கோவிலில் விளக்கை வைத்து ஏன் காட்டுகிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்கின்றோமா? உணர்ந்திருக்கின்றோமா?

vilakku poojai.jpg

  1. ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள்

கோவிலில் விளக்கை வைத்து ஏன் காட்டுகிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்கின்றோமா? உணர்ந்திருக்கின்றோமா?

 

நாம் ஒருவரை ஒரு வேலைக்கு அனுப்பும்போது நம் வழக்கத்தில் எப்படிச் சொல்கிறோம்?

“எப்பொழுது பார்த்தாலும் தவறாகத் தான் செய்வார்கள்..,” என்ற நிலையிலேயே தான் நாம் சொல்லி வருகிறோம்.

நல்லபடியாக அந்த வேலையைச் செய்து வாருங்கள் என்று சொல்வதில்லை. அதற்கு மாறாக, “தவறாகச் செய்துவிட்டு வந்துவிடாதீர்கள்..,” என்றுதான் சொல்கிறோம். “வேண்டுமென்றே தவறாகச் செய்துவிடாதீர்கள்..,” என்றும் சொல்வோம்.

நாம் சொல்லும் வாக்குப்படிதான் அங்கே நடக்குமே தவிர “நல்லது செய்து வருவதற்குண்டான.., ஊக்கத்தை நாம் கொடுக்கிறோமா..?” என்றால் இல்லை.

அதற்குத்தான் கோவிலிலே “விளக்கை” வைத்துக் காட்டுகிறார்கள்.

1.நம் வாழ்க்கையில் நிதானித்து.., சிந்தித்துச் செயல்படும் அந்த நல்ல வழியைக் காட்டுவதற்குத்தான் அங்கே விளக்கைக் காட்டுகிறார்கள்.

2.பொறுமை வருவதற்குத்தான் அங்கே விளக்கைக் காட்டுகிறார்கள்.

கோவிலிலே தீபாரதனை காட்டுகிறார்கள். அப்பொழுது தீபத்தின் ஒளியால் அங்கே இருக்கும் அனைத்துப் பொருள்களும் தெரிகிறது.

நம் உடலுக்குள் நல்ல குணங்கள் மறைந்திருக்கின்றது. அப்பொழுது நாம் என்ன செய்யவேண்டும்?

1.நமக்குள் உள்ள நல்ல குணங்களைத் தெரிந்து

2.மற்றவர்களுக்கு நல்லதை – அந்தத் தெளிவாக்கும் நிலைகளை நாம் சொல்லிப் பழக வேண்டும்.

3.அதற்காகத் தான் கோவிலிலே விளக்கை வைத்துக் காட்டுகிறார்கள்.

ஆனால், விளக்கைக் காட்டும்போது எத்தனை பேர் இப்படி எண்ணுகிறோம்?

கோவிலிலே அந்த விளக்கைக் காட்டும் போது பார்த்தோம் என்றால் அவரவர்கள் குடும்பத்திற்குத் தக்கவாறு வீட்டில் உள்ள கவலைகளையும் சஞ்சலங்களையும் வேதனைகளையும் எண்ணுவோம்.

1.வீட்டில் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்,

2.வியாபாரத்தில் கொடுத்தவன் கொடுக்கவில்லை,

3.பக்கத்து வீட்டுக்காரன் நான் ஒன்றும் செய்யாமலே எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்

என் கணவர்.., (அல்லது) என் மனைவி என்னை எதிர்த்துப் பேசிக் கொண்டிருக்கின்றார்…, என்னை மதிப்பதே இல்லை..,

என்று அவரவர்களுக்குத் தக்கவாறு நுகர்ந்த உணர்வுகள் கொண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றோம்.

பொருளறிந்து செயல்படும் திறன் நாம் எல்லோரும் பெறவேண்டும் என்பதற்குத்தான் “வெளிச்சத்தைக் காட்டி” நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளை எப்படிக் காக்கப்பட வேண்டும் என்பதற்குத்தான் அங்கே விளக்கைக் காட்டுகிறார்கள்.

எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும், தொழில் செய்வோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

தொழில் செய்யும்போது நீயா.., நானா..,? என்று போட்டியின் நிலைகள் வரும் பொழுது நாம் தெரியாமால் ஒரு வார்த்தையைச் சொல்லிவிடுவோம் அல்லது அவர்கள் சொல்லிவிடுவார்கள்.

அப்பொழுது.., ஏன் சொன்னார்கள்.., எதனால் சொன்னார்கள்..,? ஏன் அவ்வாறு நம் மீது கோபித்தார்கள்..,? என்று  ஒரு நிமிடம் நாம் சிந்தித்தோம் என்றால்

1.அவர்கள் கோப உணர்வு நம்மை இயக்காது.

2.அந்தக் குற்ற இயல்புகள் அங்கே வராது.

“ஈஸ்வரா..,” என்று நம் உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இதை எடுத்தோம் என்றால் தீமையான உணர்வுகளை நிறுத்தி விடலாம்.

துருவ நட்சத்திரம் சர்வ தீமைகளையும் வென்று ஒளியாக மாற்றியது. ஆக, ஈஸ்வரா என்று எண்ணி நிறுத்தும்போது பிறர் வெறுப்பின் உணர்வுகள் உள்ளே புகாது காத்துக் கொள்ள முடியும்.

இதைத் தான் இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினான் என்று உணர்த்தியுள்ளார்கள். “மறைந்திருந்து.., தீமையின் செயலாக்கங்களை அடக்கினான்..,” என்றுதான் காட்டுகிறார்கள்.

கோவிலுக்குச் சென்றால் தெய்வீகப் பண்புகள் நாங்கள் பெறவேண்டும், தெய்வீகச் செயலாக எங்கள் செயல் அமைய வேண்டும், இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவரும் அந்த தெய்வீகச் சக்தி பெறவேண்டும் என்று நாம் எண்ணினால் ஒருவருக்கொருவர் தீமைகளை மறக்கின்றோம்.

“எல்லோரும் ஒன்றுபட்டு வாழும் நிலை வருகிறது”.

இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று ஆலயத்தில் காட்டியுள்ளது போன்று நாம் அனைவரும் ஞானிகள் உணர்த்திய அந்த தெய்வ குணத்தைப் பெறுகிறோம்.

Leave a Reply