பிறரைத் தாக்கும் நிலைகளுக்கு நம் எண்ணம் சொல் செயல் செல்லாது “எல்லோரையும் காக்கும் சக்தியாக” நாம் செயல்பட வேண்டும் – “தாக்கும் சக்தி.., காக்கும் சக்தி”

healing rays

பிறரைத் தாக்கும் நிலைகளுக்கு நம் எண்ணம் சொல் செயல் செல்லாது “எல்லோரையும் காக்கும் சக்தியாக” நாம் செயல்பட வேண்டும் – “தாக்கும் சக்தி.., காக்கும் சக்தி”

 

(1)ஆனைமலைக் காட்டிற்குள் எம்மை அழைத்துச் சென்றார், குருநாதர்

ஒரு சமயம் குருநாதர் எம்மை யானைக் காட்டுக்குள் கூட்டிக்கொண்டு போனார். “நீ இதைப் போய் ஒரு அடையாளத்தை எடு”. இந்த இடத்தில் நீ போய் இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.

 

சாயங்காலம் பொழுது சாய்ந்த நேரம் ஆனைமலைக் காட்டுக்குள்ளே யானையைக் குழி தோண்டி பிடிப்பார்கள். யானைகளைக் குழி தோண்டிப் பிடிக்கின்ற இடம் அது. அந்த இடத்திற்கு, என்னை கூட்டிக்கொண்டு போகின்றார் குருநாதர்.

 

கூட்டிக்கொண்டு போகும்போது அவர் பின்னாடியே நான் போனேன். ஒரு பெரிய மரத்தின் அருகிலே  நின்று கொண்டார். ஒத்தையடிப் பாதை இருக்கின்றது. இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் நான் நடக்க வேண்டும்.

 

சாயங்காலம் ஆறு மணிக்கு மேலே அங்கே யானைகள் நடமாட்டம் இருக்கக்கூடிய நேரம். தண்ணீருக்கோ தான் போகின்ற இடத்திற்கோ இருப்பிடத்திற்கோ போகக்கூடிய  நேரம்.

 

அப்படிப்பட்ட இடத்தில் கொண்டு போய்விட்டு நீ போய் இன்ன இடத்தில் இன்ன மாதிரி மரம் இருக்கின்றது. இன்னென்ன மாதிரித் தடம் இருக்கும். நீ அங்கே போய் ஒரு அடையாளத்தை எடுத்துக்கொண்டு வா என்கிறார், குருநாதர்.

 

“சரி…” என்று சொல்லிவிட்டுப் போனேன்.

 

ஒரு இரண்டு பர்லாங்கு நடந்திருப்பேன். இவர் இங்கே இருக்கிறார். அங்கே என்ன இருக்கின்றது? அந்தப் பக்கம் பதுங்கு குழி தோண்டிருக்கிறார்கள் அந்தப் பதுங்கு குழி தோண்டியிருக்கின்ற இடத்தில்  குச்சியை  ஊன்றிக்கொண்டே வருகிறது  ஒரு யானை.

 

முதலில் வந்தது ஒரு கொம்பானை பெரியது. அப்படியே ஆளைப் பார்த்தவுடனே காது இரண்டும் விடைத்துவிட்டது. “காதை விடைத்தாலே… அடிக்கும்” என்று தெரியும்.

 

நான் பேசாமல் இருந்தேன். பேசாமல் இருந்தோம் என்றால் ஒன்றுமில்லை.

 

இப்படிக் காதை தூக்கி, விடைத்து விட்டு நிமிர்ந்துவிட்டது. அதற்குp பயம் வந்துவிட்டது என்று அர்த்தம். “நிச்சயம் நம்மை அடிக்கும்” என்பது உறுதியாகி விட்டது.

 

இங்கே  எனக்கு தன்னாலே கலக்கின்றது.

 

(2) குருநாதர் எனக்குக் கொடுத்த “சக்தி”

ஆனால் குருநாதர் என்னிடம் “சக்தி” கொடுத்திருக்கிறார். எப்படிப்பட்ட சக்தி கொடுத்திருக்கிறார்?

 

அதாவது ஒரு யானையை…, “போகும் பொழுதே நீ இந்த மாதிரிச் சொல்லி செய்தாய்…” என்றால், அதற்குக் கையும் வராது காலும் வராது. அப்படியே நின்று போகும்.

 

அது எத்தனை வந்தாலும் நீ இதைச் சொல்லி நீ இப்படிச் செய்  என்கிறார் குருநாதர்.  ஆனால் அதையும் சொல்லிவிட்டு அடுத்து என்ன செய்தார்?

 

(3) மற்றொன்றைத் தாக்கும் சக்தியை எடுத்தால் அது நம்மைத்தான் முதலில் பாதிக்கும்

நீ கையும் காலும் வராதபடி அதை நினைத்து இதை நீ உனக்குள் எடுக்கும் போது அது “முதலில்” உன்னிடம் விளைகின்றது.

 

அப்பொழுது இது விளைந்த பிற்பாடு அந்தச் சக்தி கொண்டு யானக்குக் கை கால் வராமல் செய்யும்படி நீ செய்தாய் என்றால் என்ன ஆகும்?

 

1.இன்றைக்கு நீ செய்து விடுகின்றாய்.

2.கை கால் விளங்காத அந்தச் சக்தியை உன்னில் சேர்த்துக் கொண்டாய் அல்லவா.

3.அந்தக் கை கால் விளங்காத சக்தி உனக்குள் விளையும் என்று குருநாதர் இதையும் சொல்லி விட்டார்.

 

இதை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எதற்காக வேண்டி இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் குருநாதர் கஷ்டப்பட்டார் சில உண்மைகளைச் சொன்னார். மனித வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டி இதையெல்லாம் காட்டுகின்றார்.

 

காட்டுக்குள் யானை போகின்றது, புலி இருக்கின்றது, கரடி இருக்கின்றது, இத்தனையும் இருக்கின்றது, ஆனால், “இப்பொழுது நீ தைரியமாகப் போ” என்று சொல்லிவிட்டு, இந்தச் சக்தியைச் செய்தே காண்பிக்கிறார்,

 

குருநாதர். எம்மையும் அந்தச் சக்தியை “இப்படி அப்படிச் செய்து பார்க்கச் சொல்கிறார்…”

 

இப்பொழுது அங்கே போகும் போது நீ இந்த மச்சத்தை (அடையாளத்தை) எடுத்து வா என்று சொல்லி எனக்கு இப்படித்தான் அனுபவம் கொடுத்தார்.

 

அது ஒரு முச்சந்தி நான்கு சாலை சந்திக்கின்றது. முன்னாடி ஒரு கொம்பானை வருகின்றது. இதைப் பார்த்தவுடனே குருநாதர் நினைவு வருகின்றது.

 

அவர் கொடுத்த சக்தியை எண்ணினோம் என்றால் அதனுடைய கை கால் வாயைக் கட்டி நீ சில நிலைகளைச் செய்யலாம்.

 

அப்படிச் செய்தால் முதலில் இதை நீ எடுத்துக் கொள்கிறாய். அப்புறம் இது இணைத்து உன்னிடம் விளையும் இன்னும் கொஞ்சம் நாளில் உனக்கு கை கால் வராமல் போய்விடும்.

 

இந்த வயதுக்குள்ளே நீ எதை எடுக்கின்றாயோ, இப்பொழுதே நீ பார்க்கலாம். ஏனென்றால் ஒரு விதையைப் போட்டோம் என்றால் அது முளைக்கின்றது. நீ எந்த அளவுக்கு வேகமாக எடுத்து அதை முளைக்க வைக்கின்றாயோ அந்த அளவுக்கு அது முளைக்கின்றது.

 

அந்த அளவுக்கு அதை அடிக்கடி நீ செய்ய ஆரம்பித்துவிட்டால் சீக்கிரம் விளைந்து சீக்கிரமாகவே நீ கை கால் முடங்கி நீ இருந்து கொள்ள வேண்டும்.

 

இந்தச் சக்தியை எல்லாம் முதலில் எமக்குக் கொடுத்துவிட்டு இந்தச் சக்தியை நீ எடுத்துப் பயன்படுத்தினால் “இப்படியெல்லாம் ஆகும்” என்று சொல்கின்றார் குருநாதர்.

 

(4). “யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே”

இதை  எதற்காக உங்களுக்குச் சொல்கிறோம் என்றால் இப்பொழுது அடுத்தவர்கள் என்ன செய்வார்கள்?

1.“உன்னை என்ன செய்கிறேன் பார்…?” என்று சொல்வார்கள்.

2.“நீ உருப்படுவாயா…” என்பார்கள்.

3.“நீ இப்படி நாசமாகப் போய்விடுவாய்…” என்பார்கள்.

 

இந்த உணர்வுகளை எல்லாம் முதலில் எடுத்துக் கொண்டால் என்னவாகும்? ஆக அதுவெல்லாம் முதலில் நமக்குள்ளே விளைகின்றது. அடிக்கடி சொன்னால் என்னவாகும்? அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளரும்.

 

நாம் சொல்லும் போது என்ன செய்யும்? அடுத்தபடியாக, இந்தச் சொல் அடுத்தவரிடம் பேசப் போனால் நமக்கு எதிரியாக வரும். “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே”.

 

நீங்கள் பாத்திரத்தில் ஒரு பொருளைப் போட்டு, வேக வைத்தால் என்ன வாசனை வரும்? இதே மாதிரி உங்கள் எண்ணத்திற்குள் போட்டீர்கள் என்றால் அந்த எண்ணம் உள்ளே விழுகின்றது.

 

இந்த வேதனையும், சங்கடமும், எடுத்து வேக வைத்தால், கை கால் குடைச்சல் “அம்மா..,” என்று சொல்வோம். நல்ல சொல்லே நம்மால் சொல்ல முடியாது.

 

இதே சொல்லை அடுத்தவர்களிடம் பேசும் பொழுது இதனுடன் கலந்து பாலில் கொஞ்சம் போல காரத்தைப் போட்டால் என்ன செய்யும்?

 

சாப்பிட்டால், “உஷ்.., உஷ்..,” என்று சொல்லிவிட்டுப் பாலைக் குடிக்க முடியாமல் வைத்துக் கொண்டிருப்போம். பாலில் இனிப்பு மட்டும் தனியாக இருந்தால், “கட கட.. கட கட..” என்று போகும்.

 

இதைப்போல உங்கள் சொல் எந்தக் காரியத்திற்குப் போனாலும் நல்லவர்களையும் எதிரியாக்குகின்றது, உங்கள் மனதுதான்.

 

இதைச் சொல்கிறார் குருநாதர்.

 

இந்த வாழ்க்கையில் இப்படியெல்லாம் வரும். உன்னிடம் இப்படிப்பட்ட சக்தி இருக்கிறது என்று

1.நீ உன் திறனைக் காட்டினாய் என்றால்

2.இது எதிரியாகத்தான் வரும்.

 

(5) யானையிடமிருந்து தப்பிக்க “என் திறமைக்கு..” விட்டுவிட்டார் குருநாதர்

ஆனால் எனக்கு விஷயத்தைச் சொல்லாமல் யானைக்காட்டிற்குச் சொல்லி அனுப்பிவிட்டு இத்தனை சக்திகளையும் கொடுத்துவிட்டு வேறு எதுவுமே சொல்லாதபடி என் திறமைக்கு விட்டுவிட்டார் குருநாதர்.

 

ஆனால் இப்பொழுது உங்களுக்கு யாம் எல்லா விஷயத்தையும் சொல்கின்றோம்.

 

எனக்கு விஷயத்தைச் சொல்லாதபடி மந்திரத்தைக் கொடுத்து இதைச் செய் என்றால் கை கால் வராது. அங்கே புலி வருகிறதென்றால் இப்படிக் கட்டிவிடலாம் மண்டி போடச் செய்யலாம் எல்லாம் செய்யலாம்.

 

யானை… அது ஒன்றுமில்லாத ஐந்தறிவு ஜீவன். அதற்குத் தெரியாது. ஆனால் நீ எல்லா விஷயத்தையும் தெரிந்து எடுக்கின்றாய். உன்னிடம் நான் சக்தியைக் கொடுக்கின்றேன். இதை நீ செய்கின்றாய். ஆனால், இதை வைத்து அங்கே போகும் போது “இது தான் ஆகும்…” என்று சொல்கிறார்.

 

நான் இதை வைத்துக்கொண்டு என்ன செய்தேன்? அங்கே பார்த்தவுடனே  இது அத்தனையும் ஞாபகத்திற்கு வருகின்றது.

 

காப்பாற்றுவதற்கு என்ன வழி என்று குருநாதர் சொல்லவில்லை.

 

என்ன செய்வது…? வேறு வழியே இல்லை. அந்தச் சக்தி எனக்குத் தெரியாது.

 

ஆனால் என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேண்டி உயர்ந்த சக்தியை குருநாதர் கொடுத்திருக்கின்றார் என்று சொன்னால் என்ன செய்கின்றது?

 

அது கெடுதல். அது கை கால்களை முடக்கச் செய்கின்றது. அதற்கு புத்தி வரவழைப்பதற்குத் தெரியாது அப்போது அந்த யானைக்கு “நல்ல புத்தி வரவழைப்பதற்கு எப்படி…!” என்று சொல்லவில்லை குருநாதர்.

 

யானை அப்படியே குச்சியை ஊன்றிக் கொண்டு வருகின்றது. இப்படியே பார்க்கின்றது. முன்னாடி வந்த யானை என்னைப் பார்த்தவுடனே, காது இரண்டும் விடைத்துவிட்டது.

 

எப்படி…?

 

இப்படி முச்சந்தியில் நான் போனவுடனே பத்தடி வித்தியாசத்திற்குள்ளே இருக்கின்றது சந்திப்பு.

 

ஓடினால், தாவி இரண்டே எட்டில் எட்டிப் பிடித்துவிடும் வேறு வழி இல்லை. அதற்குப் பின்னாடி வருகின்றது ஒரு கூட்டம்.

 

ஏனென்றால் இந்தப் பதுங்குகுழி போட்டு வைத்துள்ளதால் அந்த வெறித்தனமாக வருகின்றது.

 

குழி தோண்டி வைத்திருக்கிறார்கள் என்பதால் மனிதனைக் கண்டால் விரட்டி விரட்டி அடிக்கும்.

 

அந்த மாதிரிக் குழிதோண்டி பிடிப்பதால் அதில் அது அனுபவப்பட்டது. அதனால், பயத்தினால் முதலில் அடித்துப் போட்டு விட்டுத்தான் இரண்டாவது மற்ற வேலையைப் பார்க்கும்.

 

இப்படி வந்துவிட்டது.

 

(6) யானையைப் பார்த்து, பயம் ஆனதும் எனக்கு ஏற்பட்ட நிலைகள்

அப்படியே நின்றவுடனே நான் வேஷ்டியில் கழிந்துவிட்டேன். முதலில் சக்தியைக் கொடுக்கின்றார். ஆனால் அதை அப்படிப் பயன்படுத்தினால் இப்படி ஆகிவிடுவாய் என்று அதையும் இவர் சொல்கிறார்.

 

கடைசியில் நம்மிடம் வந்தால் என்ன செய்யும் என்று அப்படியே கழிந்துவிட்டேன்.

 

இனி என்ன செய்வது…, “சாமி…” என்றேன் நான்

 

அப்படிச் சொன்னதும் “முன்னே வைத்த காலை…, பின்னே வைக்காதடா…” என்கிறார் குருநாதர்.

 

யானையைக் கண்டவுடனே, அவ்வளவு பயமான உணர்வுகள் எடுத்து, எம்மைக் கட்டுப்படுத்த முடியாதபடி உறுப்புகள் அனைத்தும் இயங்குகின்றது.

 

ஆக அந்தப் பயமான அலைகளைச் சுவாசித்து அதிக நேரம் வாழ முடியாது.

 

அப்படி எடுத்த சுவாசம் ஒரு செகண்டுக்குள்ளே “கட.. கட.. கட.., என்று வயிறு பொருமுகின்றது. எல்லாம் போகின்றது. எனக்கு பலவீனமாகின்ற மாதிரி ஆகிவிட்டது.

 

அந்தச் சுவாசத்தைக் காட்டுகிறார். அந்த இடத்தில் பய உணர்வுகளை நீ எடுக்கப்போகும் போது… எப்படியாகின்றது…? என்கிறார் குருநாதர்.

 

ஒரு மந்திர உணர்வை நீ எடுத்துச் சொல்லப்போகும் போது அது எப்படித் தாக்குகின்றது? அதே மந்திர உணர்வை நீ எடுத்து மற்றதை அழிக்கும் நிலைகள் கொண்டு வரும் போது பின்னாடி உன் உடலில் எப்படி விளைகின்றது?

 

இதுதான் அனுபவம்.

 

இது விளைந்த பிற்பாடு அடக்கி விடுகிறாய். பின்னாடி அதே  நிலைக்கு நீ ஆகின்றாய். அதுதான் கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்

 

“ஐய்யய்யோ.., நான் பிழைக்கப் போகின்றேனா?” அதை நினைத்தவுடன் அந்த உணர்வின் தன்மை கை கால் “வெட.. வெட.. வெட..,” என்று வருகின்றது

 

“முன்னே வைத்த காலை, பின்னே வைக்காதே” என்கிறார் குருநாதர்.

 

நான் எதைச் செய்வது? இங்கே தாங்க முடியவில்லை. வேறு வழி இல்லை. இப்பொழுது கோயிலில் போய் முறையிடுகின்ற மாதிரித் தான் யாமும் அந்த நேரத்தில் செயல்பட்டோம்.

 

(7) யானைகளுக்கு “என்னைத் தாக்காத எண்ணம் வரவேண்டும்” என்று எண்ணினேன்

குருநாதருடைய அருள்வழி எனக்குள்ளே இருந்து அதாவது, என்னைக் காக்கக்கூடிய எண்ணமாக எனக்குள் வளர வேண்டும்.

1.என்னைப் பார்க்கும்போது யானைக்கு “ஒரு நல்ல மனது”

2.அது என்னைத் தாக்காத எண்ணம் வர வேண்டும் என்று எண்ணினோம்.

 

ஏனென்றால் குருநாதர் இருப்பதனால், அவர் இவ்வளவு தைரியமாக அணுகுவதனால் இந்தக் கெட்ட சக்தியை எடுப்பதற்குப் பதில் குருவின் துணை கொண்டு அதை எண்ணி “தாக்காத எண்ணமாக எனக்குள் வரவேண்டும்” என்று எண்ணினோம்.

 

மலமெல்லாம் பயத்தில் கழிந்த பிற்பாடு “இனி எப்படியோ…!” விதி போல் ஆகின்றது. நாம் எண்ணிப் பார்ப்போம் என்று ஏங்கும் பொழுது “அப்படி உதயத்தைக் கொடுக்கிறார் குருநாதர்”.

 

அப்பொழுது அந்த உதயத்தைக் கொடுத்து அந்த அலைகளை எடுக்கும் போதுதான் அப்படியே நின்று செய்தவுடனே “கண்ணை இறுக்கி மூடிவிட்டேன்”.

 

இந்த வேகம் என்ன செய்கின்றது? எனக்குள் அந்த அலைகள் வருகின்றது.

 

போகிற யானை சும்மாவா போகின்றது. அது என்னை உரசிக் கொண்டே போகின்றது.

 

உரசியவுடனே என்ன செய்கின்றது? கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றேன். நினைவு எல்லாம் இங்கே இருக்கின்றது. “யானைகளுக்கு என்னைத் தாக்காத உணர்வு வர வேண்டும்” என்ற நினைவை ஓங்கி வளர்த்து குருதேவரை நினைத்து நின்றுவிட்டேன்.

 

யானைகள் அனைத்தும் எம்மை ஒன்றும் செய்யாமல் அமைதியாகச் சென்றன. பின் குருநாதர் சொன்ன அடையாளத்தை எடுத்து வந்தோம்.

 

இது நடந்த நிகழ்ச்சி.

Leave a Reply