“உணர்வின் வேகம் மட்டும் இருந்தால்…” சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகிறது

“உணர்வின் வேகம் மட்டும் இருந்தால்…” சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகிறது

 

ஒரு முறை ஆனைமலைக் காடுகளுக்குக் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று விட்டுப் பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்.

பொள்ளாச்சி பஸ் நிலையத்திற்கு அருகில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸிற்கு முன்னால்…
1.ரோட்டைக் கடப்பது போன்று குறுக்கே சென்று எம்மையும் இழுத்தார்.
2.நாங்கள் குறுக்கே புகுந்தவுடன் பஸ் திடீரென்று நின்றுவிட்டது.

உடனே குருநாதர் டிரைவரைப் பார்த்து “மடத்தனமாக வண்டி ஓட்டுகின்றான் பார்…!” என்கிறார்.

பஸ்ஸின் டிரைவரோ “ஏனய்யா புத்தி இருக்கிறதா…? பைத்தியமா பிடித்திருக்கிறது…!” என்று திட்டினார்.

குருநாதரும் “இது போலவா வண்டி ஓட்டுவது…? அறிவு கெட்டதனமாக வண்டி ஓட்டுகிறாய்…” என்று டிரைவரைத் திட்டினார்.

பின் குருநாதர் தெளிவுபடுத்தினார். அதாவது இது போன்று சமுதாயத்தில் சந்தர்ப்பங்கள் சில நேரங்களில் உணர்வின் வேகம் கொண்டு நம் உணர்வுகள் செயல்பட்டுத் தான் செய்த தவறை மறந்து பஸ் டிரைவரைத்தான் குறை சொல்கிறோம்.

1.தவறு எப்படி நேர்ந்தது…? என்று சிந்திக்கத் தவறும் பொழுது
2.டிரைவர் மீது கோபம் கொள்வது போன்ற நிலைகள் ஏற்படுகின்றன.

டிரைவர் பிரேக் போடாமல் விட்டு விட்டால் அங்கே என்ன நேரும்…? என்று நாம் சிந்திப்பதில்லை. நாம் நசுங்கி இருப்போம் என்று அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.

1.டிரைவர் திட்டியது சரிதான் என்று ஏற்றுக் கொள்ளும் நிலை வருமானால் நாளை இது போன்ற அவசர புத்தி நமக்கு வராது.
2.நல்ல அறிவினை ஊட்டினார் என்று எண்ணினால் டிரைவர் மீது பகைமை வராது.

இப்படி குருநாதர் உணர்வுகள் ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியில் கொடுத்தார்.

மக்கள் தங்கள் வாழ்க்கையில் தாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் கொண்டு செயல்படும் பொழுது சிந்தனை அதன்பால் தான் இருக்கின்றதே தவிர அங்கே தாம் செல்லும் பாதையில் உள்ள இடையூறுகள் தெரிவதில்லை.
1.தம்முடைய ஆசையின் நிலைகளிலே செல்கின்றனர்.
2.ஆனால் பாதையில் இருக்கும் ஆபத்தையும் எதிரியையும் மறந்து விடுகின்றனர்.

இது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்துத் தீமைகள் நம்மிடையே வராது விலக்கி அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே
1.நான் கொடுத்த சக்தி கொண்டு பிறரை வீழ்த்துவேன் என்ற அகந்தை கொண்டால்
2.நல்வழியின் உணர்வுகள் உனக்குள் வராது என்று குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்தினார்..
3.ஒருவர் தீங்கு செய்கிறார் என்று எண்ணி அதே உணர்வினை நுகர்ந்தால்
4.நமக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகள் வரும்.

ஆகவே நாம் தீமைகளைத்தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியுமா…? என்று நாம் சிந்தித்தல் வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply