ஞானிகள் ஆலயங்களில் கருப்பண சாமியை அரிவாளுடன் காட்டியதன் உட்பொருள் என்ன?

ஞானிகள் ஆலயங்களில் கருப்பண சாமியை அரிவாளுடன் காட்டியதன் உட்பொருள் என்ன?

 

 

பெரிய பெரிய கோவில்களில் எல்லாம் கருப்பண சாமியை முன்னாடி வைத்திருப்பார்கள். அதற்கு முதல் மரியாதைகளையும் செய்வார்கள்.

 

காரணம் என்ன என்று நாம் அறிந்திருக்கின்றோமா…?

 

தெய்வத்தை நாம் காண வேண்டும் என்றால் நம் சுவாச நிலை எப்படி இருக்க வேண்டும்? உயர்ந்த நிலைகளைப் பெற வேண்டும் என்றால் நம் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்?

 

மெய் உணர்வைப் பெறத் தகுதி பெறவேண்டும் என்றால் நம் எண்ணம் பரிபக்குவ நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே கருப்பண சாமியை முன்னாடி வைத்துள்ளார்கள்.

 

கருப்பண சாமிக்கு  வாகனமாக நாயையும் கையில் அரிவாளையும் காட்டியுள்ளார்கள்.

 

நாய் தன் மோப்ப சக்தியால் தான் அனைத்தும் அறியும் ஆற்றல் பெற்றது.

 

சகஜ வாழ்க்கையில் நம்மைப் பற்றிக் குறையாகவும் தவறாகவும் பேசினால் நம் சிந்தனை அவர்கள் பால் செல்கிறது. வேதனைப்படும் நிகழ்ச்சிகளோ வேண்டத்தகாத நிலைகளோ நடந்தால் நம் நல்ல மனது வேதனையாகின்றது.

 

இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் நம் மனம் இருண்டு விடுகின்றது. நம்முடைய சுவாசம் (மோப்பம்) குறையாகப் பேசுபவர்கள் மீதும் வேண்டத்தகாத நிலைகள் மீது தான் திரும்பத் திரும்பச் செல்கிறது.

 

அதற்காகத்தான் நாயைக் காட்டுகின்றார்கள்.

 

குறையான உணர்வுகளையும் வேதனைப்படும் உணர்வுகளையும் நாம் திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அது நமக்குள் வந்து நம் நல்ல குணங்களையெல்லாம் கொன்று விடுகிறது.

 

அதைக் காட்டுவதற்காகத்தான் அரிவாளைக் காட்டுகின்றார்கள்.

 

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் நாம் குறையான உணர்வுகளை நுகர நேர்ந்தால் அது நம் சுவாசத்தை மாற்றி நம் நல்ல குணங்களையும் அழித்துவிடுகிறது என்பதை உணர்த்துவதற்காகத்தான் அவ்வாறு காட்டுகின்றார்கள்.

 

ஆகவே நம் சுவாசத்தின் முகப்பில் இருந்தால் அடுத்து நாம் நல்லதையே வலுவாக எண்ண முடியாதபடி நல்ல சக்திகளை நமக்குள் சேர்க்கவிடாதபடி தடுத்துவிடும் என்று நமக்கு கருப்பண சாமியைக் காட்டி ஞானிகள் அறிவுறுத்துகின்றார்கள்.

 

நல்ல எண்ணம் கொண்டு நல்ல சுவாசத்துடன் கருவறைக்குள் சென்று அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வத்தைப் பார்த்து அதை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… இந்த ஆலயம் வருவோர் குடும்பங்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒவ்வொருவரையும் அந்த நல்லதை எடுக்கும் முறைப்படுத்தினார்கள் ஞானிகள்.

 

நல்ல உணர்வுகளையும் நல்ல சிந்தனைகளையும் முகப்பில் வைத்திருந்தால் நம் ஆன்மா நலமாகும் நம் செயல்கள் நல்லதாகும்.

 

தான் பெற்ற அந்தத் தெய்வீக நிலைகளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் கருப்பண சாமியை முன்னாடி வைத்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

Leave a Reply