பழனியில் “பித்தரைப் போன்று” இருந்த ஈஸ்வரபட்டரின் அபூர்வமான செயல்கள்

eswarapattar blessings

பழனியில் “பித்தரைப் போன்று” இருந்த ஈஸ்வரபட்டரின் அபூர்வமான செயல்கள் 

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பழனியில் ஒரு பித்தரைப் போல இருப்பார் என்றாலும் பிறர் அவரைப் “பித்தர்” என்றே எண்ணுவார்கள்.

ஒவ்வொரு மனிதனும் எப்படிப் பித்துப் பிடித்துச் செல்வம் தேட வேண்டும் என்று எண்ணுவான். அதே சமயத்தில் செல்வத்தில் குறை என்றால் பித்துப் பிடித்து “வெறி பிடித்தவன்” போல் மற்றவரை எப்படித் தாக்குகின்றான்…!

பித்துப் பிடித்து மற்றவர்களுக்கு எப்படித் தொல்லைகள் கொடுக்கின்றான்…! ஒவ்வொரு மனிதனும் “பித்துப்பிடித்துத்தான் அலைகின்றான்” என்று சொல்வார்.

குருநாதர் போஸ்ட் கம்பத்தில் கல்லைக் கொண்டு தட்டுவார். அலோ.., ஹலோ.., என்பார்.

“ஏன் சாமி.., கல்லைக் கொண்டு போஸ்ட் கம்பத்தில் தட்டுகிறீர்கள்..,?” என்று கேட்டேன்

நீ தான்டா.., கேட்கின்றாய். மற்ற எல்லோருமே என்னைப் “பைத்தியக்காரன்..,” என்று சொல்கின்றார்கள். நான் டெலிபோன் செய்கின்றேன் என்கிறார்.

என்ன சாமி டெலிபோன் செய்கின்றீர்கள்?

இந்தக் கம்பத்தின் மூலம் ஆண்டவனுக்கே அனுப்புகின்றேன். அந்த ஆண்டவன் என்பது “யார் தெரியுமா..,?” என்றார்.

நான் தட்டும் உணர்வுகள் சேர்த்து “உயிரில் பட்டபின்” அந்த ஆண்டவன் என்ன செய்கின்றான்? இந்த உணர்வை என்னைச் செயல்படுத்தச் சொல்கின்றான்.

தட்டும் பொழுது நான்.., எதை எண்ணித் தட்டுகின்றேன்?

ஏனென்றால்.., “தட்டும் பொழுது.., சப்தம் வருகின்றது”. ஒவ்வொரு பொருளிலும் தட்டும் பொழுது அதில் என்னென்ன நாதம் வருகின்றது?

கல்லில் தட்டினால் ஒரு நாதம் மண்ணிலே தட்டினால் ஒரு நாதம் மரத்தில் தட்டினால் ஒரு நாதம் உலோகத்தில் தட்டினால் அது ஒரு நாதம்.

ஆக, உணர்வின் ஒலியின் நிலைகள் நான் தட்டும் பொழுது என் உயிரான இவனுக்கே எட்டுகின்றது. அப்படி எட்டும் பொழுது நான் என்ன செய்கிறேன்?

1.இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தெரிந்து வாழ வேண்டும்.
2.அந்த ஆண்டவன் கட்டிய ஆலயத்தில் அவர்கள் பரிசுத்த நிலைகள் பெறவேண்டும்.
3.அவர்கள் புனிதம் பெறவேண்டும்.
4.புனிதமான வாழ்க்கை வாழ வேண்டும்.
5.புனிதமான ஆலயமாக மாற்றவேண்டும்.

இப்படி இதை நினைத்து நான் டெலிபோன் செய்கின்றேன் என்கிறார் குருநாதர்.

ஆனால், வழக்கமாக நாம் டெலிபோன் செய்தால் மற்றவர்களிடம் என்ன கேட்கின்றோம்?

உங்கள் வீட்டில் எல்லோரும் நன்றாக இருக்கின்றார்களா? என்ன..,? ஏது…? என்று கேட்கின்றோம்.

அதனால் என்னை ஆளும் ஆண்டவனுக்கு இதைத் தட்டி அவனுக்குள் இந்த உணர்ச்சியை ஊட்டுகின்றேன் என்கிறார் குருநாதர்.

1.உலக மக்கள் தன்னையறியாமல் எத்தனையோ நிலைகளை செய்கின்றனர்.
2.இந்த உடலாசை கொண்டு அவர்களை இயக்கும் ஆண்டவனை மறந்துவிட்டார்கள்.3.அவர்களை ஆளக்கூடிய ஆண்டவனை மறந்து வாழ்கின்றனர்.

அவர்களுக்கெல்லாம் “அந்த ஆண்டவனை நினைவுபடுத்துவதற்கு” இதை நான் பாய்ச்சினேன்.

என்னைப் “பித்தன்..,” என்கிறான். ஆனால் அவன் பித்தனாக இருக்கின்றான்.

தன் காரியம் செயல்படுத்தவில்லை என்றால் “எத்தனாகவே.., மாறிவிடுகின்றான்”. பிறருக்குத் தொல்லை கொடுத்து வாழும் எத்தனாக வாழ்கின்றான்.

இவனை எத்தன் என்று மற்றொருவன் சொல்கின்றான். ஆக அவனும் பித்தனாகவே மாறுகின்றான். அடுத்து அவனும் எத்தனாகவே மாறிக் கொண்டிருக்கின்றான்.

அவன் உடலிலே வாழும் “அவன் உடலை உருவாக்கிய.., அந்த உணர்வின் ஈசனை மறந்து விட்டான்”. அந்த ஈசனே இவனை ஆள்கின்றான் என்று அந்த ஆண்டவனை மறந்து மனிதனான பின் மறந்தே வாழ்கின்றார்கள்.

எமக்குள் (ஞானகுரு) இதைத் தெரியப்படுத்துகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

“நீ தான்.., கேட்டாய்… அதனால் உனக்குச் சொல்கின்றேன்”.

“மற்ற எவனும்” கேட்கவில்லை. அவனுக்குச் சொல்லவில்லை. அவனுக்கு டெலிபோன் பண்றேன்.

அவன் உடலில் உள்ள “ஆண்டவன்” அவனை ஆள்கின்றது. அவனுகெல்லாம் “நல்ல சிந்தனை கொடு..,” என்று அவனுக்கு (ஆண்டவனுக்கு) நான் டெலிபோன் செய்கின்றேன்.

இப்பொழுது யாம் உபதேசிப்பதை நீங்கள் கேட்டால் உங்களுக்குக் கிடைக்கின்றது.

ஆனால் கேட்டுக் கொண்டிருந்தாலும்.., “ஏதோ பைத்தியக்காரன் சொல்கின்றான்.., ஊரை ஏமாற்றுகின்றான்..,” என்று சொன்னால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? அவரவர்கள் ஆசை கொண்டு (அவர்கள்) பைத்தியமாக இருக்கின்றார்கள்.

ஆனால், நான் என்ன செய்கின்றேன்? என்று (குருநாதர்) என்னிடம் கேட்கின்றார். என் உடலில் உள்ள துணியை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டேன். ஏனென்றால், எனக்கு “இந்த ஆடை” பாதுகாப்பாக இல்லை.

அவர்களுக்குள் இருக்கும் எல்லா ஆண்டவனுக்கும் டெலிபோன் செய்கின்றேன்.

1.அந்த உடலை நீ பாதுகாத்துக் கொள்
2.அந்த உடலுக்குள் நல்ல நிலைகளைச் செயல்படுத்து.

எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லும் பொழுது எனக்குள் என்ன நடக்கின்றது.

“நான் எண்ணக்கூடியது.., (இந்த ஆடை) இந்த  ஆன்மா” எனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றது. “நான் இந்த ஆடையைத்தான்.., விரும்பினேன். ஆனால், என் கிழிந்த ஆடையைப் பார்த்தவுடனே “என்னைப் பைத்தியம்” என்று சொல்கின்றார்கள் என்று தெளிவாக்கினார் குருநாதர்.

இதைக் கேட்டவுடனே எனக்கும் (ஞானகுரு) அந்த அழகான ஆடை “என் உள் மனது என்னை அழகுபடுத்துவதும்.., உயிருடன் ஒன்றி மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது”

உங்கள் ஒவ்வொரு உயிரையும் ஆண்டவனாக மதித்து நான் சொல்லும் பொழுது எனது சொல்லைக் கேட்கும் பொழுது உங்களுக்கும் அந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் கிடைக்கும். இந்த உணர்வு பெறவேண்டும் என்பவருக்கு அங்கே மகிழ்ச்சி நிச்சயம் கிடைக்கும்.

அதே சமயத்தில் என் கிழிந்த துணிகளைப் பார்த்து மற்றவர்கள் “என்னைப் பைத்தியம்..,” என்ற நிலைகளை எண்ணும் பொழுது அவர்கள் பைத்தியத்திலிருந்து மீள முடியவில்லை.

ஆக மொத்தம் ஒவ்வொரு மனிதனும் பித்துப் பிடித்துத்தான் அலைகின்றனர். தன் பிள்ளையைச் சீராக வளர்க்க வேண்டும் என்று பித்துப் பிடிக்கின்றான்.

தன் பிள்ளை சரியாக வரவில்லை என்றால் எத்தனாகவே மாறுகின்றான். பிள்ளையை உதைக்க ஆரம்பிக்கின்றான்.

இந்தப் பித்து எத்தனாக மாறுகின்றது. என்ன சொன்னாலும் என் பையன் கேட்க மாட்டேன் என்கிறானே.., என்ற இந்த உணர்வு கொண்டு நாம் தாக்குகின்றோம்.

இதைப் போல தொழிலில் ஒருவருக்கு உதவி செய்கின்றோம். அதைச் சரியானபடி நாம் செய்தாலும் நாம் எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால் “எத்தனகாகப் பேசுகின்றோம்.., திட்டுகின்றோம்”.

இப்படிப்பட்ட உணர்வுகளை எடுத்துப் பித்தனாகத்தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்கின்றானே தவிர என்னைப் பித்தன் என்கின்றனர். இந்த ஆடையும் அலங்காரமும் எனக்கு ஒன்றும் செய்யவில்லை.

அழகான ஆன்மாவை.., நான் சேர்க்கின்றேன்..,. “பாருடா..,” என்று என்னிடம் சொல்கின்றார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

1.அவரை உற்றுப் பார்க்கும் பொழுது
2.அவருக்குள் “அகண்ட அண்டத்தின்” உணர்வின் தன்மை
3.”அவருடைய ஆன்மாவில்.., எப்படிக் கலந்துள்ளது” என்று அறிய முடிந்தது.

குருநாதர் எனக்குக் (ஞானகுருவிற்கு) காட்டிய இந்த நிலைகளை எல்லாம் நீங்களும் பார்க்கலாம். “எந்த அளவிற்கு.., ஆர்வமுடன் இருக்கின்றீர்களோ..,” அதைப் பார்க்கலாம்.

அவரின் ஆன்மாவை “என்னில் பார்..,” என்று அவர் சொல்கிற பொழுது அவரின் உணர்வுகள் அந்த மகிழ்ச்சிக்குரிய நிலைகள் வருகின்றது.

அவரைப் பார்த்தபின்.., “எனக்கும் ஏகாந்த நிலை.., என்ற மகிழ்ச்சி” வருகின்றது.

என்னுடைய ஆடை எப்படி இருக்கின்றது? மற்றவர்களுடைய ஆடை எப்படி இருக்கின்றது.

மற்றவர்கள் ஆடை வெளுப்பாக இருக்கின்றது. ஆனால் சொல் எப்படி இருக்கின்றது? வேதனை என்ற உணர்வுடன் தான் வருகின்றது. அந்த வேதனையை நீ நுகர்ந்தால் உன் நிலை என்னாகின்றது? என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.

இப்படிப் பித்தர்களாக வாழும் நிலை தான் இன்று இருக்கின்றது. யாரையும் தவறாகச் சொல்லவில்லை. அவன் படும் ஆசை அவனுக்குள் செயல்படுகின்றது. அவரவர் ஆசையே அவருக்குள் மாற்றிக் கொண்டுள்ளது.

இந்த உடலின் இச்சையிலிருந்து நாம் மாற்றி “ஒளியின் உணர்வின்.., ஆன்மாவைச் சேர்த்தால்..,” இன்றைய செயல் நாளைய உடலாக மாறுகின்றது என்று காட்டுகின்றார் குரு.

அவர்களுக்குள் அருள் ஒளி என்ற இந்த உயர்ந்த ஆசையை ஊட்டும் பொழுது அதைப் பெற்றால் அவருக்குள் இருளச் செய்யும் அந்தத் “தீமையான உணர்வுகள் மாறுகின்றது”.

ஒவ்வொரு உயிரும் கடவுள் என்று.., “அவன் வீற்றிருக்கும் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்..,” என்று தான் இந்தக் கல்லை வைத்து போஸ்ட் கம்பத்தில் அடிக்கின்றேன்.

உன்னையும் இப்பொழுது “அடித்தேன்டா…,” என்கிறார் குருநாதர்.

உனக்குள் செவிகளில் அந்த நாதம் படுகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு.., “ஏன் சாமி அடிக்கின்றீர்கள்..,?” என்று கேட்டாய்

நீ இதன் மேல் இச்சைப்படுகின்றாய். இந்த இச்சையின் உணர்வு “உனக்குள் செயலாக்கும்” என்று சொன்னார்.

தன் ஆன்மாவைப் பார்க்கச் செய்து பார்த்துக் கொண்ட உணர்வு கொண்டு அகஸ்தியன் அக்காலத்தில் எப்படி வாழ்ந்தான் என்று அவன் வாழ்ந்த காலத்திற்கே என் உணர்வினைக் கொண்டு செல்கின்றார்.

அவன் இன்று துருவ நட்சத்திரமாக வாழ்வதைக் காட்டி அவன் ஈர்ப்பு வட்டத்தில் சென்றடைவதே “உன் வேலை” என்று தெளிவாக்கினார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் எல்லோரும் அருள் ஒளி என்ற உணர்வினை வளர்த்து அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள். உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற்றிடுங்கள்.

Leave a Reply