வேதனைகளிலிருந்து விடுபட்டு செல்வாக்குடன் வாழுங்கள்

Divine bliss.jpg

வேதனைகளிலிருந்து விடுபட்டு செல்வாக்குடன் வாழுங்கள்

1.கொதி நீரில் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ
2.அந்தப் பொருளின் மணம்தான் அதிலிருந்து வெளிப்படும்.

இதைப் போன்று நாம் நுகரும் நிலைகள் கொண்டு நம்முடைய மனங்களும் எண்ணங்களும் செயல்களும் வெளிப்படுகின்றன.

நம்முடய உயிர் நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் செயலாக நம்மிடத்தில் உருவாக்குகின்றது.

“ஓம் ஈஸ்வரா” என்று நம் உயிரைத் தான் சொல்கின்றோம். நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சத்தை “ஓ…” என்று பிரணவமாக்கி “ம்…” என்று நமது உடலாக்குகின்றது.

நமது உயிருக்குள் உருவாகும் “வெப்பம்…” நாம் எண்ணியதை உருவாக்கும் சக்தியாக இருந்து நம்மைக் காக்கின்றது.

1.நம்மை இயக்குவதற்கு மூலமாக இருந்து ஈசனாகச் செயல்படுவது நமது உயிரே.
2.நமக்கு குருவாக இருப்பது நமது உயிர்.
3.குருவை (உயிரை) நாம் மதித்திடல் வேண்டும்.

அவனால் உணரப்பட்ட தன்மை நமது உடலாக மாறுகின்றது. சிவத்துக்குள் சக்தியாக நாம் எண்ணிய சக்திகள் அனைத்தும் இயங்குகின்றன.

ஆனால், நமது ஆசையின் வேட்கையில் நம்மை மனிதனாக ஆக்கிய இந்த உணர்வுகளை நாம் இழந்துவிடக்கூடாது.

நாம் கடைக்குச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பொருளையும் தரம் பார்த்துத்தான் வாங்குகின்றோம்.

இருந்தாலும் வீடு வந்து சேர்ந்த பின் அந்தப் பொருள்களை எடுத்துப் பார்க்க்கின்றோம்.

அப்பொழுது அவைகளில் ஒன்றிரண்டு உபயோகிக்க முடியாத அளவுக்கு கெட்டுப் போயிருப்பதைப் பார்த்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா…?

1.கெட்டதைத் தூக்கி எறிந்துவிட்டு
2.இனி அடுத்து எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

இந்த மனிதன் முழுமை அடைய வேண்டுமென்றால்.., “இந்த உடலில் எவ்வளவு குணச் செல்வங்கள் இருந்தாலும்  வேதனை என்ற நஞ்சான உணர்வானால் குணச் செல்வம் அழிந்துவிடுகின்றது”.

நமது மனித வாழ்க்கையில் வரும் வேதனை என்ற தீய உணர்வுக்குள் நாம் அமிழ்ந்துவிடக்கூடாது.

ஏனென்றால் வேதனை வேதனை என்று சதா வேதனையை எண்ணிச் சுவாசித்தால் நம் சுவாச நிலையே மாறிவிடும். சுவாச நிலை மாறினால் அதற்குத்தக்க தான் நம்முடைய இயக்கங்களும் இருக்கும்.

உதாரணமாக ஒரு தேளோ விஷமான பூச்சியோ நம்மைக் கடித்தால் நமக்கு நல்ல சிந்தனை வருகின்றதா…? இல்லை. அப்பொழுது அந்த விஷத்தை முறியடிக்கும் மருந்தினை உட்கொள்ளும்பொழுது அது ஒடுங்குகின்றது.

ஆகவே, இப்படி ஆகிவிட்டதே.., இப்படியே ஆகிக் கொண்டிருக்கின்றதே.., என்று எண்ணுவதை விட்டுவிட்டு
1.இனி…, அடுத்து என்ன செய்ய வேண்டும்?
2.என்ன செய்தால் சரியாகும்…?
3.”அதற்குண்டான மார்க்கம்” எனக்கு வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தை எண்ணிச் சிறிது நேரம் புருவ மத்தியின் வழியாகச் சுவாசித்தால் அதற்குண்டான மன வலிமை கிடைக்கும்.

நம் சுவாசம் சீராகும். அருள் மகரிஷிகளின் அருள் மணங்கள் நம் சுவாசத்திற்குள் வரும். அப்பொழுது நல்ல சிந்தனையும் தக்க உபாயங்களும் உதயமாகும்.
1.வேதனைகள் ஒடுங்கும்.
2.வேதனையை ஒடுக்கும் ஆற்றல் பெருகும்.
3.வேதனையை நீக்கும் சக்திகள் நமக்குள் கூடும்.
4.மகிழ்ந்து வாழும் அருள் ஞானம் கிடைக்கும்.

ஆக நாம் சேமிக்கும் இந்த அருள் செல்வத்தால் நம் குணச் செல்வங்கள் சீராகும்.

செய்து பாருங்கள்.

 

Leave a Reply