
உணர்வின் இயக்கமாக உயிர் இயக்குகின்றது… உணரும் அறிவே நமக்குள் இருக்கின்றது
ஆற்றிலோ அல்லது ஒரு குளத்திலோ (நீருக்குள்) ஒரு கல்லினைப் போட்டால் அந்த இடத்தில் பளீர் என்று விலகிக் கொள்ளும். அடுத்து அது மூடிக்கொள்ளும்.
அது போன்று தான்
1.பக்தி மார்க்கத்தில் மூழ்கிய நிலைகள் கொண்டு உண்மைகளை மறைத்த நிலைகள் கொண்டு
2.அந்த ஞானிகள் உணர்த்திய உண்மைகளைச் சொல்லி அதற்குண்டான விளக்க உரைகளை இப்போது யாம் (ஞானகுரு) கொடுத்தாலும்
3.கேட்கும் பொழுது பளிச்… என்று அலைகள் உங்களுக்குள் படர்கிறது.
4.ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் மூடி சம நிலை அடைந்து விடுகின்றது.
நல்ல உணர்வுகள் மறைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தீமையின் நிலைகள் வளராது உடனுக்குடன் அதைத் தடுப்பதற்குத் தான் இதனை உங்களுக்குள் அறிவிப்பது.
ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் எங்கு சென்றாலும் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து உள்முகமாகச் செலுத்தி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இப்படி ஐந்து முறை ஆறு முறை உள்ளே சக்கரம் போன்று சுழற்றுங்கள்.
3.உங்கள் ஜீவான்மாக்களைச் சுத்தப்படுத்துங்கள்… உங்களுக்கு முன் இருக்கக்கூடிய ஆன்மாவைச் சுத்தப்படுத்துங்கள்
தொழிலோ மற்ற எந்தக் காரியங்களோ அங்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
எங்களுடன் தொழில் செய்பவர்கள் எங்களிடம் வேலை செய்வோர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… நாங்கள் ஒன்று சேர்ந்து தொழிலை வளம் பெறச் செய்ய வேண்டும்… அறியாது சேர்ந்த இருளை நீக்கும் ஆற்றல் நாங்கள் பெற வேண்டும்…! என்று ஆன்மாவை அடிக்கடி இப்படி எண்ணிச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.
அருள் உணர்வைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கை வாழ்ந்தால் என்றுமே அது மகிழ்ந்து வாழும் சக்தியாக அமையும். வரும் தீமைகளை உடனுக்குடன் அகற்றிட முடியும்.
அதே போல் உங்கள் குடும்பத்தில் எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து அதை நிவர்த்திக்கும் பழக்கம் வர வேண்டும்.
1.இந்த உடல் உங்களது அல்ல
2.எண்ணும் எண்ணம் உங்களது அல்ல
3.உணர்வின் இயக்கமாக உயிர் இயக்குகின்றது
4.உணரும் அறிவே நமக்குள் இருக்கின்றது
5.அறிவின் உணர்வாகத் தான் நம் உணர்வின் தன்மை செயல்படுகின்றது.
ஆகவே அந்த ஞானிகள் காட்டிய அருள் உணர்வுடன் ஒன்றுவோம் அருள் ஞானிகள் பெற்ற ஆற்றலை நாம் பெறுவோம். அறியாது வந்த தீமைகளை அகற்றுவோம்.
1.மகரிஷிகளின் அருள் வட்டத்தை எல்லையாகக் குறி வைத்து
2.இந்த வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.
அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நீங்கள் மகிழ்ந்து வாழ்ந்திட எமது குரு அருளும் எமது ஆசியும் உங்களுக்குள் உறுதுணையாக இருக்கும். உங்களை அறியாத வந்த தீமைகள் அகன்று… மெய் உணர்வுடன் ஒன்றி… பேரானந்தப் பெருநிலை பெறுவீர்கள் என்று பிராத்திக்கின்றேன் (ஞானகுரு).
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.