தியானம் செய்ய முடியவில்லை… செய்தாலும் சக்தி பெற முடியவில்லை… என்பவர்களுக்கு ஒரு பயிற்சி

தியானம் செய்ய முடியவில்லை… செய்தாலும் சக்தி பெற முடியவில்லை… என்பவர்களுக்கு ஒரு பயிற்சி

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் தியானித்து அந்தச் சக்திகளை பெற்றுக் கொண்டே வருகின்றோம்.

1.புதிதாக இந்தத் தியானம் செய்வோரும் சரி…
2.ஏற்கனவே செய்து பழகியோரும் சரி…
3.அதை எவ்வாறு பெற வேண்டும்…? என்றும்
4.அதை எப்படிப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்…? என்பதையும் உணர்ந்து கொள்வது நல்லது.

தியானத்தில் எடுக்கும் பொழுது துருவ நட்சத்திரம் என்று எண்ணினாலும் அது துருவ நட்சத்திரம் என்று தெரியாது. ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகள் நம் உடலுக்குள் மோதும் பொழுது ஒரு வெளிச்சம் வரும்.
2.அங்கே மட்டுமல்ல… நம் உடலுக்குள்ளும் ஒரு விதமான அலைகள் வரும்
3.உடலுக்குள் அந்த உணர்வலைகள் அலை அலையாகப் படர்ந்து அது வெளியேறும் (சீராகத் தியானம் செய்வோர் இதைப் பார்த்திருக்கலாம்)

ஏனென்றால் புதிதாக இருப்பதால் சிலர் இதைப் பார்க்க முடியவில்லை அல்லது தெரிய முடியவில்லை என்றாலும் தொடர்ந்து எடுத்துப் பழகுதல் வேண்டும்.

காரணம்… இந்த வாழ்க்கையில் நாம் ஏற்கனவே எடுத்துக் கொண்ட சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை கோபம் ஆத்திரம் குரோதம் பயம் அதிகமாக நமக்குள் பதிவாகி இருக்கின்றது.

இதை நாம் அமைதிப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஆரம்பத்திலே நாம் எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தாலும்
1.அந்த உணர்வுகள் நம் ஆன்மாவிலே முன்னாடி இருப்பதால்
2.அதைப் பிளந்து விட்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சுவாசித்து எடுக்க முடியாது.

தியானத்தில் கண்களை மூடி இருக்கும் போது அப்போது என்ன நடக்கிறது…?

யார் யாரிடம் சண்டையிட்டோமோ அல்லது கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகள் ஏற்பட்டதோ… குடும்பத்தில் பையன் சொன்னபடி கேட்கவில்லை அவன் சரியாகப் படிப்பதில்லை ஏதாவது சொன்னால் அவன் அடிக்கடி முறைத்துப் பார்க்கின்றான்… திட்டுகிறான்… சாபமிடுகின்றான்…! என்று இது போன்று எத்தனையோ உணர்வுகள் வரும்.

என்னால் தியானத்தில் அமர முடியவில்லை… ஒருநிலைப்படுத்த முடியவில்லை (CONCENTRATION) என்ற நிலை வரும் இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும் அல்லவா.

அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுதெல்லாம்
1.உடனடியாக கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்த வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி
3.எங்கள் உடல் முழுவதும் அது படர்ந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
4.கண்களைத் திறந்து இப்படி எடுத்துச் செலுத்தி வலுப்பெற்ற பின் குறுக்கே வரும் சங்கட அலைகளை மற்ற நினைவுகளை விலக்கிச் செல்லும்.
5.அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அமைதி கொண்டு நாம் பெற முடியும்.

ஆனால் அதே சமயத்தில் சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த சங்கடமும் மற்ற நிலைகளும் குறுக்கே வந்து கவரும். மீண்டும் அவ்வாறு சிந்தனை இல்லாது வந்தாலும் “உடனே கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்த வேண்டும்…!”

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏங்கிச் சுவாசித்து எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்… எங்கக் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று இந்த உணர்வுகளைச் சேர்த்து அடிக்கடி சுத்தப்படுத்திக் கொண்டு வந்தால்
1.நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கும் சிறுகச் சிறுக இந்த வலு ஏற்றப்பட்டு
2.தீமை வராதபடி… பிற உணர்வுகள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

சோப்புப் போட்டு துணியில் உள்ள அழுக்கை நீக்குவது போன்று… ஒரு தடவை செய்து சரியாக வரவில்லை என்றால் இரண்டாவது தடவை மீண்டும் அந்தச் சோப்பைப் போட்டு நீக்குவது போல்… ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் ஆன்மாவை அது துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

இது தான் தியானப் பயிற்சி…!

தியானம் இருந்தேன்… எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை எங்கே உட்கார்ந்தாலும் எழுந்து செல்லும்படி செய்கின்றது எனக்கு ஒரு எதிரி இருக்கின்றான் அவனை நினைத்தவுடன் தியானம் செய்ய முடியவில்லை என்று அதையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

அதே போல் வியாபாரத்திலோ மற்ற வகைகளிலோ கொடுக்கல் வாங்கலில் சண்டையிட்டிருந்தால் நினைவுகளைத் தூண்டி “அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும்…!” என்றெல்லாம் சிலருக்கு தியானத்தில் அமரும் பொழுது அந்த உணர்வுகள் வரும்.

அப்பொழுதெல்லாம் உடனடியாகக் கண்களைத் திறந்து “ஈஸ்வரா…!” என்று ஊயிரை எண்ணி நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
1.இப்படிச் செலுத்தினால் முன் நின்று சுவாசித்து (துருவ நட்சத்திரத்தின் சக்தியை)
2.உடலில் அந்த தீமை செய்யும் உணர்ச்சிகளை மாற்றிடும் சக்தி நமக்குள் உருவாகின்றது.

பின்.. யார் நமக்குத் தொல்லை கொடுத்தார்களோ… அறியாது செய்யும் தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்… பிறருக்கு நல்லது செய்யும் அந்த எண்ணங்கள் அவர்களுக்குள் தோற்றுவிக்க வேண்டும்…! என்று எண்ண வேண்டும்.

பையன் சொன்னபடி கேட்கவில்லை எதிர்த்துப் பேசுகிறான் என்றால் அந்த உணர்வுகள் தியானத்தை எடுக்க விடாதபடி தடுக்கும்.

அந்த நேரத்தில் உடனே கண்களைத் திறந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று ஏங்கிவிட்டு… என் பையன் உடலில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெற வேண்டும்… சிந்திக்கக்கூடிய ஆற்றல் வரவேண்டும்… உயர்ந்த பண்புகள் வளர வேண்டும் என்று இந்த உணர்வை அங்கே “அவன் மீது பாய்ச்ச வேண்டும்….”

இப்படி எண்ணி எடுத்தால் அவன் உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க முடியும். அதே சமயத்தில் அவனைப் பற்றி உயர்ந்த எண்ணங்களைச் சிந்திக்கும் ஆற்றல் நமக்குள் வலுவான நிலைகளாக உருவாகிறது.

இப்படி எடுத்துப் பழகினால் தான் “தியானத்தில் அந்தச் சக்தி நமக்குள் வளர்ந்து கொண்டே வரும்…”

எடுத்தவுடனே முழுமையாக அந்தச் சக்தியைக் கொண்டு வரமுடியாது.

உடலில் எத்தனையோ வகையான உணர்வுகள் உடலுக்குள் சுழன்று கொண்டிருப்பதால் அதை மாற்றிட
1.கண்களைத் திறந்து மீண்டும் மூடி
2.திரும்பக் கண்களைத் திறந்து மூடி…
3.இப்படி நாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுக்கும் ஒரு பழக்கமாக
4.துருவ நட்சத்திரத்தினை இணைத்துக் கலவையாக மாற்றி
5.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுக்கக்கூடிய ஒரு பயிற்சியாக நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply