
ஆத்ம சுத்தியும் விநாயகர் தத்துவமும்
காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எத்தனையோ துன்பங்களையும் துயரங்களையும் கேட்டறிந்துள்ளோம்… வேதனைப்படுவோரைப் பார்த்துள்ளோம்.
1.இந்த உணர்வுகள் அனைத்தும் நம் ஆன்மாவிலே உள்ளது.
2.அத்தகைய அணுக்கள் அந்தச் சக்தியைக் கவரும் பொழுது நம் ஆன்மாவாக அது சேமிக்கப்படுகின்றது.
3.அந்த உணர்வுக்கொப்ப உடலில் உள்ள அணுக்கள் எந்த அளவிற்கு உந்துகின்றதோ அந்த அளவிற்கு நாம் சுவாசிக்கின்றோம்.
4.சுவாசிக்கும் பொழுது உணர்வுக்குத் தக்க எண்ணங்களும் உணர்வுகளும் வரும்
ஆகையினால் மனிதன் ஒரே எண்ணத்திலே இருக்க வேண்டும் என்றால் முடியவே முடியாது.
உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் எந்தெந்த குணத்தால் அணுக்கள் உருவானதோ… அது எதைத் தேட எந்த மனித உடலில் இருந்து வந்ததோ அதைக் கவரும். ஏனென்றால் சூரியனின் காந்த சக்தி அதை அலையாக மாற்றி வைத்திருக்கும்.
அந்த உணர்வுகளை நுகரும் பொழுது உயிருடன் ஒன்றி உணர்ச்சிகள் தோன்றும். அந்த உணர்ச்சிக்கொப்ப அணுக்கள் உணவாக எடுக்கிறது. இப்படி உள் செல்லும் உணர்வினை அது உணவாக எடுத்து வளர்கின்றது.
இதை நாம் தெரிந்து கொண்ட பின் “எதை உணவாகக் கொடுக்க வேண்டும்…?” என்று விநாயகர் தத்துவத்தில் அந்த அருள் ஞானியால் தெளிவாக்கப்பட்டுள்ளது.
1.நாம் மூக்கு வழி சுவாசிக்கும் இந்த ஆன்மாவிலிருந்து தான் என்பதை உணர்ந்து
2.அந்த ஆன்மாவை அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி உயிருடன் ஒன்றி நினைவினை உடலுக்குள் பாய்ச்சுதல் வேண்டும்.
இந்த உணர்வு வலுப்பெறும் போது கெட்ட அணுக்களுக்கு வரும் உணர்வுகள் அடைப்படும் பொழுது இழுக்கும் சக்தி குறைகின்றது… தீமையான எண்ணங்கள் வராதபடி விலக்கி விடுகின்றது.
இப்படி நம் ஆன்மாவை நாம் தூய்மை செய்தல் வேண்டும். இதைப் பழக்கப்படுத்துவதற்குத் தான் விநாயகரை ஆற்றங்கரையில் வைத்தார்கள்.
உயிரணு தோன்றி பல கோடிச் சரீரங்கள் கடந்த பின் நஞ்சினை வென்று மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் பெறுவதற்கு அவ்வாறு வைத்துள்ளார்கள்.
1.இதை எவரொருவர் மறவாது செய்கின்றார்களோ அதன் வழி அவரும்
2.மரணமில்லாப் பெருவாழ்வு வாழ முடியும் என்று தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.
இந்தச் சக்தியை எடுத்துக் கொண்ட பின் தன் மனைவிக்கு துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும்… அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… அவர்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்… அந்த உயர்ந்த சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். என் மனைவி பார்வை என்னை உயர்த்த வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.
இதே போல மனைவியும் அந்தச் சக்தியைப் பெற்றுத் தன் கணவனை எண்ணி என் கணவருக்கு அது கிடைக்க வேண்டும்… அவர் பார்வை என்னை என்றும் உயர்த்த வேண்டும்… நஞ்சினை வென்றிடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று இருவரும் இந்த உணர்வுகளை இப்படி நுகர வேண்டும்.
அதற்குப் பின் தங்களை ஈன்ற தாய் தந்தையருக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
காரணம் அவர்கள் நமக்காக எத்தனையோ வேதனைப்பட்டிருப்பார்கள். அதனால் அவர்கள் உடலில் தீய வினைகளாக நோய்களாக இருக்கும்.
1.அந்த வினைகளை நீக்கிடும் விதமாக இவ்வாறு நாம் செயல்படுத்த வேண்டும்.
2.நம்மைக் காப்பாற்றிய தெய்வத்தை… நமக்கு நல்வழி காட்டிய அந்த குருவான நிலைகளை நாம் மறந்து விடாது
3.அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் சக்தி கிடைக்க வேண்டும் என்று நினைவுபடுத்துவதற்குத் தான் விநாயகர் தத்துவமாகக் காட்டியுள்ளார்கள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.