வழிபட வேண்டிய தெய்வத்தின் சக்தி

வழிபட வேண்டிய தெய்வத்தின் சக்தி

 

1.ஓம் ஈஸ்வரா – உயிர்…!
2.குருதேவா – இந்த உடலுக்குக் குருவாக நின்று இத்தனை பெரிய மனித உடலாக உருவாக்கியது
3.ஓ…ம் ஈஸ்வரா குருதேவா… என்று சொன்னால் யாரையோ குருநாதர் சொல்கிறார்… “கடவுளைச் சொல்கிறார்…” என்று சிலர் நினைப்பார்கள்.

நான் முருகனை வழிபடுகின்றேன்… இவர் என்ன ஈஸ்வரனைச் சொல்கின்றார். நான் எப்படி ஈஸ்வரனை வணங்குவது…? என்று சில பேர் நினைப்பார்கள்.

பெருமாளை நான் வழிபட்டுக் கொண்டிருக்கின்றேன். ஈஸ்வரன் என்று சொல்கிறார்கள்… நான் ஈசனை எப்படிக் கும்பிடுவது…?

பராசக்தியை நான் உபவாசம் இருந்து கொண்டிருக்கின்றேன் ஈஸ்வரனை எப்படிக் கும்பிடுவது…? என்று நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

ஐயப்பனை நாங்கள் வணங்குகிறோம், ஓம் ஈஸ்வரா என்று எப்படி நாங்கள் வணங்குவது…? ஐயப்பன் கோபித்துக் கொள்வாரோ…? என்று நினைப்பவர்களும் உண்டு.

ஐயப்பன் ஆனாலும் சரி பராசக்தி ஆனாலும் சரி காளி ஆனாலும் சரி மாரியம்மன் ஆனாலும் சரி… ஒவ்வொருவரும் அவரவர்கள் வணங்கிக் கொண்ட நிலைகள் தான்.

உதாரணமாக… நீங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றீர்கள். “ஐயோ இப்படி இருக்கின்றீர்களே…” என்று நான் கேட்டால் அந்த வேதனை எனக்குள் மாறி (மாரி) என்னை வேதனைப்படச் செய்கின்றது.

ஒரு பிள்ளை நோயால் கடும் வேதனைப்படுகின்றது…! அதை எண்ணி எடுத்தால்… அது மாறி… தாயாக (மாரித் தாயாக) எனக்குள் வருகிறது. இதை நினைவுபடுத்துவதற்குத் தான் திரும்பும் பக்கமெல்லாம் மாரியம்மனை வைத்துக் காட்டி உள்ளார்கள்.

அதை யாரும் நினைப்பதில்லை…!

மாரியாத்தா…!
1.என்னை இப்படி எல்லாம் பேசுகின்றார்களே என்று வேதனையாக நினைக்கின்றேன்… அந்த வேதனை எனக்குள் வருகின்றது…
2.அடுத்து அதற்குண்டான நோயும் வருகிறது… உன்னை நான் வேண்டினேனே எனக்கு இப்படி ஆகிவிட்டதே…!

அதே போன்று யாராவது திட்டி பேசிக் கொண்டிருந்தால் அதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

அந்த வேகமான உணர்வு “பாவிகள்… இப்படிப் பேசுகிறார்கள் பார்…!” என்று எண்ணினால் போதும். உடலில் இடுப்பு கை கால் எல்லாம் வலிக்க ஆரம்பிக்கும்.

சண்டை போடுபவர்களைச் சிலர் அடிக்கடி உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் மறு நாள் பார்த்தால் இடுப்பு வலிக்கின்றது கை வலிக்கின்றது கழுத்து வலிக்கின்றது என்று சொல்வார்கள்.

தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர்களையும் தொல்லைப்படுபவர்களையும் இம்சைப்படுத்தியவர்களையும் இம்சைப்பட்டவர்களையும் உற்றுப் பார்த்து
1.பாவம் அவர்கள் சும்மா தான் இருந்தார்கள்
2.அவர்களைத் தொல்லைப்படுத்துகின்றார்கள்… இவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…? என்று எடுத்துக் கொண்டால்
3.அந்த உணர்வுகள் எல்லாம் உடலில் “வலியாக” வந்து சேர்ந்து விடுகிறது.

ஆக நல்லதை எண்ணினாலும் பிறர் செய்யும் குறைகளை எண்ணி “பாவிகள் உருப்படுவார்களா…” என்று வேதனையைத் தான் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.

கடைசியில் என்ன சொல்வார்கள்…? நான் ஊருக்கே நல்லது செய்கின்றேன்… என்னை ஆண்டவன் சோதிக்கிறான் பார்…! இடுப்பு வலிக்கிறது பிடரி வலிக்கிறது தலை வலிக்கிறது…!

ஏனென்றால் இது எல்லாம் நமக்குத் தெரியாமலேயே அந்த விஷமான உணர்வுகள் உடலுக்குள் சேர்ந்து விடுகிறது.

தன்னுடைய நண்பர் வந்தால் போதும். இத்தனையும் சொல்லி இப்படியானது அப்படியானது என்று அந்த உருப்படாத உணர்வுகளை எல்லாம் எடுத்து… “அதற்கெல்லாம் நிச்சயம் அவர்கள் அனுபவிப்பார்கள்…” என்று சொல்ல ஆரம்பிப்பார்கள்.

இந்த உணர்வு வேகமாக இழுத்து உடலுக்குள் வந்த பின் எல்லா விதமான வலியும் வந்துவிடும்
1.நல்லதைத்தான் நான் பேசுகின்றேன்… மாரியம்மனைக் கும்பிடாத நாளில்லை
2.ஆனால் எனக்கு இப்படி வந்து விட்டது…! என்பார்கள்.

இதற்குப் பெயர்தான் மாரி(றி). அதாவது
1.நீ எதை நினைக்கின்றாயோ (அழுத்தமாக) உனக்குள் அந்தச் சக்தி மாறி வலியாக வருகின்றது என்று
2.தெளிவாகவே ஞானிகள் நமக்கு ஒவ்வொரு இடத்திலும் இதை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

நல்லது பேசுவதாகத் தான் நாம் நினைத்துக் கொள்கின்றோமே தவிர நல்லதைக் காத்து அந்த நல்லதை வளர்க்கும் நிலை இல்லை.

பெண்கள் பெரும்பகுதி இப்படித்தான்.. எங்கள் வீட்டில் இப்படி… பக்கத்து வீட்டில் இப்படி… உறவினர்கள் வீட்டில் இப்படி…! என்று சங்கடப்பட்டது வேதனைப்பட்டது எல்லாம் திண்ணைப் பேச்சாக வந்துவிடும்.

அதிலிருந்து மீள முடியாத நிலையாகி பல விதமான குறைகளை வளர்த்து வேதனைகளைத் தான் வளர்த்துக் கொள்கின்றார்.

ஆனால் மாரியம்மனுக்கு அக்கினிச் சட்டியைப் போட்டுக் காண்பித்திருக்கின்றார்கள். ஏன்…?

உங்கள் மனது பாலைப் போன்று இருக்கின்றது. ஆனால் “ஐயோ… இப்படி இருக்கின்றதே…!” என்று வேதனைப்பட்டீர்கள். அப்போது விஷம் உள்ளே வந்து விட்டது. உங்களை அது ஆட்டிப் படைக்கின்றது. கை கால் குடைச்சல் எல்லாம் வருகிறது.

ஆனால் விஷத்தை நெருப்பிலே போட்டால் என்ன ஆகும்…? அது சாகும் (ஓடுங்கிவிடும்).

அதைப் போன்று தான் ஞானிகளும் மகரிஷிகளும் நஞ்சைப் பொசுக்கிப் பழகியவர்கள்… அவர்கள் நெருப்புக்கு ஒப்பானவர்கள். அந்தச் சக்திகள் அனைத்தும் காற்றில் இருக்கின்றது.

அதை எடுக்க வேண்டும் என்பதற்குத் தான் மாரியம்மன் கோவிலில் திறந்த வெளியில் அக்கினிச் சட்டியை வைத்துள்ளார்கள்.

அதை நாம் கண்ணுற்றுப் பார்த்தவுடனே எதை எண்ண வேண்டும்…?

நான் நல்லதைச் செய்தேன். ஆனாலும் அதற்குள்
1.என்னை அறியாது உட்புகுந்த தீமைகள் அகல வேண்டும்
2.அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்
3.என் உடல் முழுவதும் அந்த சக்தி படர வேண்டும் என்று அதை எடுத்து
4.வேதனையைப் அதை பொசுக்க வேண்டும் என்று ஞானிகள் நமக்குக் காட்டி உள்ளார்கள்.

அந்தச் சக்தியைப் பெறச் செய்வதற்குத் தான் உயிர் வழி எடுப்பதற்கு ஓம் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணும்படி சொல்கின்றோம்.

ஆனால் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் போது “என்னை இப்படிப் பேசினாளே… தாயே நீயே கேள்…! அவள் உருப்படுவாளா…?” என்று கேட்கப்படும் பொழுது
1.நான் தான் முதலில் கெடுகின்றேன்… அது தெரிவதில்லை.
2.உருப்படுவாளா…? என்று சொல்லும் போது முதலில் நான் கெட்டுத் தான் என்னிடமிருந்து அந்தச் சொல் அங்கே போகின்றது
3.இங்கே கெடுக்கக்கூடிய சக்தியைப் படைத்த பிற்பாடு தான் அங்கே செல்கின்றது.

எதைச் சொன்னாலும் பேசினாலும் கேட்டாலும் நினைத்தாலும் படைக்கக் கூடிய பிரம்மமாக நமது உயிர் இருக்கின்றது. இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான் ஞானிகள் காட்டிய வழியில் ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.நெருப்பு என்ற நிலைகள் கொண்டு அதிலே உயர்ந்த சக்திகளைப் போட்டுப் படைக்க வேண்டும் என்று உணர்த்துகிறோம்
2.அந்த ஈசன் நமக்குள் தான் இருக்கின்றான் நெருப்பாக…! அவனுடன் ஒன்றி அவனாக நாம் ஆக வேண்டும்.

Leave a Reply