.
1.தடைப்படுத்தினால் அந்தத் தடையின் உணர்வுகளை
2.அவர்களே அறிய வேண்டிய நிலைகள் நிச்சயம் வரும்.

ஏனென்றால் உலகம் கடும் நஞ்சு கொண்ட நிலைகளாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில் இதில் சிறிதளவு எடுத்து நமக்குள் பதியச் செய்து விட்டால் போதும். அந்த நஞ்சு… “நல்ல உள்ளங்களை மாற்றிவிடும்…”

எங்கிருந்தோ ஏங்கி வரக்கூடிய நிலைகளில் தபோவனத்திற்கு வந்திருக்கின்றோம் என்றால்
1.நாம் பக்குவம் அடைய இங்கே வந்தோமே தவிர
2.பக்குவத்தைச் சிதறச் செய்ய அல்ல.
3.பிறர் பக்குவமடைந்தால் அவரைப் புண்படும் நிலைகளுக்குக் கொண்டு செல்வதற்கு அல்ல.

1.சாமிக்காக வேண்டிப் பார்க்கிறேன்.
2.நான் தபோவனத்தைக் காக்கின்றேன்…! என்று சொல்லி
3.இப்படியெல்லாம் யாரும் செயல்படுத்த முடியாது.

ஏனென்றால் “முண்டாசு” கட்டுகின்ற நிலைக்குக் கூடச் சிலர் போய் விட்டனர். எதன் அடிப்படையில் எங்கே வந்து எதனைச் செய்கின்றோம் என்ற நிலைகளில் சற்றும் சிந்தித்துச் செய்கின்றார்களா என்றால் இல்லை.

வெகு தூரத்திலிருந்து இங்கே தபோவனத்திற்கு ஞானத்தைப் பெறுவதற்காக வருவோரைப் புண்படும்படிச் செய்தால் அதனுடைய விளைவு என்ன ஆகும்…! என்று அறிய வேண்டும்.

பிறர் மேல் குறை கூறும் நிலைகள் அறவே அகற்றப்பட வேண்டும். பிறருக்குத் தீங்கு செய்யாது நாமே அப்புறப்படுத்திக் கொள்வது தான் நல்லது.

நிறைவான மனங்கள் பெற வேண்டும் என்று ஒருவொருக்கொருவர் நாம் தியானித்து அதைத் தவமாக இருக்க வேண்டும். ஆகவே தபோவனத்திற்குள் வந்தால் சேவையின் மனப்பான்மையில் தான் வர வேண்டும்.

1.எல்லோரையும் மகிழச் செய்யும் நிலைகளுக்கு வர வேண்டும்.
2.பிறரை மகிழச் செய்தால் அந்த மகிழும் உணர்வுகள் நமக்குள்ளும் வளர்கின்றது.
3.நம்மையும் மகிழச் செய்கின்றது.
4.தீமையற்ற நிலையை நமக்குள் வளர்க்கின்றது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நாம் தியானித்தல் வேண்டும். அதே போல் நாம் பார்ப்போரெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் வாழ்க்கையில் எல்லோரும் மகிழ வேண்டும் என்ற தவத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.

தீமை என்ற நிலைகளை அகற்றி அருள் ஞானியின் உணர்வை நாம் பெருக்கித் தபோவனத்தையும் புதிய பூமியையும் வளர்த்தல் வேண்டும்.

தபோவனத்திற்குள்ளும் சரி புதிய பூமியிலும் சரி. குரு நான் நல்ல “நீங்கள் தான் குருவாக வளர்ந்து காட்ட வேண்டும்…” இங்கு வருவோருடைய நிலைகளுக்கு நம்முடைய ஞானங்கள் குருவாக இருக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் அந்த எடுத்துக்காட்டான நிலைகளை அந்தப் பரிவும் பணிவும் பண்பும் கொண்டு குரு சேவையின் கடமையில் நாம் வளர வேண்டும்.

துருவ மகரிஷிகளின் உணர்வைப் பின்பற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக எப்படி வாழ்கின்றார்களோ இதைப் போன்று நாம் குரு அருளின் தன்மை கொண்டு ஒரு மண்டலமாக வாழ்ந்து உலகைக் காத்திடும் நிலையாக வளர்தல் வேண்டும்.

“குரு அருளை நமக்குள் ஏற்று…” எல்லோருக்கும் அந்த உயர்ந்த பண்புகள் வளர வேண்டும் என்ற எடுத்துக்காட்டாக நாம் வர வேண்டும்.

Leave a Reply