
வீடுகளில் மாட்டுச் சாணத்தைத் தெளிப்பது ஏன்…? கோலமிடுவதன் தத்துவம் என்ன…?
நாம் நமது வீடுகளில் மாட்டின் சாணத்தைத் தெளித்து மெழுகுகிறோம். இது ஞானிகள் நமக்கு வழிப்படுத்திக் கொடுத்தது.
நாம் வீட்டில் மாடுகளை ஒரு ஒதுக்குப் புறமாகப் பார்த்துத் தள்ளிக் கட்டி வைக்கிறோம். ஆனால் அதனுடைய சாணத்தை வீட்டில் தெளிக்கிறோம். எதற்காகத் தெளிக்கின்றோம் என்று, நமக்குத் தெரிய வேண்டுமல்லவா…?
1.தூசுகளை அடக்குவதற்காகச் சாணத்தைத் தெளிக்கின்றோம் என்று நினைக்கின்றோம்… தூசிகளை அல்ல.
2.வேதனைப்பட்ட உணர்வுகளை அடக்குவதற்காக வீடுகளில் மாட்டுச் சாணத்தைத் தெளிக்கின்றோம்.
3.மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால் வெளியிலிருந்து வரும் தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது.
நாம் வெளியே எங்கே சென்றாலும் அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவிப் படர்ந்துள்ளது. அவைகள் நம் பாதங்களில் பட்டவுடன் நமது உடலில் சேர்கின்றது. அந்த உணர்வின் வலிமையை நுகர்ந்தால் நமக்குள் அது வலிமை பெறுகின்றது.
விஷத்தின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தாலும் வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின் நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.
ஏனென்றால்
1.மாடு விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கிய பின் விஷத்தை நீக்கிய நல்ல உணர்வின் தன்மையாக அதன் சாணம் வெளிப்படுகின்றது.
2.ஆகவே விஷத்தை ஒடுக்கும் வல்லமை அந்த மாட்டின் சாணத்திற்கு உண்டு.
3.ஆகையால் ஞானிகள் “மாட்டின் சாணத்தை, வீட்டில் தெளி” என்றார்கள்.
மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகினால் நம்மால் வெளியிடப்பட்டு வீட்டில் பதிந்துள்ள சங்கடம் சலிப்பு வேதனை போன்ற உணர்வுகளை அது கொல்கின்றது.
வீடுகளில் கோலமிடுவதும் சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை தான்.
வீட்டில் வெறுப்பாக இருப்பார்கள். சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். மாமியார் மீது வெறுப்பு மாமனார் மீது வெறுப்பு கணவர் மீது வெறுப்பு என்று இந்த வெறுப்பின் உணர்வுடன் கோலப் பொடியைக் கையில் எடுத்தால் அதிலிருக்கும் காந்த சக்தி நமது வெறுப்பின் உணர்வை அது கவர்ந்து கொள்ளும்.
இந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால் என்னாகும்…? அது ஒழுங்காக வராது. அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள் ஒரு புள்ளியை வைத்தால் தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.
கோலம் எதற்காகப் போடுகிறார்கள்…? பல புள்ளிகளை வைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.
1.கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள் காந்தப் புலன்களாலானது.
2.காந்தப் புலன்கள் கொண்ட கோலப் பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது
3.நாம் எண்ணுகின்ற உணர்வுகள் கோலப் பொடியில் கலந்து விடுகின்றது.
4.குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று எண்ணி
5,அந்த உணர்வுடன் கோலப் பொடியை எடுத்துப் புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது அங்கே ஒன்றுபடும் தன்மை வருகின்றது.
வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு அனைவரையும் அரவணைக்கும் தன்மை வரவேண்டும்… நமது குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் வரவேண்டும்… இணைந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வுகளை எண்ணித் தான் கோலமிட வேண்டும்.
சாஸ்திரங்கள் காண்பித்த தத்துவங்கள் பொய்யல்ல.
தன் குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் கொள்ளும் பொழுது மகிழ்ச்சியான உணர்வின் தன்மை வீட்டிலே உருவாகின்றது. செய்து பாருங்கள்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.