நம் கண்ணின் நினைவலைகளை எங்கே செலுத்த வேண்டும்…? ஏன் செலுத்த வேண்டும்…?

1. நம் கண்ணின் நினைவலைகள் எங்கே செல்கின்றதோ அது நமக்குள் பதிவாகி அதனையே இயக்கும்

இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வின் தன்மையை, “சாமி என்ன சொல்கிறார்” என்று கேட்டு உணர்ந்து கொண்டு இருந்தால் இது பதிவாகும். சொல்லும் உணர்வுகளும் தெளிவாகக் கேட்கும். மற்றவர்கள் அருகிலே பேசினாலும் அது செவிப்புலனுக்கு ஏறாது.

ஆனால், இங்கே யாம் உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது “வீட்டுக்கு அவசரமாகப் போக வேண்டும், எப்பொழுது முடிப்பார்” என்று எண்ணினால் யாம் உபதேசிக்கும் உணர்வுகள் பதியாது,

நீங்கள் எண்ணிய உணர்வுதான் இயக்கும். யாம் சொல்லும் இந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகாது.

அதாவது யாம் உபதேசிப்பதைக் கேட்பதற்கு மாறாக, வீட்டில் என்ன நடக்கிறதோ என்ற உணர்வினைப் பதியச் செய்து, பதட்டத்தையும் பயத்தையும் ஊட்டி நல்ல உணர்வுகளைக் கெடுக்கச் செய்துவிடும்,

ஆகவே, நம்முடைய கண்ணின் நினைவலைகள் எங்கே செல்கின்றதோ, அதனின் நிலையே பதிவாகி அதனையே இயக்கும்.

 

2. குருநாதர் எமது கண்ணின் நினைவை அகண்ட அண்டத்திற்கே செலுத்தச் செய்தார்

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னுடைய கண்ணின் நினைவை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கும் நினைவைச் செலுத்தச் செய்தார்.

அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான அந்த எல்லைக்கும் கண்ணின் நினைவலைகளை விண்ணுக்குச் செலுத்தச் செய்தார்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை சந்தர்ப்பத்தால் நுகர நேர்ந்த மனிதர்கள், இன்று அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக சுழன்று கொண்டிருப்பதையும் நேரடியாகக் காணச் செய்தார்.

அதைப் போன்று அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தின் நிலைகளுக்கும், 2000 சூரியக் குடும்பங்களின் நிலையும். அதைப் போன்று 1000, 2000 என்று எத்தனையோ சூரிய குடும்பத்திற்குள்ளும் எமது கண்ணின் நினைவலைகளைச் செலுத்தச் செய்தார்.

அப்படி அவர் நேரடியாக எமக்குள் உணர்த்திய பதிவாக்கிய நிலைகளை யாம் குருநாதர் காட்டிய அருள் வழியில் வளர்த்து, எமக்குள் விளைய வைத்து அதையெல்லாம் உணர்ந்தோம்.

அப்படி யாம் கண்டுணர்ந்த நிலைகளைத்தான் உங்களுக்குள்ளும் உபதேசம் என்ற நிலையில் பதிவாக்குகின்றோம். நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்களும் இதைக் கண்டுணர வேண்டும் என்ற ஆசையில்தான் இதை வெளிப்படுத்துகின்றோம்.

ஆகவே, உங்கள் கண்ணின் நினைவலைகளை விண்ணிலே செலுத்தி அந்த அகஸ்திய மாமகரிஷி கண்ட அத்தனை பேருண்மைகளையும் நீங்கள் அறிய முற்படுங்கள்.

தன்னைத்தான் அறிதல் என்ற நிலையில் தன்னை அறிந்து, உலகை அறிந்து, மெய்யை அறிந்த அந்த மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை நீங்கள் எல்லோருமே அடைய முடியும். அதற்குத்தான் இதைச் சொல்கின்றோம். எமது அருளாசிகள்.

 

Leave a Reply