மனப்போரை எல்லாம் “குருக்ஷேத்திரப் போராக” நாம் நடத்த வேண்டும்

மனப்போரை எல்லாம் “குருக்ஷேத்திரப் போராக” நாம் நடத்த வேண்டும்

 

ஞானிகள் மகரிஷிகள் அனைவருமே நெருப்புக்குச் சமமானவர்கள்… தீமையைச் சுட்டுப் பொசுக்கக் கூடிய சக்தி பெற்றவர்கள். அந்தச் சக்தி நமக்கு முன் இந்தக் காற்றிலே இருக்கின்றது.

நம்மை அறியாது வரக்கூடிய தீமைகளை நீக்குவதற்கு அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… மெய் ஒளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று எடுத்து நமக்குள் அந்தத் தீமைகளைப் பொசுக்கிப் பழகுதல் வேண்டும்.

குருக்ஷேத்திரப் போர்…! குரு…! இந்த உடலில் இருக்கக்கூடிய அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது.

நான் பேசுகின்றேன்; நீங்கள் திட்டுகிறீர்கள்; மற்றதைப் பார்க்கின்றேன்; எல்லாவற்றையும் சுவாசித்து… உயிரான குருவிடம் சென்றுதான் அது வேலை செய்கின்றது… உயிர் அதை எல்லாம் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது.

உதாரணமாக… வேதனை வருகிறது என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.வேதனை உருவாக்கக்கூடியதைக் காதிலே கேட்டு…
2.அந்த உணர்ச்சிகளைச் தூண்டி சுவாசித்து… உயிரான குருவிடம் சென்ற பின்… (அப்போது மனப் போராகிறது)
3.ஈஸ்வரா…..…! என்று உயிரை எண்ணி (மனப் போரை நாம் குருக்ஷேத்திரப் போராக்க வேண்டும்)
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
5.குருக்ஷேத்திரப் போரில் அவனிடம் (உயிரிடம்) ஒப்படைத்து விட்டால்
6.மற்றவர்கள் திட்டியது… கேலி பேசியது… வேதனைப்படச் செய்தது… உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகிறது.

அதாவது குருவிடம் (உயிரிடம்) சொல்லி தனக்குள் கெட்டது புகாமல் தடுக்கச் செய்வதற்குத் தான் “குருக்ஷேத்திரப் போர்…” என்று நமக்குக் காண்பித்துள்ளார்கள்.

நம்மை ஒருவன் திட்டிக் கொண்டே இருக்கின்றான் என்று அதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும். சுவாசித்ததும் ஜிர்.. ஜிர்..ர்ர்.. ஜிர்.. என்று இயக்கிக் கொண்டிருக்கும் (நமக்குள் இரைச்சலாகிறது).

அந்த உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி தடுக்க வேண்டும் என்று சொன்னால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
1.ஈஸ்வரா…….! என்று ஓங்கி (சொல்லி) அந்த ஓங்காரம்… வானை நோக்கி ஏகி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் இங்கே குருவிடம் (புருவ மத்தியில்) வந்து விடுகிறது.
3.அப்போது சாதாரண மனிதன் பேசிய (திட்டியதை) உணர்வைச் சுட்டுப் பொசுக்கி விடுகிறது.

இத்தகைய பேருண்மைகளைக் காட்டிய மெய் ஞானியின் உணர்வை எண்ணி அதைப் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அவனிடம் வேண்ட வேண்டும்.

ஏனென்றால் அவன் தான் சிருஷ்டிக்கின்றான்…!

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும். என்னைத் திட்டியவர்களுக்கு என் சொல் நல்லதாகப் பட வேண்டும்… என் பார்வை அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும்… என் சொல் அவர்களுக்கு இனிமை ஊட்ட வேண்டும்… என்னைப் பார்க்கும் பொழுது நல்ல எண்ணங்கள் வர வேண்டும்.

இப்படிச் செய்தால் குருக்ஷேத்திரப் போர்… தீமைகள் நமக்குள் வராதபடி தடுக்கப்படுகின்றது.

Leave a Reply