மனிதனின் ஆறாவது அறிவை ஏழாவது அறிவாக மாற்றும் வழி

light-2

மனிதனின் ஆறாவது அறிவை ஏழாவது அறிவாக மாற்றும் வழி 

ஒரு எலெக்ட்ரிக் லைட்டை மனிதன் தான் உருவாக்குகின்றான்.

இருளான இடங்களில் ஸ்விட்சைத் தட்டிய பின் அந்த விளக்கு வெளிச்சத்தை உமிழ்ந்து இருளை விலக்குகின்றது. விளக்கின் வெளிச்சத்தால் அங்கிருக்கும் பொருள்களைக் காணும் நிலை வருகின்றது.

இதைப்போல தான் அந்த மெய்ஞானிகள் தனக்குள் உணர்வின் தன்மையை ஆற்றல் மிக்கதாக மாற்றி இருள் சூழ்ந்த நஞ்சினை ஒளியாக மாற்றியவர்கள்.

நஞ்சின் தன்மை அதிகமாகும் பொழுது இருள் சூழும் நிலைகளுக்குக் கொண்டு வந்துவிடுகின்றது. ஆனாலும்
1.நஞ்சு ஒரு பொருளுக்குள் தாக்கிய பின் வெப்பமாகின்றது.
2.வெப்பம் அதிகமாகும் பொழுது நெருப்பாகி ஒளியாக மாறுகின்றது.
3.மனிதனின் ஆறாவது அறிவு இத்தன்மை கொண்டதே.

இருளின் தன்மை வரும் பொழுது ஒளியைப் பாய்ச்சி அந்த இருளை மாய்த்து இருளுக்குள் ஒளியாக மாற்றும் ஆற்றல் கொண்டது மனிதனின் ஆறாவது அறிவு.

ஆதியிலே எல்லையே இல்லாத பேரண்டத்தில் நஞ்சின் தன்மையே பரவி எங்கும் இருண்ட நிலையாக இருந்தது. எல்லை என்றால் இதைப் போன்ற கோள்களோ நட்சத்திரங்களோ சூரியனோ இல்லாது சூனியப் பிரதேசமாக இருந்தது.

சூனியப் பிரதேசத்தில் ஆவியாகப் படர்ந்து இருக்கும் அக்காலத்தில் ஆவிகளிலே மிகவும் சக்தி வாய்ந்தது அந்த விஷம் தான்.

ஆதியிலே அந்த விஷத்தின் தன்மை மற்ற அமைதி கொண்ட நிலைகளைத் தாக்கும்போது தான் வெப்பம் உருவாகின்றது. வெப்பத்தின் தன்மை பெருகி ஒளியாக அதாவது வெளிச்சமாகின்றது.

வெப்பத்தினால் வெளிச்சத்தின் நிலைகள் வரப்போகும் போது
1.ஈர்க்கும் நிலை உருவாகி… “காந்தம்”
2.தன்னுடன் அணைத்துக் கொண்டு வளரும் தன்மையாக
3.மீண்டும் மீண்டும் ஜீவனாக்கும் சக்தியாக அது விளைகின்றது.

எதனுடன் சேர்த்து ஒரு அணுவின் தன்மை விளைந்ததோ இந்த நஞ்சு “உலகை ஒளியாக்கும் நிலை…” வருகின்றது.

அது கடந்து வரப்படும் போது ஒவ்வொரு நிலைகள் பெற்று இவ்வாறு தான் “பிரபஞ்சம் இயக்கச் சக்தியாக…” மாறியது.

இயக்கச் சக்தி மாறினாலும் மீண்டும் நஞ்சின் தன்மை மற்றொன்றுடன் மோதி மோதி நெருப்பாகின்றது. பின் அந்த நெருப்பிலே நஞ்சைப் போட்ட பின் அந்த நஞ்சினுடைய சக்தி இழக்கப்படுகின்றது.

நஞ்சால்தான் வெப்பம் உருவாகின்றது. ஆனால் அந்த வெப்பத்தால் நஞ்சை அடக்க முடிகின்றது. இவ்வாறு உருவாகும் உணர்வின் சக்தியை அந்தப் பேருண்மைகளை மெய்ஞானிகள் தனக்குள் கண்டுணர்ந்தனர்.

பேரண்டத்தின் இயல்பின் நிலைகளயும் மனிதனான பின் ஆறாவது அறிவின் தன்மை எப்படிச் செயல்படுகிறது…? என்ற நிலைகளையும் அறிந்துணர்ந்தவர்கள் மகரிஷிகள்.

நெருப்பில் நஞ்சினைப் போட்டால் அந்த நெருப்பின் தன்மை  நஞ்சினை எப்படி வீழ்த்தி விடுகின்றதோ இதைப் போல நஞ்சினை ஒடுக்கி ஒளியின் சிகரமாக மாற்றிடும் நிலைகள் பெற்றது மனிதனின் ஆறாவது அறிவு என்றும் காட்டினார்கள் ஞானிகள்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு நஞ்சினை வென்று
1.ஏழாவது நிலையாக ஒளியாக மாறுவதைத்தான் சப்தரிஷி என்று சொல்வது.
2.அந்த நிலை பெற்றவர்கள் சப்தரிஷி மண்டலமாக இன்றும் உள்ளார்கள்.

இதைச் சீராகச் செயல்படுத்தவில்லை என்றால் உயிருடன் ஒன்றிய நிலை அற்று மனித உரு இல்லாது நஞ்சு கொண்ட உடல்களைத்தான் பெற முடியும்.

உதாரணமாக நாம் மாட்டிற்கு ஆகாரம் போடுகிறோம் என்றால் கடும் நஞ்சாக இருக்கும் நாற்றமாக இருக்கும் அந்த நீரை ஊற்றுகின்றோம்.

மாடு அதை உணவாக உட்கொண்டு அதிலே கலந்த நஞ்சினைத் தன் உடலாக மாற்றிக் கொண்டு அந்த நஞ்சின் வலிமை கொண்டு ஒரு இயக்கச் சக்தியாக மாற்றி உடலின் வலிமையை அது பெறுகின்றது.

அதாவது நஞ்சைத் தன் உடலாக மாற்றிவிட்டு அதனுடைய மலத்தை நஞ்சற்றதாக மாற்றுகின்றது.

மனிதனான நாமோ உணவாக உட்கொள்ளும் அதற்குள் இருக்கும் நஞ்சினை நீக்கிவிட்டு நமது உடலை நல்லதாக (அதாவது) ஆறாவது அறிவாக அடைகின்றது.

நஞ்சினை மலமாக மாற்றி நல்ல உணர்வின் தன்மை உடலிலிருந்து வரக்கூடிய அந்த மணத்தைத்தான் ஆறாவது அறிவாக உணர்த்துகின்றனர்.

எதையும் சரணமடையச் செய்யும் சக்தியான நம் ஆறாவது அறிவைத்தான் கார்த்திகேயா என்று காரணப் பெயர் வைத்தனர் ஞானிகள்.

அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை அடக்கி இருளை நீக்கிப் மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

மனிதனின் நிலைகள் முழுமை அடைந்து விண் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன்.
1.தான் நுகரும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக்கி
2.தனி மண்டலமாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அந்த அகஸ்தியன் உமிழ்த்திய உணர்வின் தன்மையை எவரெவர் கவர்ந்தனரோ அவர்கள் ஆறாவது அறிவின் தன்மையை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றவர்கள் அனைவருக்குமே
1.தீமைகளை அகற்றிடும் நிலையும்
2.நஞ்சினைத் தனக்குள் அடக்கிடும் ஆற்றலும்
3.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சிகரமாக மாற்றும் நிலைகள் வருகின்றது.

பேரண்டத்தின் உண்மைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்தியைத்தான் உங்களுக்குச் சொல்லி வருகின்றோம். அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து தான் நானும் இதைக் கண்டேன் என்று குருநாதர் உணர்த்தினார்.

குருநாதர் பதியச் செய்த உணர்வை எனக்குள் வளர்க்கும் பொழுது அகஸ்தியன் கண்ட உண்மைகளை என்னாலும் (ஞானகுரு) அறிய முடிந்தது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நுகர்ந்து நஞ்சினை வென்று ஒளியாக மாற்றும் அந்த ஆற்றலை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

Leave a Reply