நல்ல நேரம்… கடவுள் காப்பாற்றினார் என்று சொல்கிறோம்…  நடந்த நிகழ்ச்சி

spiritual-path

நல்ல நேரம்… கடவுள் காப்பாற்றினார் என்று சொல்கிறோம்…  நடந்த நிகழ்ச்சி

யாம் (ஞானகுரு) எப்பொழுதோ இரயிலில் அடிபட்டு இறந்து போக வேண்டிய ஆள்.

எமக்குக் கல்யாணமாகி இருந்த சமயம் அது. மதுரையில் மீனாட்சி மில் கேட்டிலிருந்து வெங்கடாசலபுரத்திற்குப் போக வேண்டுமென்றால் ஒரு இரயில் பாதையைத் தாண்டித்தான் போகவேண்டும்.

இரயில் பாதை பாலத்துடன் கூடியதாக இருந்தது. எமது மனைவியை அழைத்துக் கொண்டு அந்தப் பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தோம்.

நாங்கள் இரயில் பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தோம். அந்தப் பாதையில் இரயில் வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் நாங்கள் தண்டவாளத்தை விட்டுக் கீழே இறங்கிப் போக முயன்றோம்.

கீழே இறங்கிப் போகலாம் என்றால் அங்கே கால் வைக்க முடியாதபடி அளவிற்கு அதிகமாக அசூசையாக இருந்தது.

உடனே என் மனைவி, “அய்யய்யே..,” என்று மூக்கைப் பொத்திக்கொண்டு எம்மையும் சேர்த்து இரயில் தண்டவாளத்திற்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.

எமக்கு யோசிக்க நேரமில்லை, இரயில் அருகில் வந்துவிட்டது.

உடனே என் மனைவியை இரயில் பாதையின் மறுபக்கம் தள்ளிவிட்டு யாம் இந்தப் பக்கம் தாவிக் குதித்து வந்துவிட்டோம். ஒரு நொடிப்பொழுது தாமதித்திருந்தால் இரயிலில் அடிபட்டு இறந்திருக்க வேண்டியதுதான்.

இது நடந்த நிகழ்ச்சி.

இது போன்று ஒரு சமயம் தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சர்பத் தயாரித்து விற்று வந்தோம். அப்பொழுது வியாபாரத்திற்குச் செல்ல யாம் இரயில் பாதையைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

ஒரு ஆளை வேலைக்கு வைத்து தள்ளு வண்டியில் சர்பத் தயாரிப்பதற்குண்டான சரக்குகளை ஏற்றி அவரை முன்னால் செல்லும்படி செய்தோம். யாம் பின்னால் வந்துகொண்டிருந்தோம்.

அப்படி வரும் பொழுது இன்றைக்கு இத்தனை பாட்டில் விற்றால் இவ்வளவு இலாபம், அவ்வளவு இலாபம் என்று மனதில் கணக்குப் போட்டுக் கொண்டு வந்தோம்.

அது சமயம் “இரயில் பாதையில்.., இரயில் வந்துகொண்டிருந்தது” எமக்குத் தெரியவில்லை.

ஆனால், சர்பத் வண்டியைத் தள்ளிச் சென்றவர் இரயில் பாதையைக் கடந்து சென்றுவிட்டார்.

யாம் மனதில் கணக்குப் போட்டுக் கொண்டே.., “இரயில் வருவது தெரியாமல்” இரயில் பாதையில் தண்டவாளத்தில் கால் வைக்கச் சென்றோம்.

அப்பொழுது எமது முதுகின் மேல்.., “ஒரு கல்” வந்து விழுந்தது.

“யாரடா.., என் மீது கல் வீசுவது?” என்று வேகமாகத் திரும்பிப் பார்த்தோம். அங்கே ஒருவரையும் காணவில்லை.

“என் மீது யார் கல் வீசியது?” என்று திரும்பிப் பார்த்த சமயத்தில் இரயில் வேகமாகச் செல்கிறது. அது சமயம கல் என் மீது விழுந்திருக்கவில்லை என்றால் அன்றைக்கே யாம் இரயிலில் அடிபட்டு இறந்திருப்போம்.

பின்னாளில் குருநாதர் என்னிடம், “அன்று உன் மீது நான் கல் வீசவில்லையென்றால்.., நீ இரயிலில் சிக்கி நசுங்கியிருப்பாய்” என்று கூறினார்.

இது நடந்த நிகழ்ச்சி.

குருநாதர் “என்னை எப்படி எப்படியோ.., கண்காணித்துக் காப்பாற்றி வந்து.., என்னை அவர்பால் ஈர்த்துக் கொண்டார்”.

குருநாதர் என்னை எப்படி எப்படியோ காப்பாற்றி வந்தார் என்று யாம் உங்களிடம் கூறுகின்றோம். ஆனால், அதே சமயம் எம்மைக் கஷ்டப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்.

ஒவ்வொரு சமயமும் எமக்குக் கஷ்டங்களைக் கொடுத்துத்தான் “உண்மைகளை.., யாம் அறியும்படி செய்தார்”.

ஆனால், யாம் உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் கஷ்டங்களை நீக்குவதற்கு “உபாயங்களைக் கூறி வருகிறோம்”.

நமது அன்பர்கள் குரு காண்பித்த அருள்வழியில் தியானம் செய்வார்கள்.

“நன்றாக இருக்கிறது” என்றும் கூறுவார்கள், சில நன்மைகளும் பெறுவார்கள் பிறகு, தியானம் செய்வதை விட்டுவிடுவார்கள்.

ஒருவர் தியானத்தில் வளர்ந்தால் அவருடைய குடும்பத்திற்கு நன்மைகள் கிடைக்கும். அவருடைய குடும்பத்தார் அனைவரும் நலம் பெறுவார்கள். அவரால் அவர் வசிக்கும் தெருவிலுள்ளோர் நலம் பெறுவார்கள் என்று “யாம் ஆசைப்பட்டுச் செய்தாலும் கூட.., அதை மறந்து” எமக்கு எதிரியாகத் திரும்புபவர்களும் இருக்கின்றார்கள்.

யானைகள், புலிகள் வாழும் காடுகளில் கூட இது போன்ற நிலை இல்லை. “மனிதர்களின் மத்தியில்தான்..,” இதுபோன்ற நிலைகள் இருக்கின்றன.

நீங்கள் தியானம் செய்கின்ற பொழுது உங்களைப் பார்த்து, “என்ன.., பெரிய தியானம்.., செய்கின்றார்” என்று மற்றவர்கள் கேலியும் கிண்டலும் செய்தால் போதும்.

பிறகு நீங்கள் “ஒளிந்து ஒளிந்துதான்” தியானம் செய்யவேண்டி வரும். மற்றவர்கள் செய்யும் கேலியும் கிண்டலையும் நீங்கள் “ஏற்றுக் கொண்டால்” பிறகு நீங்கள் தியானத்தையே விட்டுவிடவேண்டியதுதான்.

விஷத்தின் தன்மை என்பது “வாலி”, வலிமை அதிகம்.

வாழ்க்கையில் எத்தனையோ தீமைகள் உண்டு. அந்தத் தீமைகளிலிருந்து நீங்கள் மீள்வதற்குண்டான சக்தியை யாம் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில் யாம் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.

உங்களுக்குக் கொடுத்துள்ள அருள் சக்தியின் துணை கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகளை நீக்கிட வேண்டும்.

யாம் உபதேசிக்கும் முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசித்து அதைப் பற்றுடன் பற்ற வேண்டும். அப்பொழுது நீங்கள் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

“இது மிகவும் சுலபமான வழி”. ஒன்றும் கஷ்டமில்லை. “சிறிது காலம்.., கடைப்பிடித்து வந்தால்” பிறகு எல்லாம் சீராக வரும்.

Leave a Reply