“குரு தட்சிணாமூர்த்தி…”

LORD DHAKSHINAAMOORTHI

“குரு தட்சிணாமூர்த்தி…”

 

யோகம் என்று சொல்கிறோம் யோகி என்றும் சொல்கிறோம். அதையே இன்று “யோகா…” (YOGA) என்று சொல்கிறார்கள்.

சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள உண்மைகளைப் பார்த்தால் குரு தட்சிணாமூர்த்தி என்று சொல்கிறோம்.

மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கு விண்ணுலகம் செல்லும் மார்க்கத்தைக் கற்றுத் தருபவரே  தட்சிணாமூர்த்தி என்று குருவாகக் காட்டினார்கள்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென் பகுதியிலே தோன்றிய அகஸ்தியன் தான் முதன் முதலில் விண்ணின் ஆற்றலைப் பெற்றவர் ஆவார்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அகஸ்தியர் தான் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.

அதைப் பின்பற்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்றவர்கள் அனைவருமே மகரிஷிகளாகிவிட்டார்கள். சப்தரிஷி மண்டலமாக இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.

இந்தப் பூமியில் தோன்றிய யாராக இருந்தாலும் அகஸ்தியனின் உணர்வு சிறிதாவவது இருந்தால் தான் விண்ணின் ஆற்றலை அறியும் நிலைக்கே செல்ல முடியும்.

ஆரம்ப நிலையில் அகஸ்தியர் வாழும் பொழுது தென் பகுதியிலிருந்து தெற்கே நின்று தான் வடக்கில் துருவத்தின் வழியாக நம் பூமி கவரும் அனைத்து ஆற்றல்களையும் பெற்றார். நஞ்சினை வென்றார். துருவன் ஆனார்.

திருமணமாகி தான் பெற்ற சக்திகளை மனைவிக்கும் கொடுக்கும் பொழுது துருவ மகரிஷியாக ஆனார். இருவரும் சேர்த்து எந்தத் துருவத்தை உற்று நோக்கினார்களோ அந்த எல்லையில் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்கள்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பெற வேண்டிய யோகமே ஒளியின் சரீரம் பெற்று விண்ணுலகம் செல்வதாகும். அந்த யோகத்தைக் கற்க வேண்டும் நமக்குள் வளர்க்க வேண்டும் என்றால் அந்த அகஸ்தியரின் உணர்வு அவசியம் தேவை.

தென்பகுதியில் ஏற்படும் வெப்பமே வட துருவத்தில் பனிப் பாறைகளைக் கரையச் செய்து நம் பூமியினைச் சீராகச் சுழலச் செய்கின்றது.

அவ்வாறு பூமியின் வெப்ப நிலைகளைச் சீராக்கிச் சமப்படுத்தியவர் அகஸ்தியர். அகஸ்தியர் உணர்வால் தான் இந்தப் பூமி சம நிலையில் உள்ளது.

அதைப் போன்று தான் அதில் உருவான மனிதர்களான நாம் அகஸ்தியரின் இன மக்களாக உருவான நாம் அவர் அருளைப் பெற்று நம் வாழ்க்கையில் வரும் எத்தகைய இடையூறுகளையும் இன்னல்களையும் சமப்படுத்திச் சீராக்க முடியும்.

தெற்கே தோன்றிய நிலையையும் விண்ணுக்குச் செல்லும் மார்க்கத்தையும் மனிதன் அடைய வேண்டிய அந்த யோகத்தையும் கற்றுத் தரும் நிலைகளுக்குத்தான் பின் வந்த ஞானிகள் குரு தட்சிணாமூர்த்தி என்று உருவம் அமைத்துக் காட்டினார்கள்.

இந்த மண்ணுலக வாழ்க்கையன உடல் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு உயிருடன் ஒன்றிய வாழ்க்கையாக விண்ணுலகில் நிலையான  வாழ்க்கையாக வாழ்வதே நமக்கு “யோகம்…”

விண்ணுலக ஆற்றலை எடுக்கும் அந்தப் பயிற்சி செய்ய வேண்டும். அதற்கு அவசியம் விண் சென்ற குருவின் (குரு தட்சிணாமூர்த்தி)  துணை வேண்டும்.

அந்த நிலை பெறுபவர்களைத்தான் யோகி என்று சொல்ல முடியும்.

அதை விடுத்து அவரை வணங்கினால் சொத்து வரும் சுகம் வரும் புகழ் கிடைக்கும் என்றால் மீண்டும் இந்த மண்ணுலகில் தான் சுழல முடியும்.

மண்ணுலகில் தோன்றிய மனிதன் “விண்ணுலகம் செல்வதே கடைசி எல்லை…”

Leave a Reply