உலகெங்கிலும் உருவாகிக் கொண்டிருக்கும் சுழிக் காற்றுகள்

உலகெங்கிலும் உருவாகிக் கொண்டிருக்கும் சுழிக் காற்றுகள்

 

முந்தி எல்லாம் தியானத்தில் சூரியனைப் பார்க்கும்படி சொல்லி இருந்தேன். ஆனால் இப்பொழுது சூரியனுக்குள் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவி விட்டது. அதைப் பார்த்தோம் என்றால் நம் கண்களுக்கும் மனதுக்கும் விஷத் தன்மைகள் தான் பரவும்…!

விஷத்தன்மையான நிலைகள் அதிலிருந்து நம் பூமிக்குள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றது. அதனால் சிந்தனையற்ற நிலைகளும் புதிய நோய்களும்… ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும் உணர்வுகளும் வளர்ந்து கொண்டுள்ளது.

1.மற்றவரைக் கொல்ல வேண்டும் என்ற உணர்வு தான் மனிதர்களுக்கு வருகின்றதே தவிர காக்க வேண்டும்… என்ற உணர்வு உலகெங்கிலும் இல்லை
2.எந்தக் கோவிலுக்கு யார் சென்றாலும் இவன் உருப்படுவானா…? என்று சாபம் விடும் நிலை தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது

எந்த மதமானாலும் அவர்கள் ஆலயங்களுக்குள் சென்று தெய்வத்தை வணங்கினாலும் தன் குடும்பங்களைப் பற்றிய சிந்தனைகள் வரப்படும் பொழுது ஒருவருக்கு ஒருவர் சாபம் விட்டு… அவர் கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வுகளைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் வெளியிலே சொல்லும் பொழுது… “நான் எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன்… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள் அவர்கள் உருப்படுவார்களா…?” என்று குறைகளை வளர்த்துக் கொள்ளும் நிலை தான் வருகிறது.

அப்படி எல்லாம் இல்லாதபடி
1.எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.எங்கள் பார்வையில் தீமைகள் அகல வேண்டும்
3.எங்கள் குழந்தைகள் அருள் ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானிகளாக வளர வேண்டும்
4.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்
5.நாங்கள் பார்க்கும் அனைவருக்கும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

காரணம் விஞ்ஞான அறிவில் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது. பல வகையான வெடி குண்டுகளைத் தயார் செய்து வைத்துள்ளார்கள்.

கடலிலிருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து அணுவைப் பிளந்து மற்றொன்றுடன் அதாவது நியூட்ரான் புரோட்டான் என்ற நிலைகள் சில இதுகளைக் கலந்து வைத்துள்ளார்கள்.

சாதாரணமாக… நட்சத்திரத்தின் துகள்கள் வெளி வரப்படும் பொழுது சூரியன் இழுத்து அதைக் கவர்ந்து விட்டால் “நியூட்ரான்…” அது அழுத்தமாகச் செல்லும் பொழுது இந்த விஷத்தன்மையைக் கண்டபின் மற்ற அனைத்துமே பயந்து ஓடுகின்றது.
1.அப்போது ஒன்றோடு ஒன்று மோதி பல கலவைகளாக மாறிச் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
2.அதை எடுத்து இராக்கெட்டில் இணைத்து விண்ணிலே செலுத்துகின்றான் விஞ்ஞானி.
3.அதை வைத்து நியுட்ரான் குண்டு என்று தயார் செய்துள்ளார்கள்.

அந்த நியூட்ரான் குண்டுகளை வெடிக்கச் செய்தால்… மனிதன் இருக்கும் பக்கம் பட்டால் சிந்தனை இழந்து பைத்தியம் பிடித்த மாதிரி மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

கட்டடங்கள் மற்றும் எல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் இங்கு மனிதர்கள் வாழ முடியாது. அத்தகைய புத்தி பேதமாக்கும் உணர்வலைகள் காற்றிலே பரவுகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வெளி வரும் கதிரியக்கச் சக்திகள் தான் பூமிக்குள் உருவான கல் மண் உலோகங்கள் அனைத்திற்குமே மூல காரணம். அனைத்திலுமே அந்தச் சக்தி உண்டு.

அதே சமயத்தில் மனிதன் செயற்கையாக உருவாக்கிய கதிரியக்கப் பொறிகள்… அணு மின் நிலையம் மற்றும் அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் போது அந்தக் கதிரியக்கங்களின் கசிவுகள் அனைத்தையுமே சூரியன் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

இது காற்றலையில் பரவிப் போகும் போது ஆரம்ப நிலையில் “நியூட்ரான்” என்று அழுத்தம் ஆன பின் தன் அருகிலிருப்பதை எப்படி அது விரட்டிச் சென்றதோ அதே மாதிரி
1.அதுவும் இதுவும் (இயற்கையில் உருவானதும் செயற்கையின் கசிவுகளும்) மோதிய பின் பெரும் சுழிக்காற்றாக மாறுகின்றது
2.கல்லுக்குள் மண்ணுக்குள் கட்டடத்திற்குள் இது பாய்ந்து அதனுடைய அழுத்தம் வீரியமடைந்து
3.பெரிய காற்றாடி போல போகும் பாதையில் உள்ள அனைத்தையும் பிய்த்து எறிந்து கொண்டு செல்கிறது.

அமெரிக்காவில் இது அதிகமாக நடக்கிறது… பத்திரிகையில் நீங்கள் படித்திருப்பீர்கள் மற்ற நாடுகளிலும் இப்பொழுது சிறுகச் சிறுக வந்து கொண்டிருக்கின்றது.

எங்கெங்கே செயற்கையில் அணுக்கதிரியக்கங்களை உற்பத்தி செய்து பரவச் செய்துள்ளார்களோ அந்த நாடுகளில் எல்லாம் இது சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றது. பெரிய பெரிய கட்டிடங்களும் சுக்கு நூறாகித் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கின்றது.

அதே சமயத்தில் அத்தகைய சுழிக் காற்று
1.கடல் பக்கம் செல்லும் போது அங்கிருக்கும் நீரைக் கவர்ந்து பெரும் பெரும் மேகங்களாகக் குவித்து
2.நகரத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்து பெரும் மழை நீராக… ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை
3.சில மணி நேரங்களிலேயே கொட்டு கொட்டு என்று கொட்டி ஊர்களையே நாசம் பண்ணுகின்றது.

எதிர்பாராதபடி அழிக்கக்கூடிய சக்தியாக உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது. நீங்கள் டிவியில் பத்திரிகைகளும் பார்த்திருப்பீர்கள்.

இன்று…
எந்த நிமிடம்…
எந்த இடத்தில்…
என்ன நடக்கும்…? என்று தெரியாத நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

இது போன்ற சூழ்நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி இருந்தால்
1.நாம் இருக்கும் பக்கம் அத்தகைய சுழிக் காற்றுகள் வராது தடுக்கும்
2.அல்லது நம்மை ஒதுக்குப் புறமான இடத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.

Leave a Reply