நம் ஆன்மாவில் படும் தீமைகளை நீக்கும் முறை – “ஆத்ம சுத்தி”

soul-cleaningநம் ஆன்மாவில் படும் தீமைகளை நீக்கும் முறை – “ஆத்ம சுத்தி”

 

இன்று பக்தியின் மார்க்கத்தில் சென்று நல்ல ஒழுக்கங்களைத்தான் நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.

நாம் எல்லோரும் நல்லதைத்தான் எண்ணுகின்றோம். அப்படி எண்ணினாலும் தீமை என்ற நிலைகள் வந்தால் அது வலு பெற்றது. ஏனென்றால் விஷத்திற்கு வலு ஜாஸ்தி.

அந்த வலுவான நிலைகள் நுகர்ந்தபின் தீமையின் எல்லையை அறிகின்றோம். அறிந்து கொண்டாலும் அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வே நமக்குள் வலுப் பெறுகின்றது.

அந்த தீமை நமக்குள் விளையாது தடுக்க என்ன செய்கிறோம்? நமக்குள் இருக்கும் நல்லதைக் காக்க என்ன வைத்திருக்கின்றோம்?

அதற்காக வேண்டித்தான் வாழ்க்கையிலே ஒவ்வொரு நொடியிலேயும் நமது குருநாதர் காட்டிய அருள் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்வது.

அதைக் கடைப்பிடிப்பதில் “ஒன்றும் கஷ்டமில்லை..!”

நாம் புதிதாக வீடு கட்டி விடுகின்றோம். அடுத்தாற்போல் தூசி விழுகின்றது. அந்தத் தூசியை துடைக்காமல் விட்டால் என்ன ஆகும்?

வீட்டிற்குள் எண்ணெய் சிந்திவிடுகின்றது. அங்கு அதன் மீது அழுக்குப்பட்டால் “பிசு…பிசு…” என்று ஒட்டுகின்றது.

அந்த இடத்தில் மண்ணெண்ணெயைப் (KERSOENE) போட்டுத் தேய்த்தோம் என்றால் இந்தப் பிசு பிசுப்பான எண்ணெயை நீக்கி விடுகின்றது.

எண்ணெய் கொட்டிவிட்டது. அதை நான் கூட்டினேன். ஆனால் மீண்டும் மீண்டும் அந்த இடத்தில் அழுக்கு ஒட்டுகின்றது என்று அப்படியே விட்டு விட்டுப் போகின்றோமா என்றால் இல்லை.

அதற்குத்தக்க உபாயத்தைக் கூட்டி நாம் துடைக்கின்றோம். முழுமையாகச் சுத்தப்படுத்தி விடுகின்றோம் அல்லவா…!

இதைப் போன்றுதான் நம் வாழ்க்கையிலும் நம்மை அறியாது எத்தனையோ வகையான நிலைகள் நமக்குள் ஒட்டிக் கொள்கின்றது. இதை நாம் சுத்தப்படுத்த வேண்டுமா வேண்டாமா…?

அதைச் சுத்தப்படுத்துவதற்காக உங்களுக்கு அந்தச் சக்தியை ஊட்டுவதற்குத் தான் ஞானிகளைப் பற்றிச் சொல்கிறோம்.
1.நீங்கள் ஆற்றல் மிக்க சக்தி பெற வேண்டும்
2.ஞானியாக வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்கின்றோம்.

முன்னாடி பரவலாகச் சொல்லிக் கொண்டு வந்தோம். இப்பொழுது உங்களுக்கு முழுமையாக இணைத்துக் கொடுக்கின்றோம்.

தீமையோ கஷ்டமோ துன்பமோ வேதனையோ வரும் பொழுதெல்லாம்
1.உங்கள் கண்களின் நினைவு ஈஸ்வரா என்று
2.புருவ மத்திக்குச் சென்று அதைத் தடைப்படுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று இதை நீங்கள் வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் (ஞானகுரு) பெறுகின்றேன். உங்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஜெபம் இருக்கின்றேன்.

நீங்கள் எதை எல்லாம் நல்லதாக வேண்டும் என்று செய்கின்றீர்களோ அது நல்லதாக வேண்டும் என்று ஜெபம் செய்கின்றேன்.

ஏனென்றால் உபதேசம் செய்த உணர்வலைகள் இங்கே இருக்கின்றது. உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம்.

டி.வி. ஸ்டேசனிலிருந்து ஒலி – ஒளி பரப்பு செய்யும் போது அதே ஸ்டேசனை வைத்தால் எப்படிப் படம் தெரிகின்றதோ அதே போல்
1.ஈஸ்வரா…! என்று உயிரை நினைக்கும்போது
2.அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் உங்களுக்குக் கிடைக்கும்.
3.நீங்கள் அதை வளர்ப்பதற்கு உங்களுக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது.

உங்களால் முடியும்…!

Leave a Reply