நாம் வாழும் இந்தப் பூமியே நிலை தடுமாறும் காலம் வருகிறது

நாம் வாழும் இந்தப் பூமியே நிலை தடுமாறும் காலம் வருகிறது

 

இந்த உலகமே துரித நிலைகள் கொண்டு மனிதன் மிருகமாக மாறும் நிலை வருகின்றது… இல்லையென்றால் பூமியே நிலை தடுமாறும் நிலை வருகின்றது.

நிலை தடுமாறி விட்டால் அதை உணரப் போவதில்லை…!

ஆனால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.இந்தத் தியானத்தில் வலுப்பெற்றால் அதையும் நாம் உணர முடியும்
2.அதிலிருந்து விடுபடும் ஞானமும் நமக்கு கிடைக்கும்.

ஆகவே இப்பொழுதிருந்தே அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அணுகுண்டுகளோ மற்ற ஆயுதங்களோ வெடித்தாலும் நம்மைப் பாதிக்காதபடி காத்துக் கொள்ள முடியும்.

எத்தனையோ விஷமான குண்டுகளை பூமிக்கு அடியிலே பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்… ஆனால் பெரும் பகுதி அது வெடிக்கும்…!

அப்படி வெடிக்கும் போது அதனால் ஏற்படும் அணுக் கதிரியக்கங்கள் மேக மண்டலங்களாக மாறி சூரியனுடைய ஒளிக் கதிர்கள் நம் பூமியிலே படாது தடைப்படுத்திவிடும்.
1.அத்தகைய சூழ்நிலை உருவாகி விட்டால் பூமி பனிப்பாறைகளாக மாறிவிடும்
2.பூமி இப்போது இருக்கும் திசை மாறி தலை குப்புறக் கவிழ்ந்துவிடும்.
3.நாமெல்லாம் கடலுக்குள் தான் போக நேரும்.

ஆனால் கடலுக்குள் சென்றபின் இந்த மனித உடலை இழந்து கடல் வாழ் நிலைகளாக… மீன் இனங்களாக உயிர் நம்மை மாற்றிவிடும்.

அதே சமயத்தில் பூமி பனிப்பாறையாக ஆனபின் எடை கூடி சூரியனை விட்டு நகர்ந்து சென்று சிதைவுண்டு… மற்ற ஏதாவது சூரிய குடும்பங்களுக்குள் ஈர்க்கப்படலாம்.

பத்து இருபது வருடங்களுக்கு முன்பே இன்னொரு சூரியக் குடும்பத்தில் இருந்து சிதைவுண்ட (பிரளயத்தில் சிக்கிய) ஒரு பூமி… தப்பித்து நம் சூரிய குடும்பத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது… என்று நான் சொன்னேன்.

நம் பிரபஞ்சத்தில் பனிப்பாறை அதிகமாக உள்ள வியாழன் கோளிலே அது விழுந்து சேதம் இல்லாது அங்கே அடங்கியது. நம் பூமியைப் போல உள்ள அதே உருவம் கொண்டது அது.

நம் பூமியிலே அது விழுந்திருந்தால் நாமெல்லாம் இன்று இருந்திருக்க முடியாது. விஞ்ஞானிகள் இதைக் கண்டு சொல்வதற்கு முன்னாடியே “நம் பிரபஞ்சத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது” என்று சொன்னேன்.

அப்போது அதை யாரும் லட்சியப்படுத்தவில்லை…!

நம் பிரபஞ்சத்தின் ஈர்ப்பிற்குள் வந்து சிதைந்து வியாழன் கோளிலே மோதியது என்று விஞ்ஞானிகளும் பின்னாடி சொன்னார்கள். இது போன்று
1.உலக நிலைகள் மாறிக் கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
2.இந்த மனித உடலில் எவ்வளவு காலம் நாம் வாழப் போகின்றோம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

காரணம்… எத்தனையோ கோடி இன்னல்களில் இருந்து தப்பித்தான் இந்த மனித உடலைப் பெற்றிருக்கின்றோம். நம் உயிர் இந்த உடலை உருவாக்கி உள்ளது.

ஆகவே… குறுகிய காலம் வாழும் நாம் அருள் உணர்வுகளை இப்போது வளர்த்துக் கொண்டால் இன்னொரு உடலின் ஈர்ப்புக்குள் செல்லாதபடி… உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக… வேகா நிலை பெற்றுத் துருவ நட்சத்திரத்தில் ஈர்ப்பு வட்டத்தில் “ஏகாந்த நிலையாக வாழ முடியும்…”

பகைமை என்பதே இல்லாது மகிழ்ச்சி என்ற நிலையில் என்றுமே அந்த அருள் வழியில் நாம் வாழ முடியும். இப்பொழுதிருந்தே இதைத் தயார் செய்து கொண்டால் தான் அந்த நிலை பெற முடியும்.

இறந்த பின் என்னவோ…? அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்…! என்று எண்ணினால் எந்த உணர்வுடன் கடைசியில் இறக்கின்றோமோ இன்னொரு உடலுக்குள் சென்று அங்கேயும் தீயதைத் தான் உருவாக்க முடியும்… மீண்டும் நரக வேதனையைத் தான் பட முடியும்.

இது போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

யாம் சொல்லிக் கொடுக்கும் இந்தத் தியானத்தின் மூலம் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஒவ்வொரு அணுவிலும் துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை வலு ஏற்றப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்பதே என்னுடைய முழுமையான பிரார்த்தனை…!

நீங்களும் அதையே எண்ணி ஏங்கினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம். வளர்க்கும் முறைப்படி இப்படி வளர்த்து விட்டால் பிறவி இல்லா நிலை அடைவது உறுதி…!

Leave a Reply