நாரதன் எல்லா லோகத்திற்கும் சென்று “ஒவ்வொருவரையும் சந்திக்கின்றான்” – விளக்கம்

Narad muni

இன்று விஞ்ஞானிகள் கம்ப்யூட்டர் என்ற சாதனைத்தை உருவாக்கி அதிலே எந்தெந்த உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்கின்றனரோ அதை வைத்து இயக்குகின்றனர்.

“அப்படிப் பதிவாக்கிய நிலைகள் கொண்டு” அடுத்துச் செயல்படுத்தும் பொழுது அதிலே பிழைகள் வந்தால் அந்தப் “பிழைகளைத் திருத்தி.., அது எப்படி இருக்க வேண்டும்..,?” என்று மாற்றியமைக்கின்றனர்.

இதைப் போல் தான் உங்கள் உடல்களில் அருள் ஞானிகளின் உணர்வுகளை ஆழப்பதிவு செய்கின்றோம்.

அதைப் பதிவாக்கிவிட்டால் எப்பொழுது துயரம் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா.., என்று உங்கள் உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் கவர்வீர்கள் என்றால் அந்த உணர்வுகள் வலுப் பெறும்.

அந்த உணர்வுகள் வீரியமடைந்து.., “தவறு நாம் செய்தோமா..,? அல்லது மற்றவர்கள் தவறு செய்கின்றனரா..,?” என்ற நிலையைச் சிந்தித்து மற்றவர்களுக்கும் நல்வழி காட்டும்.

அப்பொழுது, “நமக்குக் கோபம் வராத நிலையும்.., அல்லது அவர்கள் கோபப்படும் நிலைகளிலிருந்து.., கோபப்படாத நிலையைச் செயல்படுத்தச் செய்யும்” நிலைகளும் வரும்.

ஆகவே, தவறுகள் நமக்குள் வராதபடி அருள்ஞானத்தின் உணர்வின் தன்மை பெறும்.

இதைத்தான் காவியங்களில் ரிஷியின் மகன் நாரதன் என்றும் நாராயணனின் அபிமான புத்திரன் என்றும் அவன்.., “கலகப்பிரியன்” என்றும் காட்டியிருப்பார்கள்.

மனிதனின் வாழ்க்கையில் இருளை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

தீமைகளை ஒடுக்கி இருளை அகற்றி சிந்திக்கச் செய்யும் அந்தச் செயலின் உணர்வுகளை அந்தத் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

துருவ நட்சத்திரம் வெளிப்படுத்திக் கொண்டுள்ள உணர்வினை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தினோம் என்றால் நம்மை அறியாமல் பகைமை உணர்ச்சிகளை ஊட்டும் உணர்வுகளிலிருந்து விடுபடச் செய்து சிந்திக்கச் செய்யும் தன்மை நமக்குள் வரும்.

“நாம் ஏன் கோபிக்க வேண்டும்..,?” என்ற நிலையில் உணர்வைச் சமப்படுத்தி அந்தத் தீமையை அடக்கிவிட்டால்.., “பிறர் செய்யும் தீமையான உணர்வுகள்.., நமக்குள் வளராது தடுக்கப்படுகின்றது”.

இவ்வாறு தடுத்துக் கொண்டு சிறிது நேரத்தில் அடங்கிவிட்டால் “அவருக்குள்.., சிந்திக்கும் தன்மை வர வேண்டும்” என்ற உணர்வை நாம் ஊட்டிவிட்டால் அவர் செய்யும் தவறான உணர்வுகள் இங்கே வராது.

அதே போன்று நாம் பண்பு கொண்டு பரிவு கொண்டு ஒரு நோயாளியின் உணர்வைப் பாசத்தால் நுகர நேர்ந்து விட்டால் அந்த வேதனை உணர்வுகள் நம் இரத்தநாளங்களில் கலந்து நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

ஆனால், அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நம் இரத்தநாளங்களில் கலந்து அந்த உணர்வுகளை வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

நாம் பெருக்கிய அந்த அருள் உணர்வின் வலுவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவர் உடலில் படர்ந்து அவர் உடல் நலம் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அவருக்குப் பூரண குணம் கிடைக்க வேண்டும் பண்புள்ள நிலைகள் பெறவேண்டும் என்ற இந்த உணர்வுகளை நாம் எடுத்து அங்கே அவரிடம் செவி வழி ஓதும் பொழுது நாம் சொல்லும் உணர்வுகள் அந்த உடலில் ஊடுருவுகின்றது.

அப்பொழுது அது அவரின் வேதனைகளை மாற்றி அவரை நல்லவராக்கும் தன்மை வருகின்றது. நமக்குள் அந்த வேதனை புகாதபடி தடுக்கப்பட்டு அவர்கள் நல்லவராக வேண்டும் என்ற நிலையைத்தான் காட்டுகின்றது.

இங்கே நாரதன் கலகப்பிரியனாகின்றான்.., கலகமோ நன்மையில் முடிகின்றது.

இதைத்தான் நாரதன் என்ன செய்கின்றான்? எல்லோரிடத்திலும் செல்கின்றான். எல்லோரையும் சந்திக்கின்றான்.

ஆக, ஒருவருக்கொருவர் சந்தித்து ஒருவரின் உணர்வுகள் ஒருவருக்குள் கல்க்கப்படும் பொழுது அந்தப் பகைமை உணர்வுகள் எப்படி மாறுகின்றது? பகைமைகளிலிருந்து எப்படி ஒன்று சேர்க்கின்றது என்ற நிலையை அங்கே நாரதனாகக் காட்டினார்கள் ஞானிகள்.

ஒவ்வொரு மனித உடலுக்கும் காரணப் பெயர்களை வைத்து நாராயணன் என்றும் ரிஷி என்றும் நாரதன் என்றும் காட்டுகின்றனர்.

நாரதன் ஒருவருடன் ஒருவர் சந்தித்து மீண்டும் மற்றவருடன் சந்தித்து.., ஏனென்றால் கண்ணனிடமும் செல்வான்.., கண்ணனுக்கும் சில உபாயங்களைச் சொல்வான்…, மற்றவர்களுக்கும் சில உபாயங்களைச் சொல்வான்.

நமது கண் மற்றவர்களுடைய தீமைகளை நுகர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகிவிடுகின்றது. மற்றவர்களைப் பார்க்கும் பொழுது அந்தத் தீமையின் உணர்ச்சியால் அந்த தீமை என்ற நிலைகள் வருகின்றது.

அப்பொழுது கண்ணனிடத்தில் இந்த நாரதன் என்ற உணர்வுகள் சென்று “கண்ணன் மாற்றியமைக்கும் உணர்வுகள் எப்படி..,?” என்று உணர்த்துவதற்குத்தான் காவியப் படைப்புகளைப் படைத்துக் காட்டுகின்றனர்.

கண் கொண்டு அந்தத் தீமை செய்யும் உணர்வுகளை நாம் நுகர்ந்தபின் நம் உடலில் எத்தகைய செயல்கள் செயல்படுகின்றது?

இதிலிருந்தெல்லாம் எப்படி விடுபட வேண்டும் என்பதற்குத்தான் ரிஷியின் மகன் நாரதன் என்றும் நாராயணனின் அபிமான புத்திரன் என்றும் தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்கும் மார்க்கத்தை சாதாரண மக்களுக்கும் உணர்த்தப்பட்டது.

தீமைகள் வந்தால் அதிலிருந்து விடுபட ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர வேண்டும் என்று உணர்த்தினார்கள்.

நமக்குள் ஏற்கனவே அறியாத நிலைகள் இருந்தாலும் நாம் பகைமை உணர்வு கொண்டோரைப் பார்க்கும்பொழுதெல்லாம் பகைமை வரும்.

குழந்தை மேல் பாசம் வைத்திருந்தாலும்.., “தன் சொன்னபடி கேட்கவில்லை என்றால்.., அவன் மீது வெறுப்பின் உணர்ச்சியே தான் வருகின்றது”.

இதைப் போன்ற நிலைகளைக் கூட்டாதபடி தடுப்பதற்கு நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துச் சிந்திக்கும் தன்மைகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று தன் குழந்தை சிந்திக்கும் ஆற்றல் பெறவேண்டும் சிந்தித்துச் செயல்படுபவனாக வரவேண்டும். பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி இந்த உணர்வுகளை எடுத்துக் கொண்டு இந்தச் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவன் செவிகளில் பட்டு அவன் செய்யும் தவறுகளிலிருந்து விடுபடச் செய்யும் இந்த நாரதன் என்ற அருள் உணர்வுகள்.

நாரதன் கலகப்பிரியன்.., கலகமோ நன்மையில் முடியும்.

உயர்ந்த உணர்வின் தன்மை அங்கே சொல்லப்படும் பொழுது அவனுக்குள் தீமையின் உணர்வை நீக்கி தாய் தந்தை சொல்லும் உணர்வைச் சிந்தித்து “அதைச் செயல்படுத்தும் நிலைக்குக் குழந்தை வருகின்றான்.

ஆகையினால் தான் காவியங்களை இவ்வாறு படைத்து உருவங்களை அமைத்துக் கொடுத்து அதன் மூலம் அருவத்தின் செயலைக் காட்டினார்கள் ஞானிகள். உண்மையின் உணர்வைத் தெரியப்படுத்துவதற்காக இப்படி உருவாக்கினார்கள் ஞானிகள்.

இருந்தாலும் அதிலே மாற்றமாகி “நாரதனுக்குச் சக்தி உண்டு.., அதனால் எல்லோரிடத்திலும் செல்கின்றான்..,” என்ற இந்த உணர்வுகளைத்தான் நினைக்கின்றோமே தவிர நாம் ஞானிகள் காட்டிய அருள் வழிகளை அறியவில்லை. அறியவிடாது திசை திருப்பியது இந்த உடல் பற்றுத்தான்.

இனியாவது உயிர் பற்று கொண்டு நாம் அந்த மெய்ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி வாழ்வோம். தீமைகளை வென்று ஒளியின் சரீரம் பெறுவோம். பிறவியில்லா பெரு நிலையை அடைவோம்.

Leave a Reply