நன்மை தீமையைப் பார்ப்பதைக் காட்டிலும்… “வேண்டியவரா… வேண்டாதவரா…” என்று தான் முதலில் பார்க்கின்றோம்
கண் கொண்டு ஒருவரைப் பார்க்கின்றோம்…
1.அவர் தனக்கு வேண்டிய நண்பர் என்று எண்ணும் பொழுது அவர் செய்யும் குறைகளை மறந்து விடுகின்றோம்.
2.அவர் எவ்வளவு குறைகள் செய்யட்டும்… தப்புகள் செய்யட்டும்… அந்தக் குறைகளை எண்ணுவதில்லை.
அவர் செய்யக்கூடிய தவறுகளைப் பற்றி யாராவது நம்மிடம் வந்து சொன்னால் “இல்லைங்க… அவர் நல்ல மனிதர்” என்று நாம் சொல்லி விடுகின்றோம்.
ஆனால் அதே சமயத்தில் “நமக்கு அவரைப் பிடிக்கவில்லை” என்ற உணர்வை எடுத்தவுடன்
1.அவர் நல்லது செய்கிறார் என்றாலும் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பாகத்தான் எண்ணுகின்றோம்
2.அவர் எவ்வளவு நல்லது செய்யட்டும்… வெறுக்கத்தான் செய்வோம்.
இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று காட்டப்பட்டது.
பாசத்தால் வரும் போது “வேண்டியவர்” என்று எண்ணும் பொழுது குறைகளை நீக்கும் உபாயத்தைக் காட்டுகின்றோம்.
ஆனால் “நமக்குப் பிடிக்கவில்லை” என்றால் அவர் நல்லது செய்தாலும் அவர் செய்வதைக் கெடுப்பதற்கு என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.
1.ஆக எந்த எண்ணத்தை எடுத்துக் கொள்கின்றோமோ அதுவாக நாம் ஆகின்றோம்.
2.நம் கண் பார்வையும் அதுவாக ஆகின்றது…. அதன் செயலாக்கமாகவே நம் கண்ணும் வழிகாட்டுகின்றது.
ஒன்றைப் பார்க்கப்படும் பொழுது உணர்வின் ஒளியாகக் காட்டுவது கண்களே. அந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டபின் குருக்ஷேத்திரப்போர்… அந்த உணர்வின் இயக்கமாகத்தான் நம்மை இயக்குகின்றது.
கண் எதைக் காட்டியதோ அந்த உணர்வின் அணுவாக அது விளைகிறது. அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் எண்ணும் போது அதுவே நமக்குள் பார்வையாக வருகின்றது
அதனால் தான்
1.மகரிஷிகள் இத்தகைய தீயவினைகளை நீக்கிடும் விதமாக விநாயகர் சதுர்த்தி என்று காட்டியுள்ளார்கள்.
2.தீமைகள் உனக்குள் விளையாது நிறுத்து… சதுர்த்தி செய்…! என்று சொன்னார்கள்.
3.சந்தர்ப்பத்தால் நமக்குள் வரும் பகைமைகளை உருவாகாதபடி தடுக்க வேண்டும்.
ஆனால் இன்றைய காலகட்டங்களில் விநாயகர் சதுர்த்தி அன்று தீய வினைகளை நாம் ஞானிகள் காட்டிய வழியில் நீக்குகின்றோமா…?
நண்பன் என்று தான் முதலில் பழகினோம். அவர்கள் வாழ வேண்டும் என்று எண்ணினோம். ஆனால் சந்தர்ப்பம் வெறுக்கும் உணர்வுகள் வளர்ந்து விடுகின்றது. இருவருக்குள்ளும் பதிவான பின் இருவரையுமே அது வீழ்த்துகின்றது.
இப்படி நம்மை அறியாமலே நமக்குள் வரும் பகைமைகளை நீக்க வேண்டும் என்று தான் சாஸ்திரங்கள் கூறுகின்றது
வினையெல்லாம் தீர்ப்பவனே… விநாயகனே ஆதி முதல்வனே… ஓம் என்ற பிரணவத்திற்கு உரியவனே…! என்று பாடல்களைப் பாடுகின்றோம் புகழ் பாடுகின்றோம்… பொருளைத் தேடுகின்றோம்…!
1.அகம் காண அறிவின் தன்மை நாம் தேடுவதே இல்லை
2.அகம் காட்டும் அறிவினை அகத்திற்குள் சேர்த்து… அந்த அறிவினை நாம் தேடுவதில்லை
3.அகத்திற்குள் அந்த உணர்வின் அறிவு இருந்தால் தான் பொருளின் உண்மையின் உணர்வை (மெய்ப்பொருள்) நாம் அறிய முடியும்.
நமக்குள் தெளிந்திடும் அறிவை ஊட்டிய அருள் ஞானிகள் உணர்வை வினையாகச் சேர்க்க வேண்டும். இது தான் மகரிஷிகள் காட்டிய உண்மை நிலை. சாஸ்திரங்களில் கூறப்பட்ட உண்மைகளும் இது தான்.
பேரானந்தப் பெரு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகள் அனைவரும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்… அதை வினையாக மாற்ற வேண்டும்.
1.என்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் மகரிஷிகளின் அருள் உணர்வு கிடைக்க வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
கோவிலில் இதைக் காட்டி இருந்தால் அதை நாம் அவமதிக்கக் கூடாது. ஞானிகள் காட்டிய முறைப்படி இதை எண்ண வேண்டும். ஆலயங்களுக்குச் சென்றால் அந்த அருள் ஞானிகள் உணர்வுகளை வளர்க்க வேண்டும்.